என் மலர்tooltip icon

    இந்தியா

    என்னை காட்டுக்குள் இழுத்துச் சென்றார்கள்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி வாக்குமூலம்
    X

    "என்னை காட்டுக்குள் இழுத்துச் சென்றார்கள்.." பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி வாக்குமூலம்

    • அந்தக் கும்பலில் இருந்த மூவர் எங்களைத் துரத்தி வந்து, என்னைப் பிடித்துக் காட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.
    • பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது.

    மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

    தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த மாணவி, அந்த இரவில் நடந்த பயங்கரமான சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மாணவி கூறுகையில், "அவர்கள் தங்கள் வாகனத்தை விட்டுவிட்டு எங்கள் நோக்கி வருவதை நாங்கள் கவனித்தோம். உடனே நாங்கள் காட்டுப் பகுதி நோக்கி ஓட ஆரம்பித்தோம். அந்தக் கும்பலில் இருந்த மூவர் எங்களைத் துரத்தி வந்து, என்னைப் பிடித்துக் காட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.

    அவர்கள் எனது தொலைபேசியைப் பறித்துக்கொண்டு, எனது நண்பரைத் திரும்ப வருமாறு அழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அவர் வராதபோது, என்னைத் தரையில் படுக்கச் சொல்லி வற்புறுத்தினர். நான் கத்தி கூச்சலிட்டபோது, நான் சத்தம் போட்டால் மேலும் பலரை அழைத்து வந்து இதையே செய்ய வைப்போம் என்று மிரட்டினர்" என்று தெரிவித்துள்ளார்.

    காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாகத் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பாதுகாவலர், மருத்துவமனை ஊழியர் ஒருவர், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவர் மற்றும் ஒரு இளைஞர் அடங்குவர்.

    மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவங்களின் வரிசையைச் சரிபார்க்க, சந்தேகப்படும் அனைத்துக் குற்றவாளிகளையும் கல்லூரிக்கு அருகிலுள்ள சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கிப் பார்க்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், இரவு நேரத்தில் மாணவிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

    இதற்கு பதிலளித்த பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, "அவர் (மம்தா பானர்ஜி) ஒரு பெண்மணி. அப்படியிருக்கையில், எப்படி இவ்வளவு பொறுப்பற்ற கருத்தைத் தெரிவிக்க முடியும்? பெண்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் உட்கார வேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருப்பது போல் உள்ளது.

    என் மகளை ஒடிசாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எங்களுக்கு அவளது உயிர்தான் முக்கியம். தொழில் அதற்குப் பிறகுதான்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×