என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கொலைச் சங்கிலி.. காமேனியை வீழ்த்த அமெரிக்காவுக்கு AI உதவியது எப்படி? ஈரான் போரில் ராட்சதனின் வருகை
    X

    கொலைச் சங்கிலி.. காமேனியை வீழ்த்த அமெரிக்காவுக்கு AI உதவியது எப்படி? ஈரான் போரில் ராட்சதனின் வருகை

    • அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.
    • ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை பென்டகன் ரத்து செய்தது.

    நவீன கால போர்கள் வீரர்களின் எண்ணிக்கையை விட, தரவுகளின் வேகத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

    தாக்குதல் நடத்த முதலில் இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். இலக்குகளை தீர்மானிக்க, தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

    தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தின் சாட்டிலைட் புகைப்படங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த தரவுகளில் அடங்கும்.

    ராட்சதனின் வருகை:

    ஏஐ என்ற ராட்சத தொழில்நுட்பம் வரும் வரை இந்த தரவுகளை ஆய்வு செய்வது ராணுவ நிபுணர்களால் செய்யப்பட்டு வந்தது.

    நிபுணர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, தரவுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க மனிதர்களுக்கு நேரம் எடுக்கும். எனவே இலக்கை நிர்ணயித்து தாக்குதல் நடத்துவதும் மிக நீண்ட செயல்முறையாக இருந்து வந்தது.

    ஆனால் ஏஐ ஆயிரக்கணக்கான தரவுகளை நிமிடங்களில் முழுமையாக ஆய்வு செய்து துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. இது எளிதில் இலக்கை தீர்மானிக்க உதவுகிறது.

    போரில் வெற்றி என்பது யார் பலசாலி என்பதை விட யார் வேகமாக செயல்படுகின்றனர் என்பதை பொறுத்தே உள்ளது.

    எனவே ஏஐ மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் இந்த வேகம், போர் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

    அந்த வகையில் மனிதர்கள் முடிவெடுக்கும் முறையிலிருந்து, இயந்திரங்களே மின்னல் வேகத்தில் முடிவெடுத்துத் தாக்கும் புதிய முறைக்கு அமெரிக்கா மாறியுள்ளது.

    கடந்த ஜனவரி அமெரிக்காவின் போர் அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டது.

    ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஏஐ-ஐ முழுமையாகப் புகுத்துவது, நவீன ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி எதிரிகளின் நகர்வுகளைக் கணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றன.

    இந்த ஏஐ பலத்தை பயன்படுத்தி ஏற்கனவே 2 நாடுகளின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது நவீன போர் முறையில் ஏஐ உடைய முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளது.

    ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்

    கடந்த ஜனவரி 3 ஆம் தேதி இரவு, "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" என்ற பெயரில் வெனிசுலா நாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக நுழைந்தது.

    அந்நாட்டு தலைநகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகைக்கு உள்ளேயே நேரடியாக புகுந்து அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்காவுக்கு நாடுகடத்திச் சென்றது.

    இந்த தாக்குதலுக்கு முன் பல ஆயிரம் மணிநேர ஆடியோ பதிவுகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்து, மதுரோவின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளை கண்டறிந்த அமெரிக்க ராணுவம், அதன் மூலம் தாக்குதலை திட்டமிட்டது பின்னர் தெரியவந்தது.

    ஆபரேஷன் எபிக் ஃபியூரி:

    இதேபோல் கடந்த வாரம் சனிக்கிழமை, பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    இந்தத் தாக்குதல் வெறும் ஏவுகணைத் தாக்குதல் மட்டுமல்ல, இது உலகின் முதல் ஏஐ-ஆல் வழிநடத்தப்பட்ட போர்முறை என்று அழைக்கப்படுகிறது.

    அண்மையில் ராணுவத்துக்கு தங்களின் முழு ஏஐ அணுகலையும் வழங்க முடியாது என மறுத்ததால் ஆந்திரோபிக் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ரத்து செய்தது.

    இந்நிலையில் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ உதவியுடனே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    வழக்கமாக ராணுவ அதிகாரிகள் பல வாரங்கள் செய்ய வேண்டிய வேலையை கிளாட் ஏஐ வெறும் சில மணிநேரங்களில் செய்து முடித்தது.

    செயற்கைக்கோள் படங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் என பல கோடி தகவல்களை ஏஐ சில நிமிடங்களில் அலசி ஆராய்ந்தது.

    காமேனி எங்கே இருக்கிறார், அவரது பாதுகாப்பு வளையம் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, எங்கே தாக்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை ராணுவ அதிகாரிகளுக்கு ஏஐ பரிந்துரைத்தது.

    தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை கணினி மூலம் ஒத்திகை பார்த்து ஏஐ சொல்லியுள்ளது.

    கொலைச் சங்கிலி

    ராணுவத்தில் கொலைச் சங்கிலி, அதாவது 'Kill chain' என்ற ஒரு வார்த்தை பிரயோகம் உண்டு. ஓர் இலக்கைக் கண்டுபிடித்து அதைத் தாக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே Kill chain என்று அழைக்கப்படும்.

    மனிதர்கள் தரவுகளை கையாண்ட வரை இதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும்.

    மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் மூலம் கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் தரவுகள் ப்ராசஸ் செய்யப்படுவதால், இந்த முடிவெடுக்கும் நேரம் வெறும் நிமிடங்களாகக் குறைந்துவிட்டது.

    இதனால் எதிரிகள் தப்பிச் செல்லும் முன்பே அமெரிக்கப் படைகளால் மின்னல் வேகத்தில் முடிவெடுத்து தாக்க முடிகிறது.

    160 சிறுமிகள் புதைக்கப்பட்ட இடம்

    160 சிறுமிகள்:

    அதேநேரம் உயிரைப் பறிக்கும் முடிவுகளை எடுக்கும்போது, மனிதர்களுக்குப் பதில் இயந்திரங்களை அதிகம் நம்புவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஏஐ தவறான ஒரு இடத்தைக் குறிவைத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளது.

    அமெரிக்க தாக்குதலில் தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதும் இதில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டதும் இதற்கு உதாரணமாகும்.

    இனிவரும் காலங்களில் போர்கள் ஆயுதங்களால் மட்டுமின்றி, ஏஐ தொழில்நுட்பத்தாலும், அல்காரிதம் எனப்படும் கணினி சூத்திரங்களாலும் தான் தீர்மானிக்கப்படும் என்பதை இந்த போர் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

    Next Story
    ×