search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks factory"

    • தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகினர்.

    பாங்காக்:

    சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 ஊழியர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது.
    • பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

     சிவகாசி:

    தமிழகத்தில் பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்றது சிவகாசி. இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    இங்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது . இது பற்றிய விவரம் வருமாறு;

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரவு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் இன்று கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன.

    சிவகாசி:

    பட்டாசு தொழிலுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்ட 1070 பட்டாசு ஆலைகளும், மூடப்பட்டதால், சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் வலியுறுத்தின.

    பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இருப்பினும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் மூடப்பட்ட ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் நலனுக்காகவும், 2 நாட்கள் கஞ்சி தொட்டியை திறக்க சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இன்று கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது. என்.துரைச்சாமிபுரம், துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, சல்வார்பட்டி, மீனாட்சிபுரம், வெற்றிலையூரணி, விஜயகரி கல்குளம், ராமலிங்காபுரம் உள்பட 20 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்தனர்.

    இதேபோல் நாளை (20-ந் தேதி) செங்கிமலைப்பட்டி, ஆலாவூரணி உள்பட 40 இடங்களில் கஞ்சித்தொட்டி திறக்கப்படுகிறது.

    பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
    விருதுநகர்:

    பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க முடியாது, பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிமன்ற விதிகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வழியில்லை என்பதால் பட்டாசு ஆலைகளை காலவரையன்றி மூடுவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையை மாற்ற வேண்டியும், மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

    அதன்படி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், கீழராஜகுலராமன், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆமத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வச்சக்காரப்பட்டி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி. யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்கள் 6 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் சிவகாசி, மாரநேரி, திருத்தங்கல், தாயில்பட்டி, கன்னிசேரி உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இந்த மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். #tamilnews
    சுப்ரீம்கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகளால் சிவகாசி பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். #SC #SivakasiFireworks
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) பொதுச்செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.

    பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும்.

    ஒலி அளவு வரையறைக்கு உட்பட்டுதான் சரவெடிகளை தயாரித்து வந்தோம். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு சரவெடிக்கு தடை விதித்துள்ளது.

    பசுமை பட்டாசு என்ன? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தான் எங்களுக்கு கிடைக்கும்.

    அதன்பின்னர் தான் பசுமை பட்டாசு குறித்து முடிவு செய்யப்படும். 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.



    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலைகளை நாங்களே முன்வந்து மூட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து அரசுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளோம்.

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த தொழில் காப்பாற்றப்படும். எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த தீபாவளி தினத்தன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2,000-க்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். நேரக்கட்டுப்பாடு காரணமாக இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்த நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 3 வருடங்களில் பட்டாசு தொடர்பான வழக்குக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

    மத்திய அரசு இந்த தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதுதொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முடிவை தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த முடிவால் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். #SC #SivakasiFireworks
    ×