search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers struggle"

    • பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நகர பேருந்தையும் சிறைபிடித்தனர்

    கரூர்:

    நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்து, பேருந்தை சிறைப்பிடித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கரூர் மாவட்டம் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அத்தொழிலாளர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுவதாக்கூறி பழையஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தை புதுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் குளித்தலையில் இருந்து பழையஜெயங்கொண்டம் வந்த அரசு நகரப்பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சதுர அடியை கணக்கிட்டு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் அதில் முறைகேடு எதுவும் இல்லை. சம்பளத்தை குறைக்கவில்லை எனக்கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


    சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாமரைக்குளம்:

    அரியலூரில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலையில் 734 நேரடிபணியாளர்கள் மற்றும் 750 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான பணியாளர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் உயர்த்தபடாமல் அதே ஊதியம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய அரசு தினக்கூலி தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தினை நிர்ணயித்து அதனையே வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தினை அரியலூர் அரசு சிமெண்ட் தினக்கூலிதொழிலாளர்கள் நிர்வாகத்தினரிடம் கடந்த சிலஆண்டுகளாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலை நிர்வாகம் தரப்பில் பழைய ஊதியமே வழங்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் ஆலையின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அறிந்ததும் ஆலை நிர்வாகத்தினர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்குவதாக உத்திராவதம் அளித்தால் தான் மீண்டும் பணிக்கு திரும்புவோம் என தெரிவித்து தொடர்ந்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
    விருதுநகர்:

    பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க முடியாது, பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிமன்ற விதிகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வழியில்லை என்பதால் பட்டாசு ஆலைகளை காலவரையன்றி மூடுவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையை மாற்ற வேண்டியும், மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

    அதன்படி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், கீழராஜகுலராமன், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆமத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வச்சக்காரப்பட்டி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி. யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்கள் 6 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் சிவகாசி, மாரநேரி, திருத்தங்கல், தாயில்பட்டி, கன்னிசேரி உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இந்த மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். #tamilnews
    கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #FireCrackers
    விருதுநகர்:

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கடுமையான விதிகளால் பட்டாசு தொழில் நலிவடையும் சூழல் ஏற்பட்டது. விதிகளை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சிவகாசியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டாசு ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு அதிபர்கள், தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    சிவகாசி பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம், பட்டாசு உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஊழியர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து வேன், கார் மூலம் விருதுநகருக்கு பேரணியாக வந்தனர்.

    தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூடினர். பின்னர் அவர்கள் அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    சிறிது நேரத்தில் பட்டாசு தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    விருதுநகரில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் திரண்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மேற்பார்வையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    போராட்டம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் எட்டயபுரம் 4 வழிச்சாலைக்கு திருப்பி விடப்பட்டது.

    மதுரையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மண்டேலா நகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக திருப்பி விடப்பட்டது. #FireCrackers #VirudhunagarCollectoroffice
    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக்கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

    பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான், திருவேங்கடம், திருவேங்கடபுரம் ஆகிய கிராமங்களில் பட்டாசு ஆலையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் செயலாளர் ஜெயக்குமார், மாதர்சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Nutritionstaff

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகம் முன்பு நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 113 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து அங்கேயே உண்டு உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதி நாதன், உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

    இன்று 3வதுநாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    இது குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் நிருபரிடம் கூறியதாவது:-

    எந்த அரசாக இருந்தாலும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணப்பயனாக ரூ. 5 லட்சம் வழங்கிடவேண்டும். சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியமாக மாதம் தோறும் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 78 பெண்கள் உள்பட 113 பேர் மீது திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் தனியார் மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் பகுதியில் தனியார் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தொழிற்சங்கம் ஆரம்பித்ததாக தெரிகிறது. இதையடுத்து 2 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கடந்த 21-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ×