search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய போராட்டம்
    X

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய போராட்டம்

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    இது குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் நிருபரிடம் கூறியதாவது:-

    எந்த அரசாக இருந்தாலும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணப்பயனாக ரூ. 5 லட்சம் வழங்கிடவேண்டும். சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியமாக மாதம் தோறும் ரூ. 9 ஆயிரம் வழங்கிட வேண்டும்,

    எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 78 பெண்கள் உள்பட 113 பேர் மீது திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×