என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிவிபத்து"

    • வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
    • குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.

    இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
    • இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    பெர்ன்:

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது.   

    • ரஷியாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை தீப்பிடித்து 3 பெண்கள் பலியாகினர்.
    • இதற்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம்சாட்டியது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது.

    உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதனை தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
    • வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.   

    • தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
    • வெடிவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்தது.

    வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹிஸ்புல்லா நிலைகளை லெபனான் கைப்பற்றி வருகிறது.
    • ஆயுதக் கிடங்கை அப்புறப்படுத்தும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது.

    குறிப்பாக லிடானி ஆற்றுப் பகுதியின் தெற்குப் பகுதியில், ஹிஸ்புல்லா திரும்பிய பகுதியில் பல ஆயுதக் கிடங்குகள் உள்ளன. ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை லெபனான் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. அவ்வாறு தைரே மாகாணத்தில் உள்ள ஜிப்கின் கிராமத்தில் இன்று ஆயுதக் கிடக்கில் உள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தியபோது, திடீரென வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பல் காயம் அடைந்தனர்.

    நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஆதரவு திட்டமான ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாமல் ஆக்கும் திட்டம் மற்றும் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக லெபனான் அமைச்சரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருட இறுதிக்குள் சிறிய நாடானா லெபனானில் நாட்டில், நாட்டின் அமைப்புகள் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான திட்டத்திற்கு தயாராகும்படி ராணுவத்திடம் கேடடுக்கொண்டுள்ளது.

    இதன்படி ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாகும். அதேவேளையில் எல்லையில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு முன்பு, நிராயுதபாணியாகமாட்டோம் என ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
    • முதல் கட்டமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின் குணமடைந்து பணிக்கு திரும்பக்கூடிய அளவுக்கு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும்.

    முதல் கட்டமாக, அரசுத்தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தின்போது 143 பேர் பணியில் இருந்தனர். அதில் 56 பேர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. வேலை செய்தவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை வழக்கம்போல் 8 மணிக்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டது.
    • ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் ஆடி மாத அம்மன் திருவிழாக்களை முன்னிட்டு ஏராளமான ஆர்டர்களின் பேரில் அதிக அளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமாக கோகுலேஷ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் சின்னகாமன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் பெரும்பாலும் பேன்சி ரக பட்டாசுகளே அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தரைச்சக்கரம், மத்தாப்பு, புஸ்வானம், பென்சில் வெடி உள்ளிட்டவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இன்று காலை வழக்கம்போல் 8 மணிக்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டது.

    இதற்காக வெளியூர்களில் இருந்து தொழிலாளர்கள் வேன்களில் அழைத்து வரப்பட்டனர். முதல்கட்டமாக பேன்சிரக பட்டாசு தயாரிப்புக்கு தேவையான மருந்துகளை கலக்கும் பணியை தொழிலாளர்கள் செய்துகொண்டிருந்தனர். சற்று இடைவெளியுடன் கூடிய 5 வெவ்வேறு அறைகளிலும் மருந்து கலக்கும் பணிகள் நடந்தன.

    அப்போது ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக வெடிகளுக்கும் தீ பரவியது. இந்த தீயானது அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதில் அங்கு பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர்.

    அடுத்த ஒருசில விநாடிகளில் அந்த அறைகளிலும் விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகளும் இடிந்து தரைமட்டமானது. ஆனாலும் அங்கிருந்த மருந்து பொருட்கள், வெடிகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்ததால் அருகில்கூட யாராலும் செல்ல முடியவில்லை. பின்னர் இதுபற்றி உடனடியாக சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பெயர், விபரம் வருமாறு:-

    1. மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம்.

    2. ராமசாமிபுரத்தைச் சேர்ந்த வைரமணி.

    3. சூலக்கரையைச் சேர்ந்த லட்சுமி.

    4. அனுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி.

    5. ராமமூர்த்தி

    6. ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி.

    7. ராமஜெயம்

    இந்த 7 தொழிலாளர்களும் உடல் சிதறி பலியானார்கள். இறந்தவர்களின் உடல் பாகங்கள் பல மீட்டர் தூரம் வரை சிதறி கருகிய நிலையில் கிடந்தது. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்டிட இடுப்பாடுகளுக்குள் மேலும் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்றும் தேடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பட்டாசு ஆலை முன்பு அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    • பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர்.

    பீஜிங்:

    சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

    இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×