என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமம் ரத்து
    X

    கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமம் ரத்து

    • உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
    • ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைக்கால் எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த அக்.3-ந்தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு 48.6% டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் முழுமையான விசாரணை, ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×