search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Celebration"

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பசுக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது
    • அனைவருக்கும் அன்னதானம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அப்பகுதியை சேர்ந்த பசுக்களை போஸ்டர் அடித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.

    இதனைதொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து விட்டு பின் பசுக்களுக்கு படையலிட்டனர். ஊர் பொதுமக்கள் சார்பாக அனைத்து பசுக்களுக்கும் பரிசாக கயிர் மற்றும் சலங்கை கொடுக்கப்பட்டு படையலிட்ட சாதம் பசுக்களுக்கு ஊட்டி விடப்பட்டது. பின்பு அங்கு இருந்த பொலி நீரை எடுத்து பசுக்களின் மீது தெளித்து பசுக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளூர் காளைகளை கொண்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

    • கொல்லி மலை பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
    • விழாவையொட்டி வீடு களில் வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டம், பாரம்பரிய கொல்லிமலை கும்மி பாட்டுடன் பெண்கள் நடனம் ஆடினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெரிய கோம்பைபுதூர் பகுதியில் வசிக்கும் கொல்லி மலை பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

    பெண்கள் புத்தாடை அணிந்தும், புதுப்பானையில் பொங்கல் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் சூரியனை வழிபட்டனர். விழாவையொட்டி வீடு களில் வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டம், பாரம்பரிய கொல்லிமலை கும்மி பாட்டுடன் பெண்கள் நடனம் ஆடினர்.

    அப்போது அவர்கள் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பறை இசை முழங்க விழா நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க சார்பில் நகர செயலாளர் ச. இளஞ்செழியன் தலைமையில் காந்தி திடல் மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் அணியினர் குலவையிட்டும், கும்மியடித்தும், பறை இசை முழங்க விழா நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மு. திராவிடமணி, ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், சீனி, நகர நிர்வாகிகள், அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ஜபரூல்லா ஜெயக்குமார் நாகேஷ்வரி மாவட்ட பிரதிநிதிகள் ரசாக், நெடுஞ்செழியன், மணிகண்டன், பொருளாளர் தமிழழகன், பேரூர் செயலாளர் சுப்பிரமணி, நகர் மன்ற தலைவர் பரிமளா, ஒன்றிய அவைதலைவர் கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கடாசலம், பத்மாவதி, மாவட்ட பிரதிநிதிகள் பால்ராஜ் நேச குமார் யூசுப் முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
    • 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள், பழங்கள், கரும்பு கட்டுகள், கிழங்கு வகைகள், மஞ்சள் குலைகள் விற்பனை களைகட்டி உள்ளது.

    கடைவீதிகளில் கூட்டம்

    கடந்த 2 நாட்களாக புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பதற்காக காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக மார்க்கெட்டுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட், டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதுதவிர பொங்கிலிட பானைகள், பனை ஓலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காய்கறி தொகுப்பு

    நாளை பொங்கல் என்பதால் இன்று இறுதி கட்ட விற்பனை சூடுபிடித்தது. மாநகர பகுதியில் பேட்டை, டவுன், தச்சநல்லூர், கே.டி.சி. நகர், பாளை சமாதானபுரம், மேலப்பாளையம் ரவுண்டான உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள், பனை ஓலைகள் மற்றும் கரும்பு கட்டுகள் விற்பனை அதிகமாக இருந்தது. அடுப்புகள், அடுப்பு கட்டிகள், வண்ணம் தீட்டப்பட்ட பானைகளின் விற்பனையும் அதிகரித்தது.

    காய்கறிகளில் முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மொத்தம் மொத்தமாக காய்கறிகள், கரும்பு கட்டுகளை வாங்கி சென்றனர்.

    பனங்கிழங்கு வரத்து குறைவு

    மழை குறைவால் பனங்கிழங்குள் வரத்து குறைந்தது. விற்பனைக்கு வந்த கிழங்குகளும் உயரம் குறைவானதாகவே இருந்தது. 25 கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. கடந்த காலங்களில் 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக ஒரு மஞ்சள் குலை ரூ.5 முதல் ரூ.20 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனையானது. கரும்பு 10 எண்ணம் கொண்ட கட்டுகள் ரூ.300 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.

    பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    பொங்கலையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து சேர்ந்ததால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் புதிய பஸ் நிலையத்திலும் அதிக அளவு பயணிகள் காணப்பட்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்தவர்களை அழைத்து வருவதற்காக பெரும்பாலானோர் கார்களில் சென்றதால் பஸ் மற்றும் ரெயில் நிலைய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர். மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி யால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    ×