search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Market"

    • டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
    • 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள், பழங்கள், கரும்பு கட்டுகள், கிழங்கு வகைகள், மஞ்சள் குலைகள் விற்பனை களைகட்டி உள்ளது.

    கடைவீதிகளில் கூட்டம்

    கடந்த 2 நாட்களாக புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பதற்காக காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக மார்க்கெட்டுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட், டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதுதவிர பொங்கிலிட பானைகள், பனை ஓலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காய்கறி தொகுப்பு

    நாளை பொங்கல் என்பதால் இன்று இறுதி கட்ட விற்பனை சூடுபிடித்தது. மாநகர பகுதியில் பேட்டை, டவுன், தச்சநல்லூர், கே.டி.சி. நகர், பாளை சமாதானபுரம், மேலப்பாளையம் ரவுண்டான உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள், பனை ஓலைகள் மற்றும் கரும்பு கட்டுகள் விற்பனை அதிகமாக இருந்தது. அடுப்புகள், அடுப்பு கட்டிகள், வண்ணம் தீட்டப்பட்ட பானைகளின் விற்பனையும் அதிகரித்தது.

    காய்கறிகளில் முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மொத்தம் மொத்தமாக காய்கறிகள், கரும்பு கட்டுகளை வாங்கி சென்றனர்.

    பனங்கிழங்கு வரத்து குறைவு

    மழை குறைவால் பனங்கிழங்குள் வரத்து குறைந்தது. விற்பனைக்கு வந்த கிழங்குகளும் உயரம் குறைவானதாகவே இருந்தது. 25 கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. கடந்த காலங்களில் 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக ஒரு மஞ்சள் குலை ரூ.5 முதல் ரூ.20 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனையானது. கரும்பு 10 எண்ணம் கொண்ட கட்டுகள் ரூ.300 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.

    பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    பொங்கலையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து சேர்ந்ததால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் புதிய பஸ் நிலையத்திலும் அதிக அளவு பயணிகள் காணப்பட்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்தவர்களை அழைத்து வருவதற்காக பெரும்பாலானோர் கார்களில் சென்றதால் பஸ் மற்றும் ரெயில் நிலைய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர். மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி யால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    ×