என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.

    • திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது.
    • தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே நிகழ்த்தப்பட்டு வருகிறது.

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றப்பட்டது.

    மாட்டு வண்டியில் கொடிமரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் வழிபாடு செய்யப்பட்டு கள்ளத்தி மரம் பகுதியில் கொடியேற்றப்பட்டது

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

    அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

    இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் நேற்று கொடியேற்றப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    • AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.

    செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

    குறிப்பாக AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல்..." என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவில், "AI -ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா? சார்" என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு செல்லூர் ராஜு, "நண்பரே மன்னிக்கவும் தப்புதான்" என்று தெரிவித்துள்ளார்.

    • விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார்.
    • கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதில் இருந்து விலகி, கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விஜய், தி.மு.க. தீய கட்சி, த.வெ.க. தூய்மையான கட்சி என்று பேசுகிறார். த.வெ.க. எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை, எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்று சொல்ல முடியாது.

    குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதுதன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்துடன் இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள். எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் விஜய் உடன் சேர்ந்துள்ளார்கள்.

    விஜய் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இந்தியா முழுவதும் லாட்டரி சீட்டு விற்பவர், அவர் முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு விடுதலை சிறுத்தை கட்சிக்கு சென்றார். அங்கு ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு அங்கிருந்து வந்தார். அவர் அ.தி.மு.க.விற்கு வர முயற்சி செய்தார். ஆனால் அ.தி.மு.க.வில் உடனடியாக பதவி கிடைக்காது. உழைப்பவருக்கான கட்சி இது. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

    இங்கு இருப்பவர்கள் எல்லாம் உழைப்பவர்கள். ஆனால் அங்கு சென்று இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோல்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார். செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் இருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார்.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்த கட்சியில் இருக்கிறார்கள். அது தூய்மை கட்சி இல்லை. கலப்பட கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார்.

    பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார், அதேபோல் பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்த நிர்மல் குமார் அங்கு சென்றுள்ளார். இவ்வாறு எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய்யுடன் வந்துள்ளது. விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்தது.
    • இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ. தேர்வுகளை இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக விண்ணப்பதாரர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்நிலையில் தேர்வு அட்டவணையை மாற்றி அறிவிக்குமாறு இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் (15, 16, 17 ஜனவரி 2026) நாட்களில் இந்திய பட்டய கணக்காளர் கழகம் இடையீட்டு தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது.

    இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை உருவாக்கும் என என்னிடம் முறையீடுகள் வந்தன.

    பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்குமாறு இந்திய பட்டய கணக்காளர் கழக தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள்.
    • நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்

    பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தவெக நிர்வாகி அருண்ராஜ்க்கும் இடையே நீண்டநாட்களாக ஒரு வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்காதது அண்ணாமலை கருத்துக்கூற, அதற்கு அவரை கிண்டலடிக்கும் விதமாக பதில் அளித்தார் அருண்ராஜ். 

    மீண்டும் இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் நடிகருக்கு ஜால்ரா போடுகிறவன் அல்ல, மோடியின் விஷ்வாச நாய் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு மீண்டும் பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் அருண்ராஜ், 

    "எனக்கு அவரைப்பற்றி தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது. குறிப்பாக குரைக்கும் நாய்கள் கிடையாது. நாங்கள் ஆறறிவு கொண்ட மனிதர்கள்; தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள உண்மையான தொண்டர்கள் நாங்கள். தவெக தலைவர் கூறியவாறு தரம் தாழ்ந்து நாங்கள் பேசமாட்டோம். விஜய் இப்போது நடிகர் கிடையாது; அவர் முன்னாள் நடிகர்.

    நடிப்பை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் சேவை செய்யவேண்டும் என வந்திருக்கிறார். ஈரோட்டில் வந்தவர்கள் நடிகரை பார்க்க வரவில்லை. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் சக்தியாக இருக்கக்கூடிய தவெக தலைவரை பார்க்க வந்தனர்" என தெரிவித்துள்ளார். 

    • நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை.
    • பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அலுவலகத்தின் முன்பு இருந்த தெருநாயை வளர்ப்பு பிராணியாக பதிவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    2021-ல் நான் அமைச்சரான சில மாதங்களில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது உடைந்த காலுடன் ஒரு நாயை கண்டேன் (செயலகத்தில் இருந்த பல நாய்களில் அதுவும் ஒன்று). சமீபத்தில் ஒரு விபத்தில் அதன் கால் உடைந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் (அது தவறான தகவல் என்று பின்னர் தெரியவந்தது), அதன் காலைச் சரிசெய்து, அதை மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டு சேர்க்க முடிவு செய்தேன்.

    ஆனால் மருத்துவரிடம் சென்றபோது, அது பல மாதங்களுக்கு முன் நடந்த விபத்து என்றும் உடைந்த கால் தவறான முறையில் கூடிவிட்டதும் தெரியவந்தது. பின்னர் அதற்கான சிகிச்சை சில மாதங்கள் நீடித்தது. நாயின் காலில் ஒரு உலோகத் தகடு மற்றும் திருகுகள் பயன்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி, அதன் காலை சரிசெய்ய ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு (மனிதர்களுக்கான) எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரின் உதவியும் தேவைப்பட்டது!

    அதற்குள் நாங்கள் அந்த நாயுடன் மிகவும் பாசமாகிவிட்டதால், அதை அதன் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்ப மனம் வரவில்லை. அதனால் நாங்கள் அதற்கு 'பீச்சஸ்' என்று பெயரிட்டோம், அது எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டது.  சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, செயலகத்தில் இருந்த நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன... அவை எங்கு கொண்டு செல்லப்பட்டன என்று தெரியவில்லை.

    மறுபுறம் மறுபுறம், சென்னை மாநகராட்சியின் புதிய விதிகளின் கீழ், இப்போது பீச்சஸ் எங்கள் செல்லப் பிராணியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும்.

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா இன்று மாலை 5:30-க்கு சென்னை இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் துவங்கியது. தமிழ்நாடு சுற்றுலாதுறை மற்றும் இந்திய சுற்றுலாதுறை இணைந்து நடத்தும் இந்த நாட்டிய விழா வரும் ஜனவரி 19-வரை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள், கதகளி, ஒடிசி, குச்சிப்புடி, கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நடனங்கள் நடைபெறுகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதனை துவக்கி வைத்தனர்.


    சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலர் க.மணிவாசன், சுற்றுலாதுறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், இணை இயக்குநர் சிவப்பிரியா, மாவட்ட சப்-கலெக்டர், சுற்றுலா அலுவலர் சக்திவேல், நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், முன்னாள் தலைவர் விசுவநாதன், கவுன்சிலர் மோகன்குமார் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்த நாட்டிய விழா தினமும் மாலை-5:30க்கு துவங்கி இரவு-8:30வரை நடைபெறும். 

    • 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.

    'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

    2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.

    நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.

    அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.

    நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும். 

    நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

    ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.

    செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.

    இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ,  அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.

    ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை
    • இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து முஸ்லீம்கள் மட்டும் எவ்வாறு மலைமீது செல்ல அனுமதிக்கப்படலாம் என அக்கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை சந்திக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

    "இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத சட்டவிரோத காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாடு காவல்துறை சட்டவிரோதமானவர்கள் இல்லை என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏன் செயல்படுத்தவில்லை? தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை. நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.

    இந்த மக்களை ஏன் கைதுசெய்ய வேண்டும்? அவர்களுக்கு சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி என்றால், இந்துக்கள் காசி விஸ்வநாதரை சென்று வணங்குவதற்கு ஏன் தடை? இது என்ன ஔரங்கசீப் ஆட்சியா? மு.க. ஸ்டாலின் ஆட்சியா, முகமது ஸ்டாலின் ஆட்சியா? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மு.க.ஸ்டாலின், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் அனைவரும் இந்து விரோதிகள்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, ஹெச். ராஜா மற்றும் பாஜகவை சேர்ந்த மற்ற ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட மக்களை காண உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    • பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.
    • மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை கடந்த 2023 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் ரயில் கடக்கிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.

    ஆனால் இந்த ரயில் பல்வேறு பயணிகள் இறங்கி இடம்மாறும் நிறுத்தமான விருத்தாசலத்தில் நிற்காமல் சென்றுவந்தது. இதனிடையே பயணிகள் பலரும் இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்றுசெல்லவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்நிலையில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ×