என் மலர்
நீங்கள் தேடியது "கவிஞர் வைரமுத்து"
- காசாவின் உலர்ந்த வானத்தில் பெய்யும் தமிழ்நாட்டு மழையாகும்
- மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா
காசா மீது இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காசா இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
காசா இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காசாவில் நிகழும்
இனப்படுகொலைகளுக்கு எதிராகத்
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்படும்
என்பது ஒரு நற்செய்தியாகும்;
நம்பிக்கை தருவதாகும்
காசாவின்
உலர்ந்த வானத்தில் பெய்யும்
தமிழ்நாட்டு மழையாகும்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின்
மனிதாபிமானத்தை
மனம் உள்ளவர்களெல்லாம்
பாராட்டுவார்கள்
காசா ஒரு சிறு பகுதிதான்
41 கி.மீ நீளமும்
10 கி. மீ அகலமும் கொண்ட
ஓர் ஒட்டு நிலம்தான்
ஆனால்,
தண்ணீர் இல்லாத
அந்தப் பாலை நிலத்தில்
ரத்த ஊற்று பீறிடுகிறது
உலகத்தின் கண்களில் விழுந்த
கந்தகத் தூளாக
அது உறுத்திக்கொண்டே இருக்கிறது
முதலில் அந்த மக்கள்
உயிரோடு இருக்க வேண்டும்
இந்தத் தீர்மானம்
சர்வதேசச் சமூகத்தின் மீது
தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்
அன்பென்றும் அக்கறையென்றும்
போற்றப்படும்
தீப்பிடித்த வீட்டில்
ஆளுக்கொரு குடம் தண்ணீர்
அள்ளி இறைப்பதுபோல
அனைத்துக் கட்சிகளும்
இந்தத் தீர்மானத்தை
ஆதரிக்கும் என்று நம்புகிறோம்
இது
உலக சமாதானத்துக்கு
எங்கள் பங்கு
மத்திய கிழக்கை நோக்கி
எங்கள் வெள்ளைப் புறா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம்
- ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
'பொன்மாலைப் பொழுது'
உன் குரலின்
அழகியல் வசீகரம்
'சங்கீத ஜாதிமுல்லை'
கண்ணீரின் திருவிழா
'காதல் ரோஜாவே'
கவிதைக் கதறல்
'வண்ணம்கொண்ட
வெண்ணிலவே'
காதலின் அத்வைதம்
'பனிவிழும் மலர்வனம்'
சிருங்காரச் சிற்பம்
'காதலே என் காதலே'
தோல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார்
- அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக்கொள்ளுங்கள்
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜூலை 13இல்
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று மாலை காலமானார்.
இவரது மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.
இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
- பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
சென்னை எம்ஆர்சி நகரில் வைரமுத்தியம் என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
அங்கு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கத்தில் கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொன்மாலை பொழுதில் தன் திரையிசை வாழ்வை தொடங்கிய வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள்.
இப்படி ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தமிழின் புகழை உலகெல்லாம் கொண்டு சேர்த்த வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.
உலக கவியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் வைரமுத்து என்றே எண்ணத் தோன்றுகிறது.
கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து. வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். வைரமுத்துவுக்கு கவிப்பேரரசர் என பெயரிட்டு அழைத்தவர் கலைஞர்.
இலக்கியத்தின் எல்லா பக்கங்களிலும் நுழைந்து வெற்றியை சாதித்து காட்டியவர் வைரமுத்து.
நமது ஜெகத்ரட்சகன் எம்பி வஞ்சனையில்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடியவர்.
இவ்வாறு கூறினார்.
- பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும்.
- வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கவிஞர் வைரமுத்து அவரது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விரலில் வைத்த கருப்புமை
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்
இவ்வாறு அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார்.
விரலில் வைத்த கருப்புமை
— வைரமுத்து (@Vairamuthu) April 18, 2024
நகத்தைவிட்டு வெளியேறச்
சில வாரங்கள் ஆகும்
பிழையான ஆளைத்
தேர்ந்தெடுத்துவிட்டால்
அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்
சரியான நெறியான
வேட்பாளருக்கு வாக்களியுங்கள்
வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம்#Elections2024
- உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு
- உங்களை வாழ்த்துகிறேன். நானும் மகிழ்கிறேன்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
உங்கள்
அன்னையைப் போலவே
நானும் மகிழ்கிறேன்
இந்த உயர்வு
பிறப்பால் வந்தது என்பதில்
கொஞ்சம் உண்மையும்
உங்கள் உழைப்பால்
வந்தது என்பதில்
நிறைய உண்மையும் இருக்கிறது
பதவி உறுதிமொழி ஏற்கும்
இந்தப் பொன்வேளையில்
காலம் உங்களுக்கு
மூன்று பெரும் பேறுகளை
வழங்கியிருக்கிறது
முதலாவது
உங்கள் இளமை
இரண்டாவது
உங்கள் ஒவ்வோர் அசைவையும்
நெறிப்படுத்தும் தலைமை
மூன்றாவது
உச்சத்தில் இருக்கும்
உங்கள் ஆட்சியின் பெருமை
இந்த மூன்று நேர்மறைகளும்
எதிர்மறை ஆகிவிடாமல்
காத்துக்கொள்ளும் வல்லமை
உங்களுக்கு வாய்த்திருக்கிறது
உங்கள் ஒவ்வோர் நகர்வும்
மக்களை முன்னிறுத்தியே
என்பதை
மக்கள் உணரச் செய்வதே
உங்கள் எதிர்காலம்
என் பாடலைப் பாடிய
ஒரு கலைஞன்
துணை முதல்வராவதை எண்ணி
என் தமிழ் காரணத்தோடு
கர்வம் கொள்கிறது
கலைஞர் வழிகாட்டுவார்
துணை முதல்வராகும் நீங்கள்
இணை முதல்வராய்
வளர வாழ்த்துகிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
- தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என்று கவிஞர் வைரமுத்து கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழையும்
தமிழ் நாட்டையும்
திராவிடக் கருத்தியலையும்
எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்
பல நிகழ்வுகளைக் கண்டும்
காணாமல் போயிருக்கிறோம்
ஆனால்,
தமிழ்த்தாய் வாழ்த்தில்
"தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்"
என்ற உயிர் வாக்கியத்தைத்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து
தவிர்த்ததைக்
காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்
கடந்துபோக மாட்டார்கள்
இருதயக் கூடு எரிகிறது
எவ்வளவுதான்
பொறுமை காப்பது?
இந்தச் செயலுக்குக்
காரணமானவர்கள்
யாராக இருந்தாலும்
தமிழர்கள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார்கள்
"திராவிட" என்ற
சொல்லை நீக்கிவிட்டு
தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?
தமிழ்த்தாய் வாழ்த்தில்
தவிர்ப்பதற்கு மட்டும்
யார் தைரியம் கொடுத்தது?
திராவிடம் என்பது நாடல்ல;
இந்தியாவின்
ஆதி நாகரிகத்தின் குறியீடு
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
இதுபோன்ற இழிவுகள்
தொடர்ந்தால்
மானமுள்ள தமிழர்கள்
தெருவில் இறங்குவார்கள்;
தீமைக்குத் தீயிடுவார்கள்
மறக்க வேண்டாம்
தாய்மொழி காக்கத் தங்கள்
உடலுக்கும் உயிருக்குமே
தீவைத்துக் கொண்டவர்கள்
தமிழர்கள்
அந்த நெருப்பின் மிச்சம்
இன்னும் இருக்கிறது எங்களிடம்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






