என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kavignar Vairamuthu"

    • ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம்
    • ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாசமுள்ள பாட்டுக்காரா!

    நினைவு நாளில் அல்ல

    உன்னை

    நினைக்காத நாளில்லை

    நீ பாடும்போது

    உடனிருந்த நாட்கள்

    வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்

    'பொன்மாலைப் பொழுது'

    உன் குரலின்

    அழகியல் வசீகரம்

    'சங்கீத ஜாதிமுல்லை'

    கண்ணீரின் திருவிழா

    'காதல் ரோஜாவே'

    கவிதைக் கதறல்

    'வண்ணம்கொண்ட

    வெண்ணிலவே'

    காதலின் அத்வைதம்

    'பனிவிழும் மலர்வனம்'

    சிருங்காரச் சிற்பம்

    'காதலே என் காதலே'

    தோல்வியின் கொண்டாட்டம்

    ஒவ்வொரு பாட்டிலும்

    உனக்குள்ளிருந்த நடிகனைக்

    கரைத்துக் குழைத்துப்

    பூசியிருப்பாய்

    உன் வரவால்

    திரைப்பாடல் பூச்சூடிநின்றது

    உன் மறைவால்

    வெள்ளாடை சூடி நிற்கிறது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார்
    • அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக்கொள்ளுங்கள்

    சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜூலை 13இல்

    'வள்ளுவர் மறை

    வைரமுத்து உரை' நூலை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    வெளியிட்ட அதே நாளில்

    ஆளுநர் மாளிகையில்

    ஒரு விழா

    நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்

    மருத்துவர்களுக்கு

    வழங்கப்பட்ட

    நினைவுப் பரிசில்

    944ஆம் திருக்குறள் என்று

    அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்

    இல்லாத குறளை

    யாரோ எழுதியிருக்கிறார்கள்

    அப்படி ஒரு குறளே இல்லை;

    எண்ணும் தவறு

    யாரோ ஒரு

    கற்பனைத் திருவள்ளுவர்

    விற்பனைக் குறளை

    எழுதியிருக்கிறார்

    இது எங்ஙனம் நிகழ்ந்தது?

    ராஜ்பவனில்

    ஒரு திருவள்ளுவர்

    தங்கியுள்ளார் போலும்

    அந்தப்

    போலித் திருவள்ளுவருக்கு

    வேண்டுமானால்

    காவியடித்துக்கொள்ளுங்கள்

    எங்கள்

    திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதி தனக்கு பரிசளித்த பேனாவால் கவிதை படைத்த கவிஞர் வைரமுத்து, ‘தொட்டகோல் துலங்க செய்வேன்’ என்று கூறியுள்ளார். #Karunanidhi #KavignarVairamuthu
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை கவிஞர் வைரமுத்து தன்னுடைய பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார். கருணாநிதியை சந்தித்த அந்த நேரத்தில், தனக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கருணாநிதியிடம், கவிஞர் வைரமுத்து கேட்டார்.

    முகம் தூக்கி பார்த்த கருணாநிதி, ‘என்ன வேண்டும்’ என்பது போல் வைரமுத்துவை உற்று நோக்கினார். ‘நீங்கள் தமிழ் எழுதிய உங்கள் பேனா வேண்டும்’ என்றார் கவிஞர் வைரமுத்து. உடனே கருணாநிதி அருகிலிருந்த மகள் கனிமொழியிடம், கண்காட்டி ஆணையிட, கனிமொழி வீட்டிற்குள் சென்று கருணாநிதி எழுதி வந்த பேனாவை கொண்டுவந்து, கருணாநிதியிடம் கொடுத்தார்.



    சிரித்த முகத்துடன் கருணாநிதி அதை கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அந்த நேரத்தில் உள்ள மகிழ்வுடன் பேனாவை பெற்றுக்கொண்ட கவிஞர் வைரமுத்து, “என் வாழ்நாளில் கருணாநிதியிடம் நான் பெற்ற பெரும் பரிசு இதுதான்” என்று உள்ளம் உருகினார்.

    கருணாநிதியிடம் அவர் எழுதிய பேனாவை பெற்ற வைரமுத்து அந்த பேனாவால் கவிதை படைத்துள்ளார். அந்த கவிதை வருமாறு:-

    கண்ணிலே குடியிருக்கும்

    கலைஞரே! கொஞ்ச நாளாய்ச்

    சின்னதாய் எனக்கோர் ஆசை

    செவிசாய்த்தே அருள வேண்டும்

    பொன்பொருள் வேண்டாம்; செல்வ

    பூமியும் வேண்டாம்; வேறே

    என்னதான் வேண்டும்; உங்கள்

    எழுதுகோல் ஒன்று வேண்டும்

    எழுதுகோல் அன்று; நாட்டின்

    எழுகோடித் தமிழர் நெஞ்சை

    உழுதகோல்; உரிமைச் செங்கோல்!

    உழைக்கின்ற ஏழையர்க்காய்

    அழுதகோல்; இலக்கியத்தின்

    அதிசய மந்திரக்கோல்

    தொழுதுகோல் கொண்டேன்;

    நீங்கள் தொட்டகோல் துலங்கச்செய்வேன்

    இவ்வாறு அந்த கவிதையில் வைரமுத்து கூறியிருந்தார்.  #Karunanidhi #KavignarVairamuthu
    ×