search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தான் எழுதி வந்த பேனாவை கவிஞர் வைரமுத்துக்கு பரிசளித்த கருணாநிதி
    X

    தான் எழுதி வந்த பேனாவை கவிஞர் வைரமுத்துக்கு பரிசளித்த கருணாநிதி

    கருணாநிதி தனக்கு பரிசளித்த பேனாவால் கவிதை படைத்த கவிஞர் வைரமுத்து, ‘தொட்டகோல் துலங்க செய்வேன்’ என்று கூறியுள்ளார். #Karunanidhi #KavignarVairamuthu
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியை கவிஞர் வைரமுத்து தன்னுடைய பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார். கருணாநிதியை சந்தித்த அந்த நேரத்தில், தனக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கருணாநிதியிடம், கவிஞர் வைரமுத்து கேட்டார்.

    முகம் தூக்கி பார்த்த கருணாநிதி, ‘என்ன வேண்டும்’ என்பது போல் வைரமுத்துவை உற்று நோக்கினார். ‘நீங்கள் தமிழ் எழுதிய உங்கள் பேனா வேண்டும்’ என்றார் கவிஞர் வைரமுத்து. உடனே கருணாநிதி அருகிலிருந்த மகள் கனிமொழியிடம், கண்காட்டி ஆணையிட, கனிமொழி வீட்டிற்குள் சென்று கருணாநிதி எழுதி வந்த பேனாவை கொண்டுவந்து, கருணாநிதியிடம் கொடுத்தார்.



    சிரித்த முகத்துடன் கருணாநிதி அதை கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அந்த நேரத்தில் உள்ள மகிழ்வுடன் பேனாவை பெற்றுக்கொண்ட கவிஞர் வைரமுத்து, “என் வாழ்நாளில் கருணாநிதியிடம் நான் பெற்ற பெரும் பரிசு இதுதான்” என்று உள்ளம் உருகினார்.

    கருணாநிதியிடம் அவர் எழுதிய பேனாவை பெற்ற வைரமுத்து அந்த பேனாவால் கவிதை படைத்துள்ளார். அந்த கவிதை வருமாறு:-

    கண்ணிலே குடியிருக்கும்

    கலைஞரே! கொஞ்ச நாளாய்ச்

    சின்னதாய் எனக்கோர் ஆசை

    செவிசாய்த்தே அருள வேண்டும்

    பொன்பொருள் வேண்டாம்; செல்வ

    பூமியும் வேண்டாம்; வேறே

    என்னதான் வேண்டும்; உங்கள்

    எழுதுகோல் ஒன்று வேண்டும்

    எழுதுகோல் அன்று; நாட்டின்

    எழுகோடித் தமிழர் நெஞ்சை

    உழுதகோல்; உரிமைச் செங்கோல்!

    உழைக்கின்ற ஏழையர்க்காய்

    அழுதகோல்; இலக்கியத்தின்

    அதிசய மந்திரக்கோல்

    தொழுதுகோல் கொண்டேன்;

    நீங்கள் தொட்டகோல் துலங்கச்செய்வேன்

    இவ்வாறு அந்த கவிதையில் வைரமுத்து கூறியிருந்தார்.  #Karunanidhi #KavignarVairamuthu
    Next Story
    ×