என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நல்லகண்ணு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - செல்வப்பெருந்தகை
    X

    நல்லகண்ணு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - செல்வப்பெருந்தகை

    • வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்.
    • நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது 101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

    தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

    வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர்.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர். சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும்.

    அவரது அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தோழருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி அவரது பெருமைக்கு மேலும் புகழ் சேர்த்தார்.

    தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும்.

    அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×