search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்தேகமடைந்த மக்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.
    • போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

    உத்தரகாண்ட்:

    கடும் குளிர் காரணமாக மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பிலங்கானா பகுதியின் த்வாரி தப்லா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மதன் மோகன் செம்வால் (52) மற்றும் அவரது மனைவி யசோதா தேவி (48) ஆகியோர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள த்வாரி தப்லாவிற்கு வந்திருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை சாத்திக்கொண்டனர். நெருப்பிடம் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

    மறுநாள் காலை அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அந்த தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது. 

    • கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
    • சுற்றுப்புற வெப்பநிலையில் மாற்றம் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.

    குளிர் தாங்கமுடியாமை என்பது உடலிலுள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறியாகும். இது உடலிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்சனையே ஆகும்.

    உதாரணத்திற்கு வயதான, மிகவும் ஒல்லியான பெண்களால் சாதாரண குளிரைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு உடலில் மிகமிகக் குறைவான அளவிலேயே கொழுப்பு இருக்கிறது.


    நமது உடலிலுள்ள ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு வேறு. நமது உடலில் பரவி இருக்கும் கொழுப்பு வேறு. குளிர் தாங்க முடியாமைக்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. அவை:

    ரத்த சோகை, பசியின்மை, அதிக குளிரினால் ரத்தக்குழாய்கள் இறுகிப்போதல், ஹைப்போதலாமஸ் சுரப்பியில் பிரச்சனை, தசை நார் வலி, ஹைப்போதைராய்டு குறைபாடு, நாள்பட்ட நோய், உடலில் கொழுப்பு குறைவாக இருப்பது.

    பொதுவாக மனித உடலின் வெப்பநிலை பல அமைப்பு முறைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதலாமஸ் உறுப்பு முன் கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது.

    உடனே தைராய்டு சுரப்பி உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை கண்காணித்து அதிக கலோரி சக்தியை சேமித்து வைக்குமாறு உடலுக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.

    உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் இந்த உடல் சூட்டை உடல் முழுக்க எடுத்துக்கொண்டு போகிறது. இதுபோக உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உடல் சூட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.


    இதில் எந்த அமைப்பு சரியாக வேலை செய்யாவிட்டாலும் உடல் சூடு ஒரே நிலையில் இருக்காது. உடல் வெப்பநிலையில், சுற்றுப்புற வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.

    அதிக குளிரில் விரைத்துப்போய் உடல் நடுக்கம் வந்தால், உங்கள் உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும். உடனே, பல அடுக்கு வெப்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    உள்ளங்கை பாதம் இரண்டையும் சூடேற்றுமாறு தொடர்ந்து நன்றாகத் தேய்க்க வேண்டும். குழந்தைகளாகவோ வயதானவர்களாகவோ இருந்தால் உடலோடு உடல் உரசிக் கொண்டு இருக்கிறமாதிரி அரவணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் இருந்தால் குளிர் குறைந்து உடல் சூடாகும்.


    எல்லாம் சரியாக இருந்தும் மற்றவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய குளிரை உங்களால் தாங்க முடியவில்லை என்றால் உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனைப்படி சில ரத்த பரிசோதனைகளைச் செய்து என்ன காரணத்தினால் குளிரைத் தாங்க முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குளிரை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிந்தால் மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை தான்.

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    • உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
    • சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.

    மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் விடுதிகளுக்குள் முடங்கி உள்ளனர். நீலகிரியில் உறைபனி கொட்டி தீர்த்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது.

    • கடும் பனியால் மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது.

    புதுடெல்லி:

    வடஇந்திய பகுதிகளில் கடுமையான குளிர்கால சூழல் காணப்படுகிறது. இதனால், டெல்லி, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடும் குளிரான சூழலில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

    இதுபற்றி டெல்லி கல்வி துறை வெளியிட்ட செய்தியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் இன்று (15.01.2024) முதல் அவர்களுடைய பள்ளிகளுக்கு வரவேண்டும். இதில், நர்சரி, தொடக்க பள்ளிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும், கடுமையான பனிபடர்ந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது. மாலை 5 மணிக்கு பின்னர் எந்த வகுப்பும் கூடாது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவு தெரிவிக்கின்றது.

    குளிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரின் கல்வி துறை, நர்சரி முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை (16-ந்தேதி) வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஏற்காட்டில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் ஏற்காடு மலை முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் புதிது, புதிதாக அருவிகளும் உருவானதால் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையே இன்று அதிகாலை முதல் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளிர் மேலும் அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்க்கு பனி மூட்டமும் குளிரும் காணப்படுகிறது. குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சாலையோரங்களில் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஜர்க்கின், குல்லா, சொட்டர், கம்பளி போன்ற உடைகள் விற்பனையாகி வருகிறது.

    பனிமூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் மலை பாதையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. இந்த குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் குளிர், சாரல் மழையை பொருட்படுத்தாமல் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தினம் என்பதால் குடும்பம், குடும்பமாக அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோவில் என அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் படகுகளில் குடும்பத்துடன் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இயற்கையான பொழுது போக்கு இடமாக உள்ளது. இயற்கையான சூழலில் மாசற்ற காற்றை சுவாசித்த படி பூங்காவை சுற்றி பார்ப்பது மனதுக்கு புத்துணர்வை ஊட்டுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு பல்வேறு சாதனங்களுடன் குழந்தைகள் பொழுது போக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு இதமான ரம்மியமான சூழல் நிலவுவதால் குழந்தைகளுடன் இன்று காலை முதலே ஏராளமானோர் உயிரியல் பூங்கா வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மான்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், முதலைகள், பாம்புகள், பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் செயற்கை நீரூற்று என அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.

    • கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
    • உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.

    இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.

    மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை-காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.

    அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

    கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
    • ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி தொடக்கம் வரை வெளுத்து வாங்குவது வழக்கம். அதன்படி அங்கு தற்போது கனமழை பெய்து வருகிறது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பருவமழை காரணமாக இதுவரை 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

    இதுதவிர மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மேக கூட்டங்கள் தரைக்கு மிகவும் அருகே தவழ்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் பகல் நேரங்களில் கூட மேகமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    குன்னூர் பகுதியில் நேற்று முதல் மழைச்சாரலுடன் மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    இதுதொடர்பாக குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    குன்னூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அடர்பனிமூட்டம் ஏற்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் வரலாறு காணாத அளவில் அதிகப்படியாக பனிமூட்டத்தை பார்க்க முடிகிறது. மேலும் அங்கு காலநிலை மாற்றமும் ஏற்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் அங்கு ஒருசில நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. எனவே நாங்கள் அச்சத்துடன் வாகனங்களில் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குன்னூரில் இன்று காலை 10 மணியை கடந்த பின்னரும் அடர் பனி மூட்டம் காணப்பட்து. இதனால் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் குளிரை தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். குன்னூருக்கு வந்த சுற்றுலாபயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் கன மைழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் முதல் தலைவாசல் வரை அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொது மக்கள் அதிக அளவில் திரண்டு பார்வையிட்டு செல்கிறார்கள்.

    சேலம் மாநகரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்த படியே இருந்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து இரவில் கடும் குளிர் நிலவியது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் தொடங்கிய மழை இன்று அதிகாலை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 36.2 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 16.2, சேலம் 8.2, தலைவாசல் 7, வீரகனூர் 7, காடையாம்பட்டி 7,ஏற்காடு 4.4, ஓமலூர் 4, கரியகோவில் 4, ஆனைமடுவு 4, மேட்டூர் 3.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 1, ஆத்தூர் 1, பெத்தநாயக்கன்பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது.
    • ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    பின்னர் நள்ளிரவு 12 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிரால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளான தலைவாசல், காடையாம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 19, காடையாம்பட்டி 14, ஆனைமடுவு 13, ஆத்தூர் 5.2, மேட்டூர் 44, சங்ககிரி 4.3, கரியகோவில் 4, ஓமலூர் 2, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 101.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • பொதுமக்கள் பாதிப்பு- வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

     ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.அதேசமயம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாபயணிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ஊட்டி - மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காலை 8 மணிக்கு பிறகும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

    இன்று காலை வெகு நேரமாகியும் வெயில் தென்படாத நிலையில், குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    ×