search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people suffer"

    • வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.
    • குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்த வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 101 டிகிரிக்கு மேல் பதிவாகி கொளுத்தி வருகிறது.

    தமிழகத்தில் அதிக வெயிலின் தாக்கத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை உள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் முடிந்த அளவு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டில் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்று புழுக்கத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கரும்பு பால், குளிர்பானங்கள், இளநீர், மோர் போன்றவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    இதனால் இந்த வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க ஈரோடு வனப்பகுதிகளான அந்தியூர் பர்கூர் வனப்பகுதி, கடம்பூர் வனப்பகுதிகளில் கடும் வெயிலால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு உள்ளதால் குடிநீருக்காகவும், உணவுகளை தேடியும் யானைகள், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கோடை வெயில் ஆரம்பிக்கும் முன்பே தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு பகுதியில் தற்போது மண் பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
    • உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒருமாதம் நீர்ப்பனி விழும். தொடர்ந்து உறைபனி கொட்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இதுபோன்ற நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசுக்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இம்முறை உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. மேலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்தொடங்கி உள்ளது.

    இன்று ஊட்டியின் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 7.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக உள்ளது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, சூட்டிங்மட்டம், காமராஜ்சாகர் அணைக்கட்டு மற்றும் எச்.பி.எப் ஆகிய பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக காணப்பட்டது.

    மேலும் பனிப்பொழிவு, குளிரால் அதிகாலை நேரங்களில் தேயிலை-காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலைநேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், மாலை நேரத்தில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    • வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
    • கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 29-ந்தேதி கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து அதிகாரிகள் பம்பரமாக சுழன்று மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை வடிய வைப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டனர்.

    இதையடுத்து பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. இருப்பினும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கோடம்பாக்கம், மாதவரம் மஞ்சம்பாக்கத்தை அடுத்த வடபெரும்பாக்கம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமலேய உள்ளது.

    கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் நேற்று மாலை வரையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. ரங்கராஜாபுரம் மெயின் ரோடு, ஆசாத் நகர் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீர் வடிந்துள்ளன.

    மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள வடபெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை புழல் ஏரி நீர் தண்ணீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று 4-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்கால்பாக்கம், செங்குன்றம், ஞாயிறு உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு வடபெரும்பாக்கத்தில் உள்ள பிரதான சாலையைத்தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையில் மழை நீர் வடிகால் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக் குட்பட்ட இந்த பகுதியில் 4 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வடபெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆந்திரா நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளன.

    வட பெரும்பாக்கம் வி.எஸ்.மணி நகர் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். வட பெரும்பாக்கம் பகுதியில் தனியார் ஆம்னி பஸ் நிறுத்தங்கள் 2 இடங்களில் உள்ளன. குறிப்பிடப்பட்ட 2 நிறுவனங்களை சேர்ந்த பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.

     இந்த பஸ்களும் வட பெரும்பாக்கம் சாலையில் செல்ல முடியாமல் புழல் காவாங்கரை, வடகரை வழியாக வட பெரும்பாக்கத்தை சென்றடைந்தன.

    புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் 4-வது நாளாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விளாங்காடுப்பாக்கம் ஊருக்குள்ளும் புதிதாக அங்கு தோன்றியுள்ள மல்லிகா கார்டன் மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு தர்காஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    விளாங்காடுப்பாக்கம் கல்மேடு நியூஸ்டார் சிட்டியில் தொடை அளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் தற்போதுதான் முட்டியளவுக்கு குறைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    செங்குன்றம் பகுதியில் இருந்து வரும் நீளமான இந்த கால்வாயை முறையாக தூர்வாரி முன்கூட்டியே கரைகளை பலப்படுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இதுபோன்று சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு மழை பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாங்காடு பாக்கம் வடகரை கிராண்ட்லைன் ஆகிய ஊராட்சிகளில் புதிய கால்வாய் வசதி இல்லாததாலும் ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் தற்போது பெய்து வரும் மழையில் நீர் வடியாமல் குடியிருப்புகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விளாங்காடு பக்கம் ஊராட்சியில் உள்ள தர்காஸ் கண்ணம்பாளையம் சிங்கிலி மேடு நியூ ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதே போல் தீர்த்தங்கரையும் பட்டு ஊராட்சியில் உள்ள குமரன் நகர் சன்சிட்டி கிரானைட் ஊராட்சியில் உள்ள உதயசூரியன் நகர் கிரானைட் வடகரை பகுதியில் உள்ள பாபா நகர் வடகரை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளில் மழை நீர் செல்வதற்கு கால்வாய்கள் இருந்து வந்தன. இந்த கால்வாய்களை தனியார் சிலர் ஆக்கிரமித்தும் வீட்டு மனை விற்பனை செய்ப வர்கள் கால்வாய்களை ஆக்கிரமித்தும் உள்ளதால் மழைநீர் வெளியேறாமல் இருந்து வருகிறது.

    இந்த மழை நீரை வெளி யேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் இருந்து மீட்டு சீரான கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் மாலை வரை மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் லேசாக பெய்ய துவங்கிய மழை, பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பயங்கர இடி மின்னலுடன் மழை கொட்டியது.

    இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை நோக்கி மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பச்சாபாளையம் காலனி, அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

    • கால்வாயை முறையாக பராமரிக்காததால் அதில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
    • மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    வடசென்னை பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கி றது. புழல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மற்றும் சென்ட்ரம் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. செங்குன்றம் பகுதியில் இருந்து அப்பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரே இந்த பகுதியில் வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

    செங்குன்றத்தில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் புள்ளிலைன், தீர்த்தங்கரைப்பட்டு, அழிஞ்சிவாக்கம் வழியாக விளாங்காடுப்பாக்கம் ஊரை ஒட்டி செல்கிறது.

    மேற்கண்ட பகுதிகளில் இருந்து கால்வாயில் இரு புறமும் அடித்து வரப்படும் வெள்ளம் விளாங்காடுப்பாக்கம் ஆர்.சி.குடியிருப்பு அருகே ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து கொசப்பூர் கால்வாயை சென்றடைய வேண்டும்.

    இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் அதில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இந்த கால்வாயால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளால் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த கால்வாய் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாய் என்றும், அதனை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டியது பொதுப்பணித்துறை அதிகாரிகளே என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், பொது மக்களின் நலன் கருதி முன்கூட்டியே வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருந்ல் இதுபோன்ற பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்றே அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும் போது, "மாதவரம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி பகுதிகள் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளாகும். எனவே மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுராஜ் ஆகியோரும் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் ஆர்.சி.குடியிருப்புக்கு அருகில் கால்வாய் கரையில் ஏற்பட்ட உடைப்பை விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

    இருப்பினும் இந்த கால்வாயில் பல இடங்களில் கரைகள் பலமின்றி உடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று பாரதி சரவணன் தெரிவித்தார்.

    தற்போது தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
    • மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வருகின்றனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வணிகர்கள் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் தூக்கத்தை இழந்து அவதியடைந்து வருகின்றனர்.

    தினசரி 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதுகுறித்து முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இடையப்பட்டி ஊராட்சி வடக்கு வீதியில் சாலை அமைக்கும் பணிகள் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • இந்நிலையில் நேற்று மாலை இடையப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியதால் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் இடையப்பட்டி ஊராட்சி வடக்கு வீதியில் சாலை அமைக்கும் பணிகள் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இடையப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியதால் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் நிறைவு செய்து போக்குவரத்து மற்றும் மழைநீர் வடிகால் வசதிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இறந்தவர் உடலை சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ள த்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • பொதுமக்களின் நலன் கருதி ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டி அருகே செடிப்பட்டி உள்ளது.இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ள த்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்.அந்த சமயத்தில் இறந்தவர் உடலை தண்ணீரில் சிரமத்துடன் தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    பல ஆண்டுகளாக இந்தநிலை நீடித்து வருகிறது என அப்பகுதி மக்கள் வேதனை யுடன் தெரிவிக்கின்றனர்.எனவே இறந்தவர் உடலை புதைப்பதற்கு ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் செடிப்பட்டியைச் சேர்ந்த ராமன் (வயது 65) என்ற விவசாயி உடல் நலக்குறை வால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஏற்பாடு மேற்கொண்டனர்.

    ஆற்றில் தண்ணீர் சென்ற தால் இறந்தவர் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்றுத் தண்ணீரில் இறங்கி சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிங்கராஜபுரம் ஊராட்சியில் சாலை தொடர் மழையால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.
    • இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசனூத்து, முத்தூத்து, தேக்கிளை குடிசை திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளையும் பயிர்களை ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்தநிலையில் இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியுற்று வந்தனர்.

    இந்த கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்க ளில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த தார் சாலை கனமழையின் காரணமாக அதிக அளவில் சேதமடைந்து போக்கு வரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    சில இடங்க ளில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதி காரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. ஆனால் இரவு 9 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் இரவு இரவு நேரத்தில் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 9 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதியில் அகில் மேடு வீதி, பஸ் நிலையம், பெரிய வலசு, வீரப்பன் சத்திரம், ரெயில் நிலையம், கருங்கல்பாளையம், நாடார் மேடு, வில்லரசம்பட்டி, அசோகபுரம், திண்டல் உள்பட பல்வேறு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு மோசிகீரனார் வீதியில் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுது மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீட்டுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்ததால் குழந்தைகள் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு நாடார் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஈரோடு அன்னை சத்யா நகர், மல்லிநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    அங்குள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் செடி, கொடிகள் அடைத்து இருந்ததால் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் இப்போது மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    சில மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வாலியால் கொண்டு வெளியே இறைத்து ஊற்றினர். மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

    ஈரோடு ரங்கபாளையம் கே.கே.நகர் பாலத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 4 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 124 மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி சாகர், வரட்டுப்பள்ளம், நம்பியூர், பெருந்துறை, அம்மாபேட்டை, கொடுமுடி, தாளவாடி, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இரவு நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    நேற்று இரவு பலத்த மழையால் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் டவுன் பஸ்சில் பயணிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைப்பிடித்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-124, குண்டேரிப் பள்ளம்-86.20, ஈரோடு-80.30, கவுந்தப்பாடி-80.20, கோபி-49.20, கொடிவேரி-44, சென்னிமலை-42, மொடக்குறிச்சி-40, பவானிசாகர்-36, வரட்டுப் பள்ளம்-32, நம்பியூர்-30, எலந்தகுட்டைமேடு-29.40, பெருந்துறை-25, அம்மாபேட்டை-28.80, கொடுமுடி-22, சத்திய மங்கலம்-14, தாளவாடி-4.

    • சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது
    • வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை.

    திருப்பூர் : 

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உடுமலை- பழனி நெடுஞ்சாலை உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கொழுமம் பிரிவு வரை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக மத்திய பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கழுத்தறுத்தான் பள்ளம் வரையில் சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எங்கிருந்து இந்த வாகனங்கள் வருகிறது. எதற்காக அங்கு நிறுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.

    தேசிய நெடுஞ்சாலையை பார்க்கிங் வசதியாக மாற்றும் வாகனங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் சாலை அகலமானதற்கான நோக்கமும் வீணாகி உள்ளது. எனவே உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும். இதற்காக போக்குவரத்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த 3 நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
    • மின்தடையால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    நத்தம்:

    நத்தம், செந்துறை, சிறுகுடி ஆகிய துணை மின் நிலையத்திலிருந்து சிறுகுடி, ஊராளிபட்டி, நத்தம், கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை, மாலை, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் திடீர் திடீரென அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து மக்கள் கூறுகையில் குறைந்த அளவு மின்சாரத்தால் வீட்டில் உள்ள மிக்ஸி, குக்கர், பிரிட்ஜ், டிவி உள்பட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    மேலும் மின்சாரத்தை மட்டும் நம்பி தொழில் நடத்தும் வணிக நிறுவன ங்கள், பின்னலாடை தொழில் செய்யும் நிறுவன ங்கள், மாவு அரைக்கும் இயந்திரம் வைத்திருப்ப வர்கள் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இயந்திரங்களும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் தொழிலாளர்க ளும் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிக்க முடியாத நிலை உள்ளது.

    மின்தடையால் இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படு கின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விசிறி இல்லாத காரணத்தினால் குழந்தைகளும் வியர்வையில் நனைந்து தூங்க முடியாத அவல நிலை உள்ளது. அலுவலக நேரங்களில் மின்தடையால் பணியா ளர்கள் சிரமப்படுகின்றனர். மின்தடைக்கான காரணம் தெரியாமல் புலம்புகின்ற னர். எனவே இனிவரும் நாட்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×