search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் நில ஆவணங்களில் குளறுபடியால் பொதுமக்கள் அவதி
    X

    நத்தம் நில ஆவணங்களில் குளறுபடியால் பொதுமக்கள் அவதி

    • பொதுமக்கள் வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
    • திருத்தம் செய்த பிறகு நத்தம் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    கோவை,

    நத்தம் நில ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் பட்டா வழங்கியவர்களுக்கு ரயத்துவாரி மனை என பட்டா வழங்காமல் அரசு நத்தம் மனை எனவும், அரசு புறம்போக்கு எனவும் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கோவை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    2006-ம் ஆண்டுக்கு பின்னர் நத்தம் நில ஆவணங்களில் ஏற்பட்ட பட்டா மாறுதல் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களின் பெயரில் ஏற்பட்ட நடப்பு மாறுதல்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொண்டு இணையவழி சேவைக்கு கொண்டு வரும் நிலையில் உள்ளது.

    நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் மனை பட்டா வழங்கப்பட்ட இனங்கள் அனைத்தையும் ரயத்துவாரி மனை என பதிவு செய்ய நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் பல மாவட்டங்களில் பட்டா வழங்கப்பட்ட இடங்களையும், அரசு நத்தம் மனை என தவறாக நில ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தவறை ரயத்துவாரி மனை என நத்தம் நில ஆவணங்கள் கணினியில் பதியும் போது சரி செய்ய வேண்டும்.

    ஆனால், தற்போது வரை அவ்வாறு செய்யாமல் நத்தம் ஆவணங்களில் தவறாக அரசு நத்தம் மனை மற்றும் அரசு புறம்போக்கு என உள்ளதை அப்படியே கணினியில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் கிராம நத்தம் பகுதியில் குடியிருக்கும் ஏழை மக்களின் நலன்களுக்கு எதிரானது ஆகும்.

    எனவே இதை திருத்தம் செய்த பிறகு நத்தம் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் நத்தம் மனைப்பகுதியில் குடியிருக்கும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நத்தம் பட்டா கையில் வைத்திருந்தும் அரசு கணக்குகளில் அரசு நிலமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவை அடமானமாக வைத்து வங்கி கடன் பெறவும், வீடு கட்ட அனுமதி பெறவும் இயலாமல் போகிறது. எனவே, இதை கவனத்தில் கொண்டு உடனடியாக ரயத்துமனை என நத்தம் நிலவரித்திட்ட பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×