என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivan"

    • பார்வதிதேவி பாவத்தை போக்க தவம் செய்ய காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரைக்கு சென்றார்.
    • திருவண்ணாமலைக்கு சென்று பார்வதிதேவி தவம் மேற்கொண்டார்.

    கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தம் கைகளால் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. எங்கும் ஒரே இருள் சூழ்ந்தது. எல்லா தொழில்களும் செயலற்று போயின. இதனால் சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டியதன் பேரில் அவர் தனது நெற்றிக்கண்ணை லேசாக திறந்தார். அதன் மூலம் உலகில் இருள் விலகி வெளிச்சம் உண்டாது.

    பார்வதிதேவி தனது செயலுக்கு வருந்தினார். பின்னர் பாவத்தை போக்க தவம் செய்ய காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரைக்கு சென்றார். வெகுநாள் தவத்திற்கு பிறகு சிவன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். அதற்கு பார்வதிதேவி உங்கள் உடம்பில் இடப்பாகம் எனக்கு வேண்டும் என்றார்.

    அதற்கு சிவபெருமான், 'நீ விரும்பியபடியே எனது இடப்பாகத்தை உனக்கு தருவோம். இந்த காஞ்சிபுரத்திற்கு தெற்கே நினைத்தாலே முக்தி தரும் புனித நகரமான திருவண்ணாமலை உள்ளது. அங்கு செல். நான் வந்து உனக்கு இடப்பாகம் தருவேன்' என்று கூறினார்.

    அதன்படி பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அங்கு தவம் மேற்கொண்டார். அப்போது திருவண்ணாமலை பகுதிக்கு வந்த மகிடாசுரனுடன் போரிடும் சூழல் ஏற்பட்டது. பார்வதிதேவி, துர்க்கையை போருக்கு அனுப்பினார். பெரும் போராட்டத்திற்கு பின்னர் மகிடாசுரன் வீழ்த்தப்பட்டான். அவனது உடலில் இருந்து விழுந்த சிவலிங்கத்தை பார்வதிதேவி எடுத்தபோது அது கையில் ஒட்டிக்கொண்டது.

    அந்த லிங்கம் விடுவிக்கப்பட நவதீர்த்தங்களில் நீராட வேண்டும் என்று கவுதம முனிவர் கூறியதை அடுத்து அங்கே தனது வாளால் பூமியை பிளந்து ஒன்பது தீர்த்தங்களும், புண்ணிய குளங்களும் தோன்ற செய்தார். பின்னர் பார்வதி தேவி அந்த தீர்த்தங்களில் நீராடி பாவத்தை போக்கினார்.

    பிறகு அண்ணாமலை கோவிலுக்கு சென்று வணங்கினார். அப்போது மலையின் மீது ஒரு வெளிச்சம் உண்டானது. அதிலிருந்து தோன்றிய சிவபெருமான், உமையாளுக்கு தனது உடலில் இடப்பாகத்தை அளித்தார். அந்த காட்சியை கண்டு தேர்வர்களும், முனிவர்களும் வணங்கினர்.

    • அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார்.
    • துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

    செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது துளசீஸ்வரர் கோவில். பொதுவாக சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் இக்கோவிலின் தனிச் சிறப்பாக சிவபெருமானுக்கு துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    கயிலாயத்தில் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றது. இதைக் காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் குவிந்தனர். இதனால் பூமியின் வடக்கு பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது. இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்திசை நோக்கி செல்ல பணித்தார், சிவபெருமான். அதன்படி, கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு வந்த அகத்தியர், வரும் வழிகளில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் இக்கோவிலில் உள்ள சிவலிங்கம்.

    அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசியால் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது சிவன் அசரீரியாக, ''நான் இங்குதான் துளசி செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்'' என்றார். இதையடுத்து சிவனின் குரல் கேட்ட இடத்திற்கு சென்றபோது அங்கு ஒரு சிவலிங்கம் தென்பட்டது. பிறகு, அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பூஜை செய்ய இப்பகுதியில் வேறு எந்த மலரும் கிடைக்காததால், அகத்தியர் துளசி இலைகளை கொண்டே அர்ச்சனை செய்தார். சிவபெருமானும் அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டு, சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.

    சுமார் 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சற்று திரும்பி ஈசான்ய மூலையை பார்த்து காணப்படுகிறார். துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் இவர், 'துளசீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம், 'வில்வநாயகி' என்பதாகும். இவர் ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.

    இங்குள்ள துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், திங்கட்கிழமை அன்று இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம்.

    செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருக்கச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்தூரில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார்.
    • விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அனைத்திற்கும் ஆதியாகவும் கருதப்படுபவர், சிவபெருமான். பல கோவில்களில் சிவபெருமானை லிங்க வடிவிலும், நடராஜர் ரூபத்திலும் தரிசித்திருப்போம். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவபெருமான் காட்சி தரும் அரிதான கோவில் ஆந்திராவில் உள்ளது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது, சுருட்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குதான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார்.

    தல வரலாறு

    புராணத்தின்படி, இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, பெருமாளின் உதவியுடன் பாற்கடலை கடைய முற்பட்டான். ஒருபுறம் தேவர்கள், மறுபுறம் அசுரர்கள் என வாசுகி பாம்பை கயிறாக திரித்தும், மந்திர மலையை மத்தாக மாற்றியும் பாற்கடலை கடைந்தனர். அப்போது, வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. அதனால், தேவர்களும், அசுரர்களும் அஞ்சினர். இந்த விஷத்தால் அனைத்து உலக உயிர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டது. எனவே அனைவரும் சிவபெருமானிடம் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.

    உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார். மிகக்கொடிய விஷம் என்பதால் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை அழுத்தி பிடித்தார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்று விட்டது. இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன்' என்ற பெயர் உண்டானது.

    அதன்பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது, விஷம் அருந்தியதால் சிவபெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து படுத்து (சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளி எனும் இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவபெருமான் இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் சயன கோலத்தில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். பார்வதி தேவி, பக்தர்களால் 'சர்வமங்களாம்பிகை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோவிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு நந்திகேஷ்வரரை தரிசிக்கலாம்.

    பிரதோஷ வழிபாடு

    இக்கோவிலில் பிரதோஷக்கால வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில்தான் முதல்முதலில் பிரதோஷம் நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகே மற்ற சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் திருவாதிரை, மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

    சனிப்பிரதோஷத்தில் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமை பலப்படும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

    இத்தல சிவபெருமானிடம் வேண்டியது நிறைவேறியதும், பிரதோஷம் அன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வந்து வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 59 கி.மீ. தொலைவில் சுருட்டப்பள்ளி எனும் இடத்தில் கோவில் உள்ளது.

    • ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.
    • மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.

    ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில், பஞ்சபூத தலங்களில் ஒன்றான, புகழ்பெற்ற வாயு லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் காளஹஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.

    மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். இந்த கவசத்தின் தலைப் பகுதியில் சூரியன், சந்திரன், அக்னியும், கீழே 9 படிகளில் நவ கிரகங்களும், 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. 9 கிரகங்களுக்கும் முத்து, பவளம், நீலம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம், ரூபி, எமரால்டு மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    2009-ம் ஆண்டு இந்த தங்க கவசம் பூப்பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்து முடிந்த பிறகு இந்த தங்கக் கவசம் சார்த்தப்பட்டது.

    அதற்கு முன்பு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருந்த தங்க முலாம் பூசிய 3 வெள்ளிக் கவசங்கள் மட்டுமே இதுவரை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.
    • பல்லவர் காலத்தில் இருந்த கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர்.

    திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

    வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோவிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

    வரலாறு

    இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோவிலான காளஹஸ்தி கோவில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப்பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோவிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோவிலுக்கு அளித்துள்ளனர்.

    பல்லவர் காலத்தில் இருந்த இக்கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோவில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கி.பி. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக்கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

    • காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன.
    • வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது.

    திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற்றொன்று சிவப்பிரகாசரும் அவரது தம்பியும் சேர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் சீகாளத்தி புராணம் என்னும் பெயரில் இயற்றியது

    இது பாயிரமும் 33 அத்தியாயங்களும் கொண்ட பெரிய நூல். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில:

    தேவாரம் பாடிய மூவர், திருவாதவூர் அடிகள், நூலாசிரியரின் குரு சத்திய ஞானி, திருப்பணி செய்த யாதவ வேந்தன், வடநூலைத் தனக்கு மொழிபெயர்த்து உதவிய சங்கரநாராயணன் என்னும் வாரைவாழ் புராணிகர் முதலானோருக்குப் பாயிரப் பகுதியில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.

    சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆடி உத்திரம், ஆவணி ஓணம், புரட்டாசி புரட்டை, ஐப்பசி அச்சுவதி, கார்த்திகைக் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் காளத்திநாதரை வழிபடுவதற்கு உரிய நன்னாள்கள் எனக் கூறப்பட்டுள்ளன.

    1 போற்றிப் பாடல்

    நீயே வினைமுதல் நீயே கரணமும்

    நீயே கரணம், நீயே காரியம்

    நீயே தருபவன், நீயே சான்று உரு

    நீயே இவையுள் நீங்கினை சயசய

    2 நல்லொழுக்கம் கூறும் பாடல்

    ஓதனத்துக்கு உரியது ஒருபொருள்

    யாது உண்டு என்னதை இத்துணை நாளைக்கும்

    போதும் ஈது என்று உவந்து பொறுத்துத்

    தீது இல் தானியம் ஓம்புக சீர் பெற.

    • “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார்.
    • இதனால் சிவபெருமானின் நடனத்தை, நந்தி தேவரால் காண முடியாமல் போய்விட்டது.

    செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது.

    ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, "சிங்கி" என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு மிருதங்கம் வாசிப்பதில் லயித்துப் போனார்.

    இதனால் சிவபெருமானின் நடனத்தை, நந்தி தேவரால் காண முடியாமல் போய்விட்டது. தான் மெய்மறந்து மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருந்த காரணத்தால், சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து கவலையுற்றார். பின்னர் சிவபெருமானிடம், தன்னல் அவரது நடனத்தை காணமுடியாது போனது பற்றி எடுத்துரைத்து மீண்டும் தனக்கு ஆனந்த நடனத்தை காட்டியருளும்படி வேண்டி விண்ணப்பித்தார்.

    நந்தியிடம், அவரது தொழில் பக்தியை வெகுவாக பாராட்டிய சிவபெருமான், "பூலோகத்தில் அவளூர் என்ற இடத்தில் உள்ள தலத்திற்கு சென்று வணங்கி வா! அங்கு யாம் வந்து உனக்கு ஆனந்த நடனத்தை புரிந்து அருள்புரிவோம்" என்று கூறினார். இதனை கேட்டதும் சற்றும் தாமதிக்காத நந்தி தேவர் உடனடியாக அவளூர் சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்ய தொடங்கினார். அவரது இடைவிடாத பூஜையின் காரணமாக அகமகிழ்ந்த ஈசன், தனது அன்பரின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக அந்த தலத்திற்கு வந்து நந்தி தேவருக்காக மட்டும் மீண்டும் தனது நடனத்தை ஆடிக்காட்டினார்.

    "சிங்கி" என்ற நந்தியார் வணங்கிய தலம் என்பதால் இங்குள்ள இறைவன் சிங்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் இறைவியாக காமாட்சி என்ற நாமத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறார். நந்தியின் வேண்டுதலை நிறைவேற்றியது போல் நம்முடைய வேண்டுதலையும் நிச்சயம் சிங்கீஸ்வரர் நிறைவேற்றுவார்.

    • “எருக்கம்பூ பயத்தை ஒழித்து தைரியம் கொடுக்கக்கூடிய தன்மை உடையது”.
    • சூரியனுக்கும் எருக்கம் பூ மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    கடவுள்களுக்கு உகந்த வெள்ளெருக்கு

    சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது வெள்ளெருக்கமலர்.

    சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடிய பாக்கியம் பெற்ற மலராக வெள்ளெருக்கம் மலர் திகழ்கிறது.

    "எருக்கம்பூ பயத்தை ஒழித்து தைரியம் கொடுக்கக்கூடிய தன்மை உடையது".

    இதனால் புதுச்சேரிஅன்னை இந்த மலருக்கு "தைரியம்" என்று பெயர் சூட்டியுள்ளார்.

    எருக்கம் மலர்களை அன்னையின் பாதத்தில் வைத்துவிட்டு காரியங்களைச்செய்தால் மனதில் தானே தைரியம் வந்து உட்கார்ந்து கொள்ளுமாம்.

    சாதாரண எருக்கம் பூவானாலும் சரி... சிறப்புத்தன்மை கொண்ட வெள்ளெருக்கு மலரானாலும் சரி... அது ஐயப்பனுக்கும் உரியதாகும்.

    இதை தை பொங்கல் சமயத்தில் பந்தளம் அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லப்படும் திருவாபரணப்பெட்டிகள் எடுத்துரைக்கின்றன.

    ஐயப்பனுக்கும், எருக்கம் பூவுக்கும் என்ன சம்பந்தம்?

    சபரி சாஸ்தாவுக்குச் சாத்துவதற்காக ஆபணங்களைக் கொண்ட மூன்று பெட்டிகள் திருவாபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி... கொண்டு வரப்படும் அவற்றுள் திருவாபரணப்பெட்டி மட்டும்தான் ஐயப்பன் சன்னதிக்குச் செல்லும் .

    அதனுள் திருமுகக் கவசம், சூரிகைகள், யானை விக்ரகம் , புலி விக்ரகம், வலம்புரிச்சங்கு, பூர்ண புஷ்கலா தேவியர் உருவம், பூக்கள் வைப்பதற்கான தங்கத்தட்டு, நவரத்தின மோதிரம், சரப்பளிமாலை, நவரத்தின மாலை, தங்க இதழ்களாலான வில்வமாலை ஆகியவற்றுடன் தங்கத்தாலான எருக்கம்பூக்களாலான மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.

    இத்தனை மலர்களை விட்டுவிட்டு எருக்கம் பூமாலைக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்? எளிய பொருட்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை உணர்த்துவதற்குத்தான் ஐயப்பன் எருக்கம் பூவை தன்னுடன் வைத்துள்ளார்.

    சூரியனுக்கும் எருக்கம் பூ மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    ரதசப்தமியன்று (சூரியன் தனது ரதத்தை தென்திசையிலிருந்து வடக்கு நோக்கித்திருப்பும் தினம்) ஏழு எருக்க இலைகளுடன், மஞ்சள் பொடி, பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவற்றை சேர்த்து தலையில் இருதோள்களில், இருபாதங்களில் வைத்துக்கொண்டு சூரிய திசை நோக்கி, கங்கையை நினைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும்.

    இதனால் ஏழு ஜென்மங்களின் பாவம் அகல்வதுடன் சூரிய பகவானின் பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு மரம்தான் தல மரமாக விளங்குகிறது.

    வெள்ளெருக்கு தலமரமாக அமைந்த விசேஷ ஆலயங்களும் உண்டு.

    திருமங்கலக்குடி பிராண நாதேஸ்வரர், மங்களநாயகி ஆலயத்தில் தல விருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.

    இங்கு ஞாயிறு மதியம் உச்சிக்காலத்துப்பிறகு வெள்ளெருக்கு உள்ளது.

    இலையில் தயிர் சாதம் நைவேத்யமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் ஒரு கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை தயிர்சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து நைவேத்யம் செய்து உண்டு வர, எப்பேர்ப்பட்ட நோயும் விலகிவிடுமென்பது நிதர்சனம்.

    கடந்த சில ஆண்டுகளாக வெள்ளெருக்கு மரம் உண்டாவதே அரிதாகிவிட்டது.

    எளிதாகத் தோன்றுவதும் இல்லை. நவரத்தினங்களும், பொக்கிஷங்களும், தெய்வத் திருவுருவங்களும் புதைந்திருக்கும் இடங்களிடையே வெள்ளெருக்கு முளைக்குமாம்.

    அது முளைத்த இடத்தில் ஐஸ்வர்யங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.

    இத்தகைய அரிய வெள்ளெருக்கு வேரில் செதுக்கப்படாமலே பிள்ளையார் தோன்றுவதுதான் விசேஷம்.

    அப்படியே செதுக்குவதற்கும் வேர் எடுக்க நினைத்தாலும் அது சாதாரண செயலல்ல.

    இன்ன திதியில், நேரத்தில் கிழமைகளில் என்று கணித்து மரத்துக்கு காப்புகட்டி, சில வழிபாடுகளைச் செய்து, குறிப்பாக வடக்கு முகமாகச் செல்லும் வேர்களை எடுத்து மஞ்சள் சந்தனக் காப்புகளை சாத்தி, பக்குவப்படுத்தி உருவாக்கிய பிள்ளையாரின் சக்திக்கு அளவே இல்லை.

    மாந்தரீக ஆற்றல் கொண்ட வெள்ளெருக்குக்கு பாம்பு பயந்து ஓடும். பூதப் பிசாசு துர்பயங்கள் விலகும். துர்சக்திகளை நினைத்து பயம் உள்ளவர்கள் வெள்ளெருக்குப்பட்டையைப் பதப்படுத்தி நூல் திரித்து விளக்காக ஏற்றிவர, இல்லமும் இதயமும் பயமின்றித்தெளிவடையும்.

    திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எருக்கஞ்செடி நட்டு, புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.

    • பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து.
    • “நான்” எனும் அகங்காரம் பிரம்மனிடம் தென்பட்டது.

    திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

    பெரும் சிறப்புடைய சோழநாட்டின் ஒரு பகுதியாய் இருந்த பொன்னி நதியும், காவிரி நதியும் பாயும் தென் தமிழ்நாட்டின் நடுநாயகமாய் வீற்றிருக்கும் திருச்சி மாவட்டத்தின் வடகரையில் சுமார் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் 25 கி.மீ தொலைவில் சிறுகநூருக்கு மேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் அமைந்துள்ளது.

    இவ்வூரில் பழமையும் பெருமையும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - ஈசன்

    கிழக்கு நோக்கிய சன்னிதி, சுயம்பு மூர்த்தி, அழகிய தோற்றம், மேலே தாராபாதிரம், நாகாபரனத்துடன் கூடிய சதுர ஆவுடை கூடிய திருமேனி, ஸ்ரீ பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்ததால் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    ஸ்ரீ பிரம்மன் வரலாறு

    நாத மண்டபத்தின் தென்புறம் சென்றால் மிகப்பெரிய கிழக்கு நோக்கிய ஸ்ரீ பிரம்மா சன்னதி.

    பிரம்மனுக்கு கோவில்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிரம்மன் இல்லாத சிவ ஆலயம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லா சிவ ஆலயத்திலும், ஈசனின் இடப்புறத்தில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியில் கோஷ்டமூர்த்தியாக இருந்து வருகிறார்.

    ஆனால் திருபட்டூரில்மட்டுமே மிக பிரம்மாண்டமாக அதுவும் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தியுடன் தனி சந்நிதியுடன் காட்சியளிக்கிறார்.

    பிரம்மன் ஒருமுறை இந்த உலகத்தை படைக்கும் சக்தி தன்னிடம் உள்ளது , மேலும் ஈசனுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலை என "நான்" எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காத போக்கு தென்பட்டது.

    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைக்க எண்ணினார். ஆகவே, "பிரம்மனே ஐந்து தலை என்பதால் அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்" என்று அவருடைய ஒரு தலையை கொய்துவிட்டு தேஜஸ் இழக்கக்கடவாய் என்று சாபம் இட்டார்.

    பிரம்மன் தேஜஸ் இழந்ததால் படைப்பாற்றலையும் இழந்தார். தன நிலையை உணர்ந்த பிரம்மன் திருபட்டூரில் துவாதச சிவலிங்கங்களை (பன்னிரண்டு) பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

    ஆக, பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் பிரம்மனின் படைப்பாற்றலையும் திரும்ப வழங்கி கூடுதலாக ஒரு வரம் வழங்கினார்.

    பிரம்மனே உன்னுடைய வழிபாட்டில் மகிழ்ந்த யாம் எல்லோருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் உன்னுடைய தலையெழுத்தை மாற்றியது போல் இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு,

    மீண்டும் ஒருமுறை அவர்களுடைய "தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக " என்று வரமளித்தார்.

    "விதி இருப்பின் விதி கூட்டி அருளுக " என்றும் வரம் வழங்கினார்.

    பரிகாரத்தலம்

    நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம் , செல்வ நலத்துடன் வாழ வேண்டும் என்பதே.

    அதற்கு இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி நல்வாழ்வு நல்குவர்.

    ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்

    திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தல் சிறப்பு.

    தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.

    பரிகார முறை

    முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு தீபமிட்டு ஒன்பது முறை வளம் வந்து வேண்டுதல் வேண்டும்.

    ஒவ்வருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல் செய்தால் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம்.

    இவ்வாறு வேண்டி பலன் பெற்றோர் பல பேர் உள்ளனர்.

    பொதுவான பரிகாரம்

    கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், வியாபாரத்தில் நஷ்டம், திருமணத் தடை, பிள்ளைகள் இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மன வியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி "திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது " என்ற நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.

    • மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.
    • வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.

    குருத்ருகன் என்ற வேடனின் குடும்பம் ஒருநாள் முழுவதும் உணவின்றி வாட நேர்ந்தது.

    அதனைக் கண்ட குருத்ருகன் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான்.

    காட்டில் விலங்குகளைத் தேடி அலைந்தான்.

    அன்று பகல் முழுவதும் விலங்குகள் எதுவும் அவன் கண்ணில் படவில்லை.

    அந்திசாயும் நேரத்தில் ஒரு தடாகத்தின் கரையை அடைந்தான்.

    நீர் பருகி, தாகத்தை தீர்த்துக் கொண்டான்.

    இரவு வேளையில் அத்தடாகத்தில் நீர் பருக எப்படியும் விலங்குகள் வரும் என்று நம்பினான்.

    தன்னிடம் இருந்த ஒரு குடுவையில் நீரை எடுத்துக் கொண்டு, தடாகத்தின் கரையில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான்.

    விலங்குகளின் வருகைக்காகக் காத்திருந்தான்.

    அவன் எதிர்பார்த்தபடி, முதல் யாமத்தில் ஒரு பெண்மான் நீர் பருக வந்தது.

    அதன் மீது அம்பு தொடுக்க முற்பட்டான்.

    அந்த அசைவினால், மரத்தின் இலைகள் உதிர்ந்தன.

    குடுவை நீரின் ஒரு பகுதியும் கீழே விழுந்தது.

    தனக்கு வரவிருந்த ஆபத்தைப் பெண்மான் உணர்ந்தது.

    வேடனை நோக்கி, "ஐயா! சற்று நான் சொல்வதைக் கேளுங்கள்" என்றது.

    மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.

    "ஐயா! உங்கள் குடும்பத்தினரின் பசியைத் தீர்க்க என் உடல் பயன்படப் போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சி.

    நீங்கள் எனக்குச் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.

    எனக்குக் குட்டிகள் உள்ளன.

    அவற்றைக் காப்பாற்றும் வகையில், மற்றொரு பெண்மானை என் கணவருக்குத் துணையாக்கி விட்டு, உடனே வந்து விடுகிறேன்.

    அதன் பிறகு, என்னை வேட்டையாடலாம்" என்றது அப்பெண்மான்.

    முதலில் மானின் வார்த்தைகளை நம்ப மறுத்த வேடன், பிறகு மானின் உறுதிமொழியைக் கேட்டு, அதனைச் செல்ல விடுத்தான்.

    இரண்டாவது யாமத்தில் அப்பெண்மானின் சகோதரியாகிய மற்றொரு மான் வந்தது.

    அதனை வேட்டையாட முற்பட்டான் குருத்ருகன்.

    "ஐயா! எனது குட்டிகளைக் காப்பாற்றும் பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்து விட்டு உடனே வந்துவிடுவேன்,

    இது உறுதி" என்றது இரண்டாவது மான்.

    அதன் உறுதிமொழியை நம்பிய வேடன் அதனையும் செல்ல விடுத்தான்.

    மூன்றாவது யாமத்தில் ஆண்மான் "நாங்கள் ஒருவரை ஒருவர் தேடி வந்தோம். எனினும், ஒருவரை ஒருவர் சந்திக்க இயலவில்லை.

    சிறிது நேரம் கொடுங்கள், என் குட்டிகளை அவற்றின் தாய்களிடம் ஒப்படைத்து, உடனே வந்து விடுகிறேன், இது உறுதி என்றது ஆண் மான்.

    அந்த ஆண் மானையும் சென்றுவர விடுத்தான் வேடன்.

    நான்காம் யாமம் வந்தது.

    இரண்டு பெண் மான்களும், ஆண் மானும் ஆக மூன்று மான்களும் தடாகத்தின் கரைக்கு வந்தன.

    மூன்று மான்களையும் வேட்டையாட அம்பு தொடுக்க முயன்றான்.

    அப்போதும், குடுவை நீர் சிறிது விழுந்தது. மரத்தின் இலைகளும் விழுந்தன.

    இச்சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாள்.

    வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.

    நான்கு யாமங்களிலும் உதிர்ந்த மர இலைகள் வில்வதளங்கள்!

    அவ்வாறே, நான்கு யாமங்களிலும் குடுவையில் இருந்த நீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது.

    குருத்ருகன், சிவராத்திரி நாளில், உண்ணாமல் இருந்து, நீர் ஊற்றி அபிஷேகம் செய்து,

    வில்வர்ச்சனை செய்ததாக எண்ணிய சிவபெருமான் அவ்வேடனுக்குப் பெரும்பேறு அளித்தான்.

    இவ்வரலாறு சிவமகாபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

    நாமும் சிவராத்திரி நாளில் ஈசனை வழிபட்டுப் பேரருள் பெறுவோம்.

    • தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
    • சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

    இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

    கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்ரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளன.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

    இதுதான் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக் கூடியவை.

    சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.

    தீபங்கள் தீய சக்திகளை அண்டா வண்ணம் காக்கக் கூடியவை. வேண்டும் பலனைத் தரக்கூடியவை.

    சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவலோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.

    தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.

    மிகுந்த புண்ணியம் சேரும்.

    சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுவிறவியில் மகாபலி சக்கரவரத்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

    திருக்கார்த்திகை திருநாளன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.

    ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.

    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.

    • மனிதனுக்கு ‘நான்’ என்ற அகந்தையும் ‘என்னால் மட்டும் முடியும்’ என்ற ஆணவமும் இருக்கவே கூடாது.
    • இப்படி தலைக்கனம் பிடித்து அலைபவர்கள் பின்னாளில் அதற்காக நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

    மனிதனுக்கு 'நான்' என்ற அகந்தையும் 'என்னால் மட்டும் முடியும்' என்ற ஆணவமும் இருக்கவே கூடாது.

    இப்படி தலைக்கனம் பிடித்து அலைபவர்கள் பின்னாளில் அதற்காக நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

    இந்த உண்மை நன்கு தெரிந்து இருந்தும் சிலர் ஆணவத்தை கைவிடுவதில்லை.

    இறைவனை அணுகும்போதும் கூட பந்தா செய்வார்கள். அவர்களிடம் ஒரு மிடுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    இத்கைய ஆணவம் கொண்டவர்களை திருவதிகை ஈசன் தன் பக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலம் கொண்டவர்கள் இத்தலத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்பது ஐதீகம்.

    மூன்று அசுரர்களை அழித்து இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியதால் திருவதிகை தலத்தில் ஆணவக்காரர்களுக்கு இடம் இல்லை என்பது வேதவாக்காக உள்ளது.

    இதன் காரணமாக இத்தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் தங்கள் முழு மனதையும் வீராட்டனேசுவரிடம் சரண் அடையச் செய்து ஒப்படைத்து விடுகிறார்கள்.

    தங்கள் மனதில் வேறு எந்த ஆணவ சிந்தனையையும் வளர விடுவதில்லை.

    குறிப்பாக கருவறைக்குள் வரும்போது பணிவாக இருக்கிறார்கள்.

    ஈசனுக்கு கொடுக்கும் மலர்கள், நைவேத்தியங்களை கூட பவ்வியமாக கொடுக்கிறார்கள்.

    அதுபோல மூலவருக்கு தீபாராதனை காட்டப்படும்போது தலை குனிந்து நிற்கிறார்கள்.

    தீபத்தை கண்களில் ஒற்றிக் கொள்ளும் போதும் பயபக்தியுடன் இருக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல திருநீறு பூசும்போது தலையை நிமிர்த்துவது இல்லை. தலையை குனிந்து கொண்டே நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

    தலை குனிந்து வருபவர்களுக்கு ஈசனின் அருள் பார்வை நிச்சயம் கிடைக்கும்.

    பலன்கள் மடை திறந்த வெள்ளம்போல வந்து விடும். இதனால் 'தலை குனிந்து வந்தவர்கள் தலை நிமிர்ந்து செல்வார்கள்'.

    எனவே வீராட்டனேசுவரரை வழிபடும்போது பணிவு தேவை. மறந்தும் நெஞ்சை நிமிர்த்தி விடாதீர்கள்.

    இந்த ஈசனுக்கு ருத்ர அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது.

    இது தவிர விபூதி, சந்தனம், அபிஷேகம் செய்தும் வழிபடலாம்.

    இந்த வழிபாடு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத் தையும் நமக்குத் தரும்.

    ×