என் மலர்
வழிபாடு

துளசீஸ்வரர் - வில்வநாயகி
துளசியால் அர்ச்சனை செய்யப்படும் சிவன்
- அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார்.
- துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது துளசீஸ்வரர் கோவில். பொதுவாக சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் இக்கோவிலின் தனிச் சிறப்பாக சிவபெருமானுக்கு துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கயிலாயத்தில் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றது. இதைக் காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் குவிந்தனர். இதனால் பூமியின் வடக்கு பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது. இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்திசை நோக்கி செல்ல பணித்தார், சிவபெருமான். அதன்படி, கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு வந்த அகத்தியர், வரும் வழிகளில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் இக்கோவிலில் உள்ள சிவலிங்கம்.
அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசியால் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது சிவன் அசரீரியாக, ''நான் இங்குதான் துளசி செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்'' என்றார். இதையடுத்து சிவனின் குரல் கேட்ட இடத்திற்கு சென்றபோது அங்கு ஒரு சிவலிங்கம் தென்பட்டது. பிறகு, அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பூஜை செய்ய இப்பகுதியில் வேறு எந்த மலரும் கிடைக்காததால், அகத்தியர் துளசி இலைகளை கொண்டே அர்ச்சனை செய்தார். சிவபெருமானும் அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டு, சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
சுமார் 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சற்று திரும்பி ஈசான்ய மூலையை பார்த்து காணப்படுகிறார். துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் இவர், 'துளசீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம், 'வில்வநாயகி' என்பதாகும். இவர் ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், திங்கட்கிழமை அன்று இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருக்கச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்தூரில் இக்கோவில் அமைந்துள்ளது.






