என் மலர்
வழிபாடு

பார்வதிக்கு இடப்பாகம் தந்த சிவன்
- பார்வதிதேவி பாவத்தை போக்க தவம் செய்ய காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரைக்கு சென்றார்.
- திருவண்ணாமலைக்கு சென்று பார்வதிதேவி தவம் மேற்கொண்டார்.
கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தம் கைகளால் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. எங்கும் ஒரே இருள் சூழ்ந்தது. எல்லா தொழில்களும் செயலற்று போயின. இதனால் சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டியதன் பேரில் அவர் தனது நெற்றிக்கண்ணை லேசாக திறந்தார். அதன் மூலம் உலகில் இருள் விலகி வெளிச்சம் உண்டாது.
பார்வதிதேவி தனது செயலுக்கு வருந்தினார். பின்னர் பாவத்தை போக்க தவம் செய்ய காஞ்சிபுரத்தில் உள்ள கம்பா நதிக்கரைக்கு சென்றார். வெகுநாள் தவத்திற்கு பிறகு சிவன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். அதற்கு பார்வதிதேவி உங்கள் உடம்பில் இடப்பாகம் எனக்கு வேண்டும் என்றார்.
அதற்கு சிவபெருமான், 'நீ விரும்பியபடியே எனது இடப்பாகத்தை உனக்கு தருவோம். இந்த காஞ்சிபுரத்திற்கு தெற்கே நினைத்தாலே முக்தி தரும் புனித நகரமான திருவண்ணாமலை உள்ளது. அங்கு செல். நான் வந்து உனக்கு இடப்பாகம் தருவேன்' என்று கூறினார்.
அதன்படி பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அங்கு தவம் மேற்கொண்டார். அப்போது திருவண்ணாமலை பகுதிக்கு வந்த மகிடாசுரனுடன் போரிடும் சூழல் ஏற்பட்டது. பார்வதிதேவி, துர்க்கையை போருக்கு அனுப்பினார். பெரும் போராட்டத்திற்கு பின்னர் மகிடாசுரன் வீழ்த்தப்பட்டான். அவனது உடலில் இருந்து விழுந்த சிவலிங்கத்தை பார்வதிதேவி எடுத்தபோது அது கையில் ஒட்டிக்கொண்டது.
அந்த லிங்கம் விடுவிக்கப்பட நவதீர்த்தங்களில் நீராட வேண்டும் என்று கவுதம முனிவர் கூறியதை அடுத்து அங்கே தனது வாளால் பூமியை பிளந்து ஒன்பது தீர்த்தங்களும், புண்ணிய குளங்களும் தோன்ற செய்தார். பின்னர் பார்வதி தேவி அந்த தீர்த்தங்களில் நீராடி பாவத்தை போக்கினார்.
பிறகு அண்ணாமலை கோவிலுக்கு சென்று வணங்கினார். அப்போது மலையின் மீது ஒரு வெளிச்சம் உண்டானது. அதிலிருந்து தோன்றிய சிவபெருமான், உமையாளுக்கு தனது உடலில் இடப்பாகத்தை அளித்தார். அந்த காட்சியை கண்டு தேர்வர்களும், முனிவர்களும் வணங்கினர்.






