என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவபெருமான் மீனவராக வந்த கடற்கரை திருத்தலம்
    X

    பூவேந்தியநாதர் - பவளநிற வல்லி அம்மன்

    சிவபெருமான் மீனவராக வந்த கடற்கரை திருத்தலம்

    • அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார்.
    • ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது.

    சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் 64. அவற்றில், ஆழ்கடலில் யாருக்கும் அடங்காமல் பல அட்டூழியங்கள் புரிந்த பயங்கர சுறாமீனை அடக்கி, மீனவர் குல மகளாக அவதரித்த உமாதேவியை கரம்பிடித்து மண முடித்த திருத்தலமாய் மாரியூர் என்னும் கடற்கரை ஊர் உள்ளது. இங்கு பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணத்தில் 57-வது நிகழ்வாக நடைபெற்ற வலைவீசிய படலத்தைப் பற்றி பார்ப்போம்.

    தல வரலாறு

    ஒரு நாள் மாலைப்பொழுது தனிமையிடத்தில் பரம்பொருளாகிய ஈசன், நால்வகையான வேத நூல்களின் உட்பொருளை உமாதேவிக்கு விளக்கி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த விநாயகரும், முருகரும் அன்னையின் மடியில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர். இதை எதிர்பாராத உமாதேவி தன் கவனத்தை மாற்றி குழந்தைகளுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

    தர்மநெறி சாத்திரங்களைச் சொல்லும் வேத தத்துவங்களை புறந்தள்ளிவிட்டு, குழந்தைப் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பார்வதியை கோபத்துடன் பார்த்தார் ஈசன். ''எந்தவித தர்மமோ, முறையான விரத நெறிகளோ எதுவும் அறியாத மீனவர் குலத்தில் ஒரு பெண்ணாகப் பிறப்பாயாக'' என ஈசன், உமாதேவிக்கு சாபமிட்டார். இதனைக் கேட்டதும் பார்வதி மிகவும் கவலை அடைந்தாள்.

    இறைவன், "தேவி இதற்காக வருந்த வேண்டாம். நீ மீனவர் மகளாக வளர்ந்து பருவமங்கை ஆகும் வேளையில் நானே நேரில் வந்து உன் கரம் பிடிப்பேன்" என ஆறுதல் சொன்னார். தாய்க்கு இப்படியொரு சாபம் கொடுத்த தந்தையின் செயலைக் கண்டு ஆத்திரப்பட்டார் ஆனைமுகன். ''இந்த வேதங்களால் அல்லவா என் தாய்க்கு சாபம் கிடைத்தது. இவைகள் இனிமேலும் இங்கு இருக்கக்கூடாது'' என முடிவெடுத்தார். அடுத்த கணமே வேத சுவடிகளை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிந்தார்.

    அதே நேரத்தில் ஆறுமுகனும் தன் பங்குக்கு தனது தந்தையின் கையிலிருந்த சிவஞான போத சுவடிகளை பிடுங்கி கடலில் வீசினார். இதை சற்றும் எதிர்பாராத சிவபெருமான், திகைத்துப் போனார். இதனால் ஈசனின் கோபம், தாங்கள் தனித்திருக்கும் வேளையில் அனுமதியில்லாமல் குழந்தைகளை உள்ளே அனுமதித்த நந்திதேவன் மேல் திரும்பியது. "இத்தனை அசம்பாவிதங்களுக்கும் காரணமானவன் நீதான். எனவே, நீ பயங்கர சுறா மீனாகப் பிறந்து, பிறரது வசைகளுக்கு ஆளாவாய்" என சாபமிட்டார்.

    அதன்படி அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார். வருடங்கள் பல உருண்டோடியது. மணமுடிக்கும் பருவமங்கையாக பார்வதி வளர்ந்திருந்தார். அதே சமயம், அன்றாடம் ஆழ்கடலில் மீனவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகளைக் கொடுத்து வந்தது ஒரு கொடிய சுறா.

    ஒரு கட்டத்தில் இனியும் சுறாவின் அட்டூழியத்தை தாங்கிக்கொள்ள முடியாது என முடிவெடுத்த மீனவர் தலைவர், ஒரு அறிவிப்பையும் வெளியிட்டான். எவர் ஒருவர் ஆழ்கடலில் துன்புறுத்தும் சுறாவை அடக்கி பிடிக்கிறாரோ, அவருக்கு தன் மகளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்தார். இந்த தகவல் காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. அதே சமயம் இது தான் பார்வதிதேவியை ஆட்கொண்டு கரம்பிடிக்க வேண்டிய தருணம் என முடிவெடுத்தார் இறைவன்.

    ஒரு மீனவர் வேடம் பூண்டு மாரியூருக்கு வந்த இறைவன், சுறாவை அடக்க வந்திருப்பதாக ஊர்க்காரர்களிடம் கூறினார். உடனே கடலுக்குள் அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆழ்கடலில் ஆர்ப்பாட்டம் செய்துவந்த சுறாவை இறைவன் தனது வலையில் எளிதாக பிடித்தார். இதனால், கரையிலிருந்த மீனவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஏற்கனவே, மீனவ தலைவனின் வாக்குப்படி அவரது மகளான பார்வதியை கரம் பிடித்தார், இறைவன்.

    மாரியூர் கடலில் நடத்தப்படும் வலைவீசும் படலம் நிகழ்ச்சி

    இந்த சுவையான புராண நிகழ்வு நடந்ததை எடுத்துக்காட்டும் விதமாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமித் திருநாளில் கடலுக்குள் வலை வீசும் படலத்தை உண்மை சம்பவம் போல் நடத்திக் காட்டுகின்றனர். பதினொரு நாட்கள் இவ்விழா நடைபெறும். சுறாவை அடக்கி முடித்ததும் சுவாமி பூவேந்தியநாதர், அம்பாள் பவளநிற வல்லி திருமண நிகழ்வு கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் அலங்கார பந்தலில் வெகுவிமரிசையாக நடைபெறும். மணவிழாவையொட்டி நடைபெறும் பிரமாண்ட அன்னதானத்தில் திரளாக பக்தர்கள் கலந்துகொள்வர்.

    பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இடைக்குள நாடு என்ற உள்நாட்டுப் பிரிவின் கீழ் இப்பகுதி அடங்கி இருந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டப்பட்டன. சுவாமி சன்னிதியின் வலப்பக்கம் அம்பாள் கோவில் உள்ளது. செவிவழிச் செய்தியின்படி, வருணபகவான் தன் சாபம் நீங்க, இத்தல பரம்பொருளுக்கு லிங்க பிரதிஷ்டை செய்து வைத்தாராம்.

    ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது. இதில், வருணனது கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்டான். பல நாட்கள் கடலில் தத்தளித்த வருண பகவான், இறுதியில் மாரியூர் கடற்கரையில் வந்து தங்கினார். அங்கு, மனதில் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரது பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன், அவருக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தந்தார். வருண பகவான் கரையேறிய பகுதியாக இத்தல தீர்த்த கட்டம் விளங்குவதால் 'வருண தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் இதை நினைவுகூரும் விதமாக வருணபகவானுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூடுவர். சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் பக்தர்கள் வசதிக்காக கோவில் எதிரே பெரிய சத்திரம் ஒன்று கட்டி வைக்கப்பட்டது. தல விருட்சம் அபூர்வமான முன்னை மரம் ஆகும். சுவாமி சன்னிதி உள்சுற்றில் உள்ள தீர்த்தக் கிணற்றில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் போட்டால் அது செழுவனுார் சிவாலய திருக்குளத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது.

    கோவில் தோற்றம்

    அமாவாசைதோறும் தல விருட்சத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருமணத் தடை, கணவன்- மனைவி ஒற்றுமை, வேலைவாய்ப்பு, நீண்ட காலமாக இருக்கும் கோர்ட்டு வழக்குகள் ஆகிய பிரச்சனைகளுக்கு யாகம் வளர்த்து பரிகார பூஜை செய்யப்படுகிறது.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால வேளைகளில் பவளம் மகளிர் குழுவினரால் அம்பாள் துதிப்பாடல்கள் பாடப்படுகிறது. தினமும் நான்கு கால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை முதல் சோம வாரத்தில் 108 சங்காபிஷேக வழிபாடு, ஆடிப்பூரம் அம்பாளுக்கு வளைகாப்பு, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி ஐயப்பன் சன்னிதியில் விரதமிருக்கும் பக்தர்களின் பஜனை வழிபாடு நடைபெறும். கோவில், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து வாலிநோக்கம் செல்கிற நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் மாரியூர் கடற்கரைத் தலம் உள்ளது.

    Next Story
    ×