என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சயன கோலம்"

    • உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார்.
    • விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அனைத்திற்கும் ஆதியாகவும் கருதப்படுபவர், சிவபெருமான். பல கோவில்களில் சிவபெருமானை லிங்க வடிவிலும், நடராஜர் ரூபத்திலும் தரிசித்திருப்போம். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவபெருமான் காட்சி தரும் அரிதான கோவில் ஆந்திராவில் உள்ளது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது, சுருட்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குதான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார்.

    தல வரலாறு

    புராணத்தின்படி, இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, பெருமாளின் உதவியுடன் பாற்கடலை கடைய முற்பட்டான். ஒருபுறம் தேவர்கள், மறுபுறம் அசுரர்கள் என வாசுகி பாம்பை கயிறாக திரித்தும், மந்திர மலையை மத்தாக மாற்றியும் பாற்கடலை கடைந்தனர். அப்போது, வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. அதனால், தேவர்களும், அசுரர்களும் அஞ்சினர். இந்த விஷத்தால் அனைத்து உலக உயிர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டது. எனவே அனைவரும் சிவபெருமானிடம் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.

    உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார். மிகக்கொடிய விஷம் என்பதால் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை அழுத்தி பிடித்தார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்று விட்டது. இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன்' என்ற பெயர் உண்டானது.

    அதன்பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது, விஷம் அருந்தியதால் சிவபெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து படுத்து (சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளி எனும் இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவபெருமான் இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் சயன கோலத்தில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். பார்வதி தேவி, பக்தர்களால் 'சர்வமங்களாம்பிகை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோவிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு நந்திகேஷ்வரரை தரிசிக்கலாம்.

    பிரதோஷ வழிபாடு

    இக்கோவிலில் பிரதோஷக்கால வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில்தான் முதல்முதலில் பிரதோஷம் நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகே மற்ற சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் திருவாதிரை, மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

    சனிப்பிரதோஷத்தில் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமை பலப்படும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

    இத்தல சிவபெருமானிடம் வேண்டியது நிறைவேறியதும், பிரதோஷம் அன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வந்து வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 59 கி.மீ. தொலைவில் சுருட்டப்பள்ளி எனும் இடத்தில் கோவில் உள்ளது.

    • சுருட்டப்பள்ளி பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிறந்த தலம்.
    • இங்கு சயன கோலத்தில் காட்சி தரும் சிவனை தரிசிக்கலாம்.

    சுருட்டப்பள்ளி:

    பிரதோஷத்திற்கு பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்று சுருட்டப்பள்ளி. இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது.

    சிவபெருமானை பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் உருவானதே பிரதோஷத்தை ஒட்டி தான். பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோவிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது.

    துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தார் இந்திரன். அசுரர்கள் இந்திரனின் அரசை கைப்பற்றினர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெறவேண்டும் என தேவகுரு பிரகாஷ் பத்தி தெரிவித்தார். அதன்படி திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.

    அப்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து அதிலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என சிவபெருமானை வேண்டினர்.

    சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்துவரும்படி கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும், உலகமும் அழிந்துவிடும். எனவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எங்களைக் காத்திடுங்கள் என சிவனிடம் மன்றாடினர்.

    உடனே சிவன் அந்தக் கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி தேவி, சிவனை தன் மடியில் கிடத்திக் கொண்டு சிவபெருமானின் வாயில் இருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கழுத்தின் பகுதியில் கைவைத்து அழுத்தினார். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. இதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் அமுதாம்பிகை ஆனார். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார்.

    அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது.

    சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது.

    சிவபெருமான் சுருட்டப்பள்ளி ஆலயத்தில் அம்மன் மடியில் படுத்தவாறு இருப்பதைப் பார்க்கலாம். இந்தத் தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதம் நடைபெறும் பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கிய செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருக்கின்றது.

    ×