search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahma"

    • பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார்.
    • அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு.

    கிரேதாயுகம், திரேதாயுகம் துவபராயுகம், கலியுகம் என்ற 4 யுகங்களுக்கு முன்னர் மணியுகம் ஒன்று இருந்ததாகவும் அதில் தான் அன்னை ஆதிபராசக்தி தோன்றியதாகவும் அதில் தான் அனைத்து கடவுள்களையும் ஆதிபராசக்தி படைத்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. இந்த மணியுகத்தில் சிவபெருமானுக்கும், பிரம்மாவுக்கும் தலா ஐந்து தலைகள் இருந்ததாக தலவரலாறு கூறுகிறது.

    இதனால் பிரம்மனுக்கு கர்வம் அதிகரித்தது. தவமிருக்கும் முனிவர்களிடம் எல்லாம் சென்று சிவனைப் போல என்னாலும் வரம் தரமுடியும் ஆகையால் சிவனை விடுத்து என்னை நோக்கி தவமிருங்கள் என்று கூறி வருகிறார்.

    இதை ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைக்கிறார். ஆகையால் சிவபெருமானிடம் பிரம்மனின் 5 தலைகளில் ஒரு தலையை வலது கையால் கிள்ளி எடுத்து விடுங்கள் என்று கூறுகிறார்.

    அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டு அந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்.

    ஒருநாள் பார்வதி, பிரம்மன் இடத்திற்கு சென்று வேண்டுமென்றே வணங்குகிறேன் நாதா என்கிறார். இதை கேட்ட பிரம்மன் அனைவருக்கும் படியளக்கும் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதிக்கு தன் கணவர் யார் என்று அறியாமல் என்னைப் பார்த்து "நாதா" என்கிறார் என்று கூறியபடி பலமாக சிரிக்கிறார். இது தான் பிரம்மனின் கர்வத்தை அடக்க சரியான தருணம் என்று பார்வதி, சிவபெருமானிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்.

    இதற்காக காத்திருந்த சிவபெருமான் கோபம் கொண்டு பிரம்மனின் 5 தலைகளில் ஒருதலையை தன் வலது கரத்தால் கிள்ளி எடுத்து விடுகிறார்.

    வலியால் துடித்த பிரம்மன், சிவனைப் பார்த்து என்னிடம் இருந்து கிள்ளிய தலை உன் கரத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளட்டும், நீ திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து உண்பாய் அது மட்டுமல்லாமல் திருவோட்டில் போடப்படும் உணவுகளை உன் கையில் ஒட்டிக் கொண்டுள்ள என் தலையே சாப்பிட்டு விடும். உன் பசியாற சுடுகாட்டு சாம்பலை உட்கொண்டு காடு மேடெல்லாம் அலைந்து திரிவாய் என்று சாபமிட்டு விடுகிறார்.

    சரஸ்வதியும், தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியைப் பார்த்து "உன் அழகு உருவம் மறைந்து வயதான கிழவியாக மாறக்கடவது"அது மட்டுமல்லாமல் கொக்கு இறகை தலையில் சூடிக்கொண்டு உடலெங்கும் கந்தல் ஆடை அணிந்து அலைந்து திரிவாய்" என சாபம் கொடுக்கிறார்.

    பதிலுக்கு சிவபெருமானும், பார்வதியும், பிரம்மா மற்றும் சரஸ்வதியை பார்த்து, "உங்கள் இருவருக்கும் தனி கோவில்கள் இன்றி, விழாக்கள் இன்றி இருக்கக் கடவது" என சாபம் இட்டு விடுகின்றனர். அவரவர் சாபத்திற்கேற்ப அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    பார்வதி தேவி பல இடங்களில் அலைந்து திரிந்து திருவண்ணாமலை சென்றடைகிறார். அங்கு துர்வாச முனிவரிடம் தன்நிலையை பற்றி எடுத்துக் கூறுகிறார்.

    அனைத்தையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த முனிவர் அம்மனை பார்த்து, "இங்கிருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் 3 முறை மூழ்கி எழுந்தால் சாப விமோசனம் கிடைத்து பழைய உருவம் அடைவீர்கள் பின்பு கிழக்கு நோக்கி சென்று மலையரசன் ஆட்சி செய்யும் மலையரசன் பட்டிணத்திற்குச் (தற்போதுள்ள மேல்மலையனூர்) சென்று அங்கு கோவில் கொள்ளுங்கள். அப்போது சிவபெருமான் அங்கு வருவார். அவருக்கு தங்கள் மூலம் சாப விமோசனம் கிடைக்கும்" என்று வழிவகை கூறுகிறார்.

    அதன்படி பார்வதி தேவி பிரம்ம தீர்த்தத்தில் நீராடியவுடன் பழைய உருவம் கிடைக்கிறது. பின்பு கிழக்கு நோக்கி தனது பரிவாரங்களுடன் மலையரசன் பட்டிணம் என்கிற மேல்மலையனூருக்கு வருகிறார். வரும் வழியில் இரவாகி விடுகிறது. அதனால் தாயனூர் என்கிற இடத்தில் தங்கி விடுகிறார்.

    அப்போது தன்னுடன் வந்துள்ள பூதகணங்கள் பசிக்கிறது என்கின்றன. உடனே அங்கு பனை மரங்கள் வைத்திருப்போரிடம் பதநீர் கேட்கிறார். அவர்கள் தரமறுக்கிறார்கள். உடனே இங்கு பனைமரங்களே இல்லாமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிடுகிறார். அதன்படி அங்கு பனைமரங்கள் மறைந்து விட்டன (இன்றும் இங்குள்ள ஏரியில் பனை மரங்கள் இல்லாமல் இருப்பதை காணலாம்.)

    விடிந்ததும் அங்குள்ள பெரிய ஏரியில் குளிப்பதற்காக தான் கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தை கழற்றி ஓரிடத்தில் வைக்கிறார். பின்பு ஏரியில் இறங்கி நீராடிவிட்டு கரை ஏறும்போது கையில் இருந்த மோதிரம், காலில் இருந்த மெட்டி ஆகியவை காணாமல் போயிருந்ததை அறிகிறார். அதனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    நமக்கு ஏற்பட்ட இந்த நிலை எந்த மக்களுக்கும் நேரக்கூடாது என நினைத்து இந்த ஏரியில் விழல்கள் (புற்கள்) முளைக்காமல் போகட்டும் என்று பார்வதிதேவி சாபமிட்டு விடுகிறார். அன்றில் இருந்து இன்று வரை இங்குள்ள ஏரியில் விழல்கள் (உயரமாக வளரும் ஒரு வகை புல்) வளருவதில்லை.

    தன்னுடைய கூந்தலை துடைக்கும்போது அதில் இருந்து ஒரு சடைமுடி கீழே விழுந்து ஒரு ஆண் உருவம் எடுத்து நிற்கிறது. அம்மன் அவரை ஆசிர்வதித்து "நீ இக்கரையில் ஜடாமுனீஸ்வரனாக கோவில் கொண்டு விளங்குவாய். நான் தங்க போகும் மலையரசன் பட்டிணம் (மேல்மலையனூர்) என்கிற இடத்தில் எனக்கு பூஜை செய்பவர்களுக்கு குலதெய்வமாக இருந்து அருளாசி வழங்குவாய் என்று கூறிவிட்டு தான் தங்கிய இடத்திற்கு சென்றார்.

    தான் கழற்றி வைத்த ஆரம் ஒரு பெண்ணாக உருமாறி அம்மனை வணங்கி நின்றது. அம்மா, இன்றில் இருந்து நீ! முத்தாரம்மன் என்ற பெயரில் அருளாசி வழங்குவாய். எனக்கு மேல்மலையனூரில் பூஜை செய்பவர்கள் ஆண்டுதோறும் ஆடி மாதம் உனக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வார்கள் என்று ஆசி வழங்கி விட்டு மலையரசன் பட்டிணத்துக்கு (மேல்மலையனூர்) சென்று அங்குள்ள பூங்காவனத்தில் புற்றில் பாம்பாக உருமாறி நின்றார்.

    (அம்மனுக்கு பூங்காவனம் என்ற பெயரும் உண்டு) திடீரென புற்று உருவானதைக் கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த வீரன், சூரன், உக்கிரன் (இவர்கள் மீனவ இனத்தை சேர்ந்தவர்கள்) என்பவர்கள் அஞ்சி நடுங்கினர். அங்கு பார்வதிதேவி தோன்றி மகன்களே பயப்படாதீர்கள், எனக்கு நீங்கள் தினமும் பூஜை செய்து வாருங்கள். உங்கள் வம்சத்தை நான் காப்பேன் என்று கூறி மறைந்தார்.

    அன்றில் இருந்து அந்த புற்றின் மீது மழை, வெயில்படாமல் இருக்க 4 குச்சிகளை நட்டு அதன் மீது வேப்பிலை பரப்பி பந்தல் போட்டனர். புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு வந்தனர். இதைப் பார்த்த அரண்மனைக் காவலர்கள் மலையரசனிடம் தெரிவிக்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த மன்னன் அந்த புற்றை அகற்றுமாறு கட்டளை இட்டான்.

    முதலில் 2 பேர் சென்று புற்றை இடிக்க கடப்பாரையை ஓங்கினர். அவர்களை 2 பூதங்கள் விழுங்கி விட்டன. அங்கிருந்த அரண் மனைக்காவலர்கள் ஓடிச்சென்று மன்னனிடம் நடந்ததைக் கூறினர்.

    அவன் மீண்டும் அரண்மனைக காவலர்கள் அனைவரையும் புற்றை இடிக்க அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று புற்றை இடிக்க முயற்சித்த போது மீண்டும் பூதங்கள் தோன்றி தகவல் சொல்ல ஒரு காவலனை தவிர அனைவரையும் விழுங்கி விட்டது. அந்த காவலன் ஓடிச்சென்று நடந்தவற்றை கூறினான்.

    மன்னனே நேரடியாக வந்து புற்றை இடிக்க முற்பட்ட போது சகோதரர்கள் வீரன், சூரன், உக்கிரன் மூவரும் மன்னரை வணங்கி நம்மை காப்பதற்காகவே ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி வந்துள்ளார். தாங்களும் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை வைத்து அம்மனுக்கு தொண்டு செய்யுங்கள் என்று கூறினர்.

    அதன்படியே மன்னரும் கடவுள் நம்பிக்கை கொண்டு நான்கு குச்சிகளை கொண்ட பந்தலை எடுத்து விட்டு கல்தூண்களைக் கொண்டு மண்டபம் எழுப்பினார். இன்றும் புற்றுக்கு மேல் உள்ள 4 கல்தூண் மண்டபம் மலையரசன் கட்டிய மண்டபம் என்றே முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதுள்ள கோபுரம், முன்பு உள்ள கல்மண்டபம் ஆகியவை முற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டதென்று அதன் கட்டிட அமைப்பு மற்றும் கல்தூண்களில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பல இடங்களில் அலைந்து திரிந்த சிவபெருமானிடம், மகாவிஷ்ணு, ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவி மேல்மலையனூரில் குடிகொண்டுள்ளார் அங்கு சென்றால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதன்படி சிவபெருமான் மேல்மலையனூருக்கு வருகிறார்.

    மகாவிஷ்ணு அவரின் வருகையை தன் தங்கையான பார்வதிதேவியிடம் சிவபெருமான் இங்கு வந்து பிச்சை கேட்கும்போது "அவரை உள்ளே தங்க வைக்காமல் மயானத்தில் தங்குமாறு கூறிவிடு".

    பின்பு நவதானியங்களைக் கொண்டு சுண்டல்,கொழுக்கட்டை ஆகியவற்றை செய்து அதை பிசைந்து 3 கவளங்களாக (உருண்டைகள்) ஒரு தட்டில் வைத்துவிடு, மறுநாள் காலையில் சிவன் தங்கி இருக்கும் மயானத்திற்கு அந்த உணவை எடுத்துச் செல், முதல் உருண்டையை சிவன் கையில் உள்ள திருவோட்டில் போடு, அதை அந்த பிரம்மனின் தலை சாப்பிட்டு விடும் 2-வது உருண்டையையும் அதில் போடு அதையும் அந்த தலை சாப்பிட்டு விடும் 3-வது உருண்டையை திருவோட்டில் போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்துவிடு, உணவின் சுவையில் மயங்கிக் கிடக்கும் பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து கீழே இறங்கி அந்த உணவை சாப்பிடத் தொடங்கும் அப்போது நீ! ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை உன் வலது காலால் மிதித்து விடு என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி அம்மனும் செய்வதாக தெரிவிக்கிறார்.

    சிவபெருமான் அம்மன் குடிகொண்டுள்ள இடத்திற்கு வந்து "தாயே பிட்சாந்தேகி" என்று கேட்கிறார். உடனே வெளியில் வந்து விநாயகரிடம், உன் தந்தை இங்கு வந்துள்ளார். அவருக்கு சாபவிமோசனம் கிடைக்க இருப்பதால்

    நீ உட்காரமல் நின்று கொண்டு காவல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    அதன்படியே விநாயகரும் ஒப்புக்கொண்டு நின்றிருந்தார். பின்பு அம்மன், சிவபெருமானிடம் உணவு சமைத்து எடுத்து வரும்வரை அருகில் உள்ள மயானத்தில் தங்கி இருக்குமாறு கேட்கிறார். சிவபெருமானும் ஒப்புக்கொண்டு மயானம் செல்கிறார்.

    அங்கு இருந்த சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசிக் கொள்கிறார். பின்பு பசிக்காக ஒரு பிடி சாம்பலை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். ஆனால் பிரம்மனின் தலை அந்த சாம்பலை உட்கொள்ளவில்லை. தன் அண்ணனான மகாவிஷ்ணு கூறியபடியே பார்வதி தேவி 3 உருண்டைகளை தட்டில் வைத்து மயானம் நோக்கி புறப்பட்டுச்செல்கிறார். அங்கு சென்ற அவர் தட்டில் இருந்த முதல் உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுகிறார்.

    அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடுகிறது. 2-வது உருண்டையையும் திருவோட்டில் போடுகிறார், அதையும் அந்த தலை சாப்பிட்டு விடுகிறது. 3-வது உருண்டையை எடுத்து திருவோட்டில் போடுவது போல் பாவனை செய்து கீழே இறைத்து விடுகிறார்.

    உணவின் சுவையில் மயங்கி கிடந்த பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து சிவபெருமான் கையைவிட்டு கீழே இறங்கி உணவை தேடித்தேடி சாப்பிடத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த பார்வதி தேவி ஆங்கார உருவம் கொண்டு அந்த தலையை தன் வலது காலால் மிதித்தார். பிரம்மனின் தலை, வலியால் துடித்தும் விடாமல் அம்மன் தன் காலில் அழுத்தினார்.

    சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதால் ஆனந்த தாண்டவம் ஆடியபடி சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார். ஆங்கார உருவம் எடுத்ததால் பார்வதி தேவியை அங்காளபரமேஸ்வரி என்றும், ஆனந்தாயி என்றும் பூங்காவனத்தில் தங்கியதால் பூங்காவனம் என்று அழைக்கப்படுகிறார்.

    சிவபெருமான் ஆனந்ததாண்டவம் ஆடியதால் தாண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவன் வந்து இங்கு வந்து தங்கிய இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் பெரிய உருவமாகவும் அம்மனின் வலது பக்கத்தில் சிவபெருமான் (தாண்டேஸ்வரராக) ரிஷப வாகனத்தில் அமர்ந்து சிறிய உருவமாக காட்சி தருகிறார்கள். கருவறையில் அம்மனும், சிவபெருமான் உருவ வடிவத்தில் (மற்ற இடங்களில் லிங்க வடிவில்) அருள்பாலிப்பது வேறு எங்கும் காணமுடியாத காட்சி ஆகும்.

    ஆவேசமடைந்த அங்காள பரமேஸ்வரி அம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை.கடைசியில் மகாவிஷ்ணுவை அணுகுகின்றனர். அவரும் அழகான தேரை உருவாக்கி அதில் அமர வைத்து பூங்காவனத்தை வலம் வந்தால் அம்மனின் சினம் குறையும் என ஆலோசனை கூறுகிறார். அவர்களும் ஒப்புக்கொண்டு செல்கின்றனர்.

    அதன்படி தேவலோக சிற்பியான விஷ்வகர்மாவை அழைத்து தேர் உருவாக்க சொன்னார்கள். அதன்படி 4 வேதங்கள் தேர் சக்கரங்களாகவும், தேவர்கள் ஒரு பகுதியினர் தேரின் அடிபீடமாகவும் தேர்க்கால்களாகவும், சங்கிலியாகவும் மாறுகின்றனர். மேகங்கள் தேர் சீலைகளாகவும், மகாவிஷ்ணு தேர் கலசமாகவும், குடையாகவும் மாறி அழகான தேராக காட்சி தருகின்றனர்.

    இதை பார்த்த அங்காளபரமேஸ்வரி அம்மன் அதன் மீது ஏறி அமர்கிறார். மற்ற தேவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து அம்மன் குடிகொண்டுள்ள பூங்காவனத்தை வலம் வந்து நிலை நிறுத்துகின்றனர். அம்மனின் சினம் முற்றிலும் தனிந்து விடுகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அம்மனும் அவர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

    இதை நினைவுபடுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் வாகை, பனை புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு புதியதாக தேர் உருவாக்கப்பட்டு மாசி பெரு விழாவின் 7-ம் நாள் வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது

    • பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம்
    • அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கப்படுகிறாள்.

    திருப்பட்டூர் - பிரமாண்டமான பிரம்மா பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோவில்கள் மட்டுமே இருக்கின்றன.

    அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே.

    திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார். திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் இறைவி, பிரம்மநாயகி.

    ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.

    அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.

    ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும். உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.

    இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான். வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும், கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.

    இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!

    திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா. குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.

    படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.

    அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.

    மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்த தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன. பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.

    பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார். அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க! என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.

    திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும், அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.

    பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள். பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.

    வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று. உட்பிராகாரத்தில் கற்பக விநாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.

    தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.

    அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.

    ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களை தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.

    இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.

    • பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்கள் உள்ளன.
    • பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.

    பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்பு தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாக கருதி ஆணவம் கொண்டார்.

    அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையை கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

    பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.

    "என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

    பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

    திருவிழா

    இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும். பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.

    சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

    திறக்கும் நேரம்

    காலை 7.30 மதியம் 12 மணி, மாலை 4 இரவு 8 மணி. வியாழனன்று காலை காலை 6 மதியம் 12.30 மணி.

    இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

    குரு பரிகார தலம்

    அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

    குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு

    சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

    ஞானஉலா அரங்கேற்றம்

    சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐய்யனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

    ×