என் மலர்
வழிபாடு

வரமாக மாறிய சாபம்
- வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன.
- அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
சுக்ரீவரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். இவர் வானரப் படையில் சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார். வனவாசத்தின்போது சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைத்தான். இதனை அனுமன் மூலமாக அறிந்த ராமர், உடனே ராமேஸ்வரம் கடல் முனையை அடைந்து இலங்கைக்கு எப்படி செல்வது என்று யோசித்தார். கடல் மீது ஒரு பாலம் கட்டினால் மட்டுமே சீதை இருக்கும் இடத்துக்கு செல்ல முடியும் என்பதை உணர்ந்த ராமர், பாலம் கட்ட திட்டமிட்டார். சுக்ரீவனின் வானர படையின் உதவியுடன் பாலம் கட்டும் பணியை தொடங்கினார்.
வானர படைகள், பாறைகளை எடுத்து வந்து அனுமனிடன் கொடுக்க அனுமன் அதை கடலில் போட்டார். அந்த பாறைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஆனால் வானர படையில் உள்ள நளன் தண்ணீரில் போடும் பாறைகள் மட்டும் மிதந்தன. இதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அனுமன் எத்தனை முறை முயற்சி செய்தாலும் பாறைகளை தண்ணீரில் மிதக்க வைக்க முடியவில்லை.
இதைப் பார்த்து கொண்டிருந்த லட்சுமணன் ராமரிடம், ''அண்ணா, அனுமன் உள்பட மற்ற வானரப் படைகள் போடும் எல்லா பாறைகளும் நீரில் மூழ்குகின்றன. ஆனால் நளன் போடும் பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன. இதற்கு என்ன காரணம்'' எனக்கேட்டார்.
அதற்கு ராமர், ''ஒரு சமயம் வனத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி இறைவனை தியானித்தால் இறை அருள் அதிக பலன் தரும் என்பதால் தண்ணீரில் மூழ்கியபடி தவம் மேற்கொண்டார். அப்போது சிறுவயதில் இருந்த வானரமான நளன், அவர் மீது விளையாட்டுத்தனமாக கற்களை வீசி எறிந்தார். இதனால் கோபம் கொண்ட முனிவர், ''நீ எறியும் கற்கள் நீரில் மூழ்காமல் மிதக்கும்'' எனக் கூறி மீண்டும் தவத்தை தொடர்ந்தார். அப்போது அந்த மகரிஷி சாபமாக அளித்த வார்த்தை இன்று நமக்கு பாலம் கட்ட உதவியாக மாறி இருக்கிறது'' என்றார்.
நளனின் உதவியுடன் பாலம் சீக்கிரமாகவே கட்டப்பட்டது. பின்பு ராமர், ராவணனிடம் போர்புரிந்து சீதையை மீட்டார்.






