search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி?
    X

    பாராளுமன்ற தேர்தல்: மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி?

    • மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது.
    • மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது.

    இந்த முறை கோவை தொகுதியை தி.மு.க. தனக்கு வைத்துக்கொண்டு அதற்கு பதில் திண்டுக்கல் தொகுதியை கொடுத்து இருக்கிறது.

    திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 35 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து மீண்டும் போட்டியிட உள்ளது. 1977-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது அ.தி.மு.க. வேட்பாளரிடம் கம்யூனிஸ்டு வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

    1989-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய கம்யூனிஸ்டுக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 2014-ம் ஆண்டு அந்த தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட்டு 1.81 சதவீத வாக்குகளே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது தி.மு.க. கூட்டணியில் 4-வது முறையாக திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்டமான வெற்றி பெற்று இருந்தார்.

    எனவே இந்த தடவை மிக எளிதான வெற்றியை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்ய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் தொகுதியில் இதுவரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது இல்லை. ஆனால் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 தடவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த தடவை நிச்சயம் வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் உள்ளனர்.

    இதற்காக 3 பேர் பெயரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வேட்பாளராக தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாண்டிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கிடையே தீக்கதிர் பத்திரிகை ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று பரிசீலனை செய்யப்படுகிறது. மதுக்கூர் ராமலிங்கம் சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் என்பதால் திண்டுக்கல் தொகுதி மக்களை அதிகம் கவர வாய்ப்புள்ளது. எனவே மதுக்கூர் ராமலிங்கத்தை திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பிரகாசமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மதுரை தொகுதியில் தற்போது சு.வெங்கடேசன் எம்.பி.யாக உள்ளார். அவரையே மீண்டும் மதுரை வேட்பாளராக நிறுத்தலாமா? என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை தொகுதிக்கு மிக சிறப்பான சேவை செய்திருப்பதாக தி.மு.க. தலைவர்கள் பாராட்டுகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை உடனுக்குடன் வெளியில் தெரிவித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக சு.வெங்கடேசனுக்கு நல்ல பெயர் உள்ளது.

    அவரையே மீண்டும் களம் இறக்குமாறு தி.மு.க. தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    Next Story
    ×