என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை பெரியார்"

    • தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்தவர் தந்தை பெரியார்.
    • தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் "பெரியார் உலக"த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு @AsiriyarKV அவர்களிடம் வழங்கினேன்!

     

    பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
    • பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு அக்கட்சி தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • பெரியாரின் இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.
    • முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கேரள முதலமமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

    பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு.

    தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அங்கு, சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.

    பெரியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் நிலையில் உறுதி மொழி ஏற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.

    • தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உன் தாடி முளைத்தபோது

    சமூகத்துக்கு மீசை முளைத்தது

    இருட்டுச் சுவர்

    இடியத் தொடங்கியது

    கி.மு - கி.பி பழைய கணக்கு

    பெ.மு - பெ.பி புதிய கணக்கு

    நூற்றாண்டுகளாய்

    எங்கள் புலிகள்

    ஆடுகளுக்குப்

    புல்பறித்துக் கொண்டும்

    பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

    நகத்தில் கூர்மையும்

    முகத்தில் மீசையும்

    உண்டென்பதை

    புலிகளுக்கு நீதான்

    புலப்படுத்தினாய்

    நீறுகளை ஊதி

    நெருப்பை அடையாளம்காட்டிய

    சுற்றுப்பயணச் சூறாவளி நீ

    வர்க்கப் போரின்

    இன்னோர் வடிவம்

    உன் தர்க்கப்போர்

    நீ சொன்ன பிறகுதான்

    செருப்புத் தைத்தவன்

    கையில் இருந்ததைக்

    காலில் அணிந்தான்

    நிர்வாணமாய்

    நெசவு செய்தவன்

    ஆடை சூடினான்

    கலப்பையில் எழுதியவன்

    காகிதத்தில் எழுதினான்

    சூரியன் வந்ததும்

    உடுக்கள் என்னும்

    வடுக்கள் மறைவதுபோல்

    உன் வருகையால்

    வெள்ளை அழுக்கு

    வெள்ளாவிவைத்து

    வெளுக்கப்பட்டது

    பழைமைவாதப் பாம்படித்ததும்

    ஓலைக் குடிசைகளின்

    ஒட்டடை அடித்ததும்

    புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

    சிலம்பம் சுற்றியதும்

    உனது ஒற்றைக் கைத்தடிதான்

    மூலக்கூறு பிரித்தால்

    கடைசிவரை

    தங்கம் தங்கம்தான்

    உன் மரணத்தின்

    முன் நிமிடம்வரை

    நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

    கருப்பு நிலக்கரி வைரமாகக்

    காலம் ஆகும்

    கருப்பு வண்ணம் புரிதல்பெற

    இன்னும் ஒரு யுகமாகும்

    புகழ் வணக்கம்.

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    • சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
    • யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

    சென்னை:

    தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்படி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!

    உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!

    சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!

    யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

    அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!

    பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அ.தி.மு.க. தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!

    வாழ்க பெரியாரின் புகழ்! என்று கூறியுள்ளார். 



    • நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர்.
    • தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு அறிவித்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!

    நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்! என்று கூறியுள்ளார். 



    • பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்,

    "தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!

    தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!

    தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!"

    என்று தெரிவித்துள்ளார்.

    • தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தந்தை பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில் இரண்டு நூல்களையும் அவர் வெளியிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

    இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆக்ஸ்போர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!

    இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் மற்றும் முனைவர் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar நூலையும்;

    பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.

    ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது.

    உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறப்பு.
    • இரு நூல்களை பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!

    சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,

    தந்தை பெரியார் பெயரில், தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

    மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கண் திருஷ்டி படத்தை நீக்காவிட்டால் அந்த கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,

    இதனையடுத்து, பெரியார் நூலகம் கட்டப்படும் இடத்தில இருந்து கண் திருஷ்டி படம் அகற்றப்பட்டுள்ளது. 

    • அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாறாக தனக்கெதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கெதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த முதல் தகவல் அறிக்கைகள் எங்கே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இதனையடுத்து, எந்த விவரங்களும் இல்லாமல் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×