என் மலர்
இந்தியா

குக்கி இனப் பெண்ணை திருமணம் செய்த மெய்தி இன இளைஞரை கடத்திக் கொலை செய்து வீடியோ எடுத்த கும்பல்
- ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
- வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.
கடந்த 2023 இல் மணிப்பூரில் மெய்தி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் இரு இனத்தவருக்கும் மோதல் ஏற்பட்ட வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 258 பேர் வரை கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்த வருகின்றனர்.
2023 மே மாதம் அங்கு பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்லவம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பல பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். அதில் ஒருவர் அண்மையில் உடல் நலம் மோசமடைந்து உயிரிழந்தார்.
அவரை வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, 2 வருடங்கள் கடந்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
மறுபுறம் இரு இனத்தவர் இடையேயும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அவ்வபோது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த மெய்தி இன நபர் கடத்திக் கொலை செய்யப்ட்டுள்ளார்.
கொல்லப்பட்ட 38 வயதான மெய்தி இன இளைஞர் ரிஷிகாந்தா, மெய்தி மூகத்தினர் அதிகம் வாழும் கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
ரிஷிகாந்தா, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, குக்கி சமூகத்தினர் அதிகம் வாழும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இனக்கலவரத்தின் முன் நேபாள் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற அவர் இந்த வாரம் ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை, 'யுனைடெட் குக்கி நேஷனல் ஆர்மி' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல், துய்புவாங் என்ற இடத்திலிருந்து ரிஷிகாந்தாவை கடத்திச் சென்றுள்ளது.
கடத்தப்பட்ட ரிஷிகாந்தாவை நட்ஜங் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று அந்தக் கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது. இதை அந்த கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. அந்த வீடியோவில் ரிஷிகாந்த்தா, தன்னை கொல்ல வேண்டாம் என கெஞ்சுவது பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிந்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.






