என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல் - போலீசார் விசாரணை
- பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
- சரளாவின் பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
பீளமேடு:
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை வழக்கம் போல பயணிகள் வந்தனர். அப்போது அவர்களின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அங்கு வந்த பெண் ஒருவரின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவரது பைக்குள் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக விமான நிலைய இருப்பிட மேலாளர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்த துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அந்த பெண் கோவையை சேர்ந்த சரளா என்பதும், பெங்களூருவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் தலைமையிலான போலீசார் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கோவை பெண்ணிடம் துப்பாக்கி தோட்டா எப்படி வந்தது, அவர் இதனை யாருக்காக எடுத்து சென்றார் என்பது குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒரு பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.