என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mango"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் தித்திக்கும் சுவை உடைய சேலம் மாம்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் சேலம் மாம்பழத்தை ருசித்து வருகிறார்கள்.

    இத்தகைய சுவை வாய்ந்த சேலம் மாம்பழங்கள் சேலம் அயோத்தியாபட்டினம் குப்பனூர், வலசையூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், வனவாசி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக சேலம் குண்டு, சேலம் பெங்களூரா, அல்போன்சா இமாம் பசந்த், பங்கணப்பள்ளி, மல்கோவா செந்தூரா, குதாதத், கிளி மூக்கு உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் சேலத்தில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

    விரைவில் சீசன் முடியும் தருவாயில் தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 500 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாம்பழங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர நேரடி விற்பனை மற்றும் பார்சல் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான விளைச்சல் காணப்பட்டதால் சேலம் மார்க்கெட்டுகளில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை ஓரங்களிலும் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளிலும் வைத்து வியாபாரிகள் தெரு தெருவாக விற்பனை செய்து வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகள் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் அந்த நேரத்தில் மாம்பழம் விற்பனை சூடு பிடிக்கும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கி ருசிப்பார்கள்.

    ஆனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசன நிலவி வருகிறது. இதனால் மாம்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் அதிக அளவில் விளைச்சல் ஆன நிலையில் குறைந்த அளவிலே விற்பனையாவதால் சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அதன் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது. குறிப்பாக கிளி மூக்கு மாம்பழங்கள் 100 ரூபாய்க்கு 5 கிலோ வரை கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் அதையும் வாங்க ஆட்கள் இல்லாததால் சாலையோரம் ஆங்காங்கே அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விவசாயிகளிடம் வியாபாரிகள் 1 கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுவதால் மாம்பழ விவசாயிகள் பெரும்இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என்றும் வரும் காலங்களில் மாம்பழ விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கும் வகையில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசே மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதனால் சேலத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலம் தொடங்கியதிலிருந்து மழை பெய்ததால் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இதனால் போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு இழப்பீடு வழங்கி மாம்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார். 

    • ‘இந்தியாவின் மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
    • இந்தியாவுக்கு அர்த்தமுள்ள வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன்.

    லக்னோ:

    'இந்தியாவின் மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.

    சிறுவயதில் இருந்தே மாம்பழ கலப்பினத்தில் பரிசோதனை செய்ய தொடங்கிய அவர் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

    இந்நிலையில் அவர் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'ராஜ்நாத் ஆம்' என்ற புதிய வகை மாம்பழத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    இந்த புதிய வகை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மாலிகாபாத்தில் உள்ள அவரது பழத்தோட்டத்தில் அவரது தனித்துவமான ஒட்டு நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

    முன்னதாக மாம்பழ வகைகளுக்கு சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய், அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பிரமுகர்களின் பெயரை சூட்டிய கலிமுல்லா கான், தோட்டக்கலை மற்றும் பழ வளர்ப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கலிமுல்லா கான் கூறுகையில், இந்தியாவுக்கு அர்த்தமுள்ள வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன். இந்த பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

    • இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
    • மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் உழவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது; மாறாக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடப்பாண்டில் எந்த பயிரும் விளைச்சலுக்கு குறைவில்லை. ஆனால், அரசின் தவறான கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் தான் உழவர்களை பெரும் இழப்புக்கு ஆளாக்குகின்றன. தர்பூசணி பழங்களில் சிவப்பு சாயம் செலுத்தப்படுகிறது என்று தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் பரப்பிய அரைகுறையான விழிப்புணர்வு செய்தியால் தர்பூசணி பழங்களின் விற்பனை சரிந்து உழவர்கள் கடனாளி ஆனார்கள். இப்போது விலை வீழ்ச்சியைத் தடுக்காததால் மாம்பழ உழவர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.

    தமிழக அரசு உடனடியாக மாம்பழ உழவர்கள், வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப் பேசி மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
    • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.

    தற்போது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை ருசிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். அது இனிப்பு கலந்த பழம் என்று நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மாம்பழங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடங்கி செரிமானத்தை மேம்படுத்துவது வரை ஏராளமான நன்மைகளை கொண்டவை. இந்த சமயத்தில் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.

    1. சத்துக்கள் அதிகம்

    மாம்பழம் வெறும் இனிப்பு பழம் மட்டுமல்ல, சத்தானவை. ஒரு மாம்பழத்தில் (சுமார் 200 கிராம்) தோராயமாக 150 கலோரிகள், சுமார் 3 கிராம் நார்ச்சத்து மற்றும் தினசரி வைட்டமின் சி தேவையில் 75 சதவீதமும், வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதமும் கொண்டிருக்கிறது. அத்துடன் பி6, தாமிரம், வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் வழங்குகிறது. மாம்பழத்தில் கொழுப்பு மற்றும் சோடியமும் குறைவாக உள்ளது. மேலும் இயற்கை சர்க்கரைகள் நார்ச்சத்துடன் கலந்திருக்கின்றன. அதனால் செயற்கை இனிப்பு வகைகளை விட இது சிறந்த தேர்வாக அமைகிறது.

    2. சருமத்தை பிரகாசமாக்கும்

    மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கொலாஜனை உருவாக்கவும், மந்தமான சருமத்திற்கு பொலிவூட்டவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் மாம்பழத்தை சாப்பிடுவது சருமத்திற்கு பளபளப்பு சேர்ப்பதோடு இயற்கையாகவே சரும அழகை பிரகாசிக்க செய்யும்.

    3. செரிமானத்திற்கு உதவும்

    மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடைபெற உதவும். அதிலிருக்கும் அமிலேஸ் போன்ற இயற்கை நொதிகள் உணவை உடைப்பதை எளிதாக்கும். வயிறு உப்புசமாகவோ, மந்தமாகவோ இருப்பதாக உணர்ந்தால் மாம்பழங்கள் சாப்பிடலாம்.

    4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    மாம்பழங்களில் இருக்கும் வைட்டமின் சி பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கின்றன.



    5. கண் ஆரோக்கியத்தை காக்கும்

    கண்கள் வறண்டு போனாலோ, சோர்வடைந்தாலோ மாம்பழம் சாப்பிடுவது பலனளிக்கும். ஏனெனில் மாம்பழத்தில் வைட்டமின் ஏ, லுட்டீன், ஜியாசாந்தைன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கண் வறட்சி, சோர்வு மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

    6. பசியை சமநிலைப்படுத்தும்

    நன்கு பழுத்த மாம்பழத்தில் நார்ச்சத்துடன் கலந்திருக்கும் இயற்கையான இனிப்பு, நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். பசியை சமநிலைப்படுத்தி அதிகம் சாப்பிடாமல் தடுக்கும். உடல் ஆற்றலை பலப்படுத்தும்.

    7. முடியின் வலிமையை அதிகரிக்கும்

    மாம்பழத்தில் இருக்கும் போலேட், வைட்டமின்கள் ஏ, சி போன்றவை உச்சந்தலை மற்றும் முடிக்கு வலிமை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களாகும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். பருவ காலம் முழுவதும் முடிகள் வலுவாக இருக்க உதவும்.

    8. உற்சாகமாக வைத்திருக்கும்

    மாம்பழங்களில் உள்ளடங்கி இருக்கும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உடலுக்கு தேவையான இயற்கையான சக்தியை கொடுக்கும். அதனால் உற்சாகத்துடன் அன்றைய நாளை இயங்க வைக்கும்.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது.
    • கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தித்திக்கும் சுவையான மாம்பழங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ந் தேதி தொடங்கும் இந்த மாம்பழம் சீசன் தொடர்ந்து ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்தக்கால கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படும்.

    சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா, நடுசாலை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகிறது. இந்த தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் தினமும் சேலத்தில் உள்ள பல்வேறு குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் ஊழியர்கள் மூலம் ரகம் வாரியாக மாம்பழங்கள் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து தரமான பெரிய அளவில் உள்ள மாம்பழங்கள் வெளியூர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர சேலத்தில் உள்ள தெருவோர கடைகள், சிறிய, சிறிய, தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடைவீதிகளில் மாம்பழம் வாசம் கமகமவென வீசுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலத்தில் வசிக்கும் மக்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பார்சல்கள் மூலமும் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் மாம்பழங்கள் தேக்கம் அடையாமல் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாதம் 1-ந் தேதி முதல் சீசன் தொடங்கினாலும் இன்று முதல் 45 நாட்களுக்கு மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். சீசன் களை கட்டியுள்ளதால் விலையும் குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். சேலம் நகரின் அனைத்து தெருக்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது.
    • மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழம் சாப்பிட்டாலே போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா கூறுகிறார். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் பெரும்பாலும் பழங்களை தவிர்த்து விடுவர். பழங்களைத் தவிர்த்து சாப்பிடும் உணவு முறை மிகவும் மோசமானது என்றும் சீரான உணவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பழங்கள் அவசியம் என்றும் பழங்கள் ஊட்டச்சத்துக்கான முழுமையான அணுகுமுறை, உடல் எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

    ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு மாம்பழம் சிறந்தது என்று கூறும் ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சில நன்மைகளை எடுத்துரைக்கிறார்.

    சிம்ருன் சோப்ரா சிறப்பித்துக் காட்டும் சில நன்மைகள்:

    1. அளவாக உண்ணுங்கள்

    அதிக சுவை கொண்ட பழங்களில் மாம்பழம் முதன்மையானது. சுவை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அளவில்லாமல் உட்கொள்ள கூடாது. உணவு கட்டுப்பாடு முக்கியம். எந்த உணவையும் அதிகமாக சாப்பிடுவது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுத்து எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    2. ஒட்டுமொத்த கலோரிகளை சமநிலைப்படுத்துங்கள்

    உடல் தானாகவே கொழுப்புகளை அல்லது கலோரிகளை எரிப்பதற்கு முன்னதாகவே நாம் அதிக கலோரிகளை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுகிறது. மாம்பழங்களில் குறைந்த கலோரி அடர்த்தி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இவை இரண்டும் உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்க உதவும் . ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வழிவகை செய்யும்.



     3. நார்ச்சத்தை அதிகம் பயன்படுத்துங்கள்

    மாம்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது பசியைத் தணித்து, மனநிறைவை ஊக்குவிக்கிறது. இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவும்.

    4. மாம்பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள்

    மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பானவை. இருப்பினும், அவற்றின் நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நன்மையைப் பெற, மாம்பழச் சாற்றைக் குடிப்பதை விட முழு மாம்பழங்களை கடித்து சுவைத்து சாப்பிடுவது நல்லது, ஏனெனில் இது நார்ச்சத்தை நீக்குகிறது.

    5. ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழம்

    மாம்பழங்கள் உட்பட அனைத்து பழங்களும் அவற்றின் வைட்டமின் மற்றும் தாதுப்பொருள் உள்ளடக்கம் காரணமாக ஊட்டச்சத்து நிறைந்தவை. எனினும் மாம்பழம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த மாம்பழங்களை எடுத்துக்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா பரிந்துரைக்கிறார்.

    மேலும், அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் விளைபொருட்களில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி உள்ளார்.

    • உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது.
    • மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

    தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளில் மாம்பழம் முக்கியமான ஒன்று. வெப்ப மண்டலங்களில் பயிராகி, குளிர் பிரதேசங்களில் இருக்கும் மக்களை கூட கவர்ந்து இழுக்கும் பழம் என்றால் அது மாம்பழம் தான். எனவே இது 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது.

    உலகில் காணப்படும் வேறு எந்த பழத்திலும் இல்லாத இனிப்பு மற்றும் மணம் மாம்பழத்தில் உள்ளது. அது மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சி உள்பட பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி காணப்படுகிறது. மாம்பழம் உண்பதால் இதயம் நன்கு இயங்கும், கண் பார்வை தெளிவாகும், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த மாம்பழம் உதவுகிறது. இதில் காணப்படும் மாங்கிபெரின் எனப்படும் ஒரு வகை பாலிபீனால் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. மாம்பழத்தில் காணப்படும் நார்ச்சத்து செரிமான திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

    இது தவிர, மாம்பழத்தில் அமைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். கோடைக்காலங்களில் இயற்கை தரும் பழங்களில் தவிர்க்காமல் உண்ண வேண்டிய ஒன்று மாம்பழம் ஆகும்.

    • கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
    • தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் அதிகரித்து விற்பனை அமோகமாக காணப்படும். அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

    மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல்கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்தபடியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் வரத்து அதிகரித்து விடும்.

    அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களைகட்டும்.

    மே மாதத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மல்லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங்கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் நீட்டிக்கும்.

    இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.

    வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத்தானது 250 டன் முதல் 350 டன் வரை அதிகரிக்கும். முன்பெல்லாம் பெரிய லாரிகளில் வந்த மாம்பழங்கள் தற்போது டெம்போக்களில் அதிக அளவில் வருகின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் மாம்பழங்களின் விலை நிலவரம் குறித்து மாம்பழ வியாபாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    அல்போன்சா மாம்பழம் மொத்தமாக கிலோ ரூ.120 -க்கும், சில்லரைக்கு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி கிலோ ரூ.90-க்கும் (மொத்தம்), ரூ.150-க்கும் (சில்லரை) விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று செந்தூரா, இமாம்பசந்த் மாம்பழங்கள் முறையே ரூ.60, ரூ.150 மொத்தமாகவும், ரூ.80, ரூ.180-க்கு சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் ரக மாம்பழங்களின் விலை ஆகும். இதைவிட தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மாம்பழங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.

    • மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிக்கக்கூடாது.
    • மாம்பழம் சாப்பிடும்போது அன்று சாப்பிடக்கூடிய மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அளவை குறைத்து கொள்ள வேண்டும்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

    முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் எடையுள்ள மாம்பழத்தில் கிட்டத்தட்ட 60 கலோரிகள், 2 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவிலான சர்க்கரை உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி, ஈ, மற்றும் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. 51 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள பழம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை உட்கொள்ளலாம்.

    இருப்பினும், மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதன் பழுத்த நிலையை பொறுத்து மாறுபடும். நன்றாக பழுத்த மாம்பழம் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவையும், குறைவாக பழுத்த மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கும். எனவே, மிகவும் பழுத்த மாம்பழங்களை சாப்பிடக்கூடாது.

    சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    மாம்பழம் சாப்பிடும்போது அன்று சாப்பிடக்கூடிய மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அளவை குறைத்து கொள்ள வேண்டும். அத்துடன் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ள உணவுகள், குறைந்த கிளை செமிக் இன்டெக்ஸ் உள்ள பெர்ரி, கிவி போன்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மாம்பழம் உண்ட பின்னர் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் சற்று தாம திக்கப்படும்.

    மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடிக்கக்கூடாது. மாம்பழத்தை காலையில் 11 மணிக்கு ஒரு இடைப்பட்ட உணவாகவோ அல்லது மாலை வேளையிலோ சாப்பிடலாம். பெரும்பாலும் கார்போஹைட்ரேட் நிறைந்த மதியம் அல்லது இரவு உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    சர்க்கரை நோயாளிகள் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்த பிறகு மாம்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் மாம்பழம் சாப்பிடக் கூடாது. 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய மாம்பழத்தில் பாதி சாப்பிடலாம். மாம்பழங்களை சாப்பிடும்போது கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பாதாமி, அல்போன்சா வகை மாம்பழங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    • மண்டி உரிமையாளர்கள் மாம்பழங்களை பெட்டிகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர்.
    • மாங்காய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் இருந்து மாம்பழங்கள் சென்னை மற்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இது தவிர மண்டி உரிமையாளர்கள் மாம்பழங்களை பெட்டிகளில் அடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகின்றனர். இந்த ஆண்டு தற்போது மாங்காய்கள் மண்டிகளுக்கும், பழக்கடைகளுக்கும் வியாபாரத்திற்கு வந்துள்ளது.

    அடுத்த மாதம் முதல் கூடுதலாக விற்பனைக்கு மாங்காய்கள் வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:

    தற்போது அல்போன்சா மற்றும் செந்தூரா போன்ற மாங்காய்கள் விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு பிறகு கூடுதலாக மாங்காய் விற்பனைக்கு வரும். ஏப்ரல் மாத இறுதியில் மா அறுவடை சீசன் முழுவீச்சில் நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை சீசன் இருக்கும்.

    இந்தாண்டு மாங்காய் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது சேலம் மாவட்டம் நங்கவள்ளி, வரகம்பாடி, மல்லூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிகம் மாங்காய் வர தொடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
    • சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தென்னை, கரும்பு ,மக்காச்சோளம் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவு மாங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி , வாளவாடி, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ,கொழுமம், கொங்குரார் குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.

    மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மாமரத்தில் பூ பிடித்து காய்க்கத் துவங்கும். இந்த ஆண்டு பூ பிடித்த நிலையில் நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும். ஆனால் தற்போது கொத்துக்கொத்தாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.சுமார் இரண்டு டன் பூக்கள் வரை உதிர்ந்துவிட்டன. இதனால் விளைச்சல் பாதித்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் .ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம் .ஆண்டுக்கு ஒரு முறை சீசன் காலங்களில் விளையும் மாங்காய் மூலம் தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. பூச்சி தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே காட்டு யானைகள் தொல்லை உள்ளது. மாமரத்தில் பிஞ்சு பிடித்த உடன் அதன் வாசத்தை மோப்பம் பிடித்து வரும் யானைகள் பிஞ்சுகளை பெருமளவுக்கு தின்று விடும். இந்த நிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பூ உதிர்ந்து வருவதுகவலை அளிக்கிறது. எனவே தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    • ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் இன்று காலை மாம்பழம் மற்றும் தேங்காய் விவசாயிகளின் நலன்கருதி சிட்கோ மூலம் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் ராஜபாளையம்- தென்காசி ரோடு இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை முன்பிருந்து சின்மயா பள்ளி வழியாக 3 கி.மீட்டர் தொலைவில் வருவாய் கிராமம் அயன் கொல்லங்கொண்டான்-II -ல் 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.

    இதில் 2 கி.மீ பாதையாகவும், 1 கி.மீ பட்டா நிலமாகவும் உள்ளது. இந்த பட்டா நில உரிமை யாளர்களிடம் எம்.எல்.ஏ. பேசி ராஜபாளையத்திற்கு பெயர்போன சப்பட்டை மாங்காய்க்கு தொழிற்பேட்டை அமைப்பதன் முக்கியத்து வத்தை கூறினார். இதையடுத்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்க நில உரிமையாளர் சம்மதம் தெரிவித்தனர்.பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை அமைக்க சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதன் விளைவாக இடம் கண்டறியும் பணி தொடங்கி தற்போது இடம் கண்டறியப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்துதல் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன்.

    மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைந்தால் இந்த பகுதியை சுற்றியுள்ள பல்லாயிரக்கனக்கான மாம்பழச்சாகுபடி, தேங்காய் சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

    இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×