என் மலர்
நீங்கள் தேடியது "மாம்பழம் விலை வீழ்ச்சி"
- இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
- மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை. ஒரு டன் மாம்பழத்தை ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால் உழவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது; மாறாக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடப்பாண்டில் எந்த பயிரும் விளைச்சலுக்கு குறைவில்லை. ஆனால், அரசின் தவறான கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் தான் உழவர்களை பெரும் இழப்புக்கு ஆளாக்குகின்றன. தர்பூசணி பழங்களில் சிவப்பு சாயம் செலுத்தப்படுகிறது என்று தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் பரப்பிய அரைகுறையான விழிப்புணர்வு செய்தியால் தர்பூசணி பழங்களின் விற்பனை சரிந்து உழவர்கள் கடனாளி ஆனார்கள். இப்போது விலை வீழ்ச்சியைத் தடுக்காததால் மாம்பழ உழவர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.
தமிழக அரசு உடனடியாக மாம்பழ உழவர்கள், வணிகர்கள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகளின் உரிமையாளர்களை அழைத்துப் பேசி மாம்பழங்களுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழங்கள் மற்றும் மாம்பழக்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இவை அனைத்தும் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மாங்காய்களை மதுரை சாலையில் உள்ள கமிசன் கடையில் விற்பனை செய்வது வழக்கம்.
பொதுவாக மாங்காய்கள் பழுத்து மாம்பழங்களாக ஒருவாரம் காத்திருக்க வேண்டும். ஆனால் விரைவில் பழுக்க வைக்க சில வியாபாரிகள் ரசாயனகல் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மாங்காய்கள் ரசாயனகல்லில் உள்ள வீரியத்தால் ஒரேநாளில் பழுத்து விடுகிறது. ஆனால் இதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல்உபாதைகள் ஏற்படுகிறது.
மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே மாம்பழம் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் 10 முதல் 15 மாம்பழ பெட்டிகள் கொள்முதல் செய்த வியாபாரிகள் ஒரு பெட்டி வாங்குகின்றனர். மேலும் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது ரூ.10க்கு விற்பனையாகிறது. எனவே விவசாயிகள் மாம்பழங்களை என்ன செய்வது என தெரியாமல் சாலையோரங்களில் வீசிச்செல்கின்றனர்.
மழை இல்லை என்றால் வறட்சியால் பாதிப்பு. ரசாயனகல் பீதியால் நல்ல விளைச்சல் இருந்தபோதும் போதிய அளவு விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.






