என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோடையில் களைகட்டிய சீசன் - சென்னையில் மாம்பழம் விற்பனை அமோகம்
    X

    கோடையில் களைகட்டிய சீசன் - சென்னையில் மாம்பழம் விற்பனை அமோகம்

    • கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
    • தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் அதிகரித்து விற்பனை அமோகமாக காணப்படும். அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

    மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல்கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்தபடியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் வரத்து அதிகரித்து விடும்.

    அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களைகட்டும்.

    மே மாதத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மல்லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங்கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் நீட்டிக்கும்.

    இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.

    வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத்தானது 250 டன் முதல் 350 டன் வரை அதிகரிக்கும். முன்பெல்லாம் பெரிய லாரிகளில் வந்த மாம்பழங்கள் தற்போது டெம்போக்களில் அதிக அளவில் வருகின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் மாம்பழங்களின் விலை நிலவரம் குறித்து மாம்பழ வியாபாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    அல்போன்சா மாம்பழம் மொத்தமாக கிலோ ரூ.120 -க்கும், சில்லரைக்கு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி கிலோ ரூ.90-க்கும் (மொத்தம்), ரூ.150-க்கும் (சில்லரை) விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று செந்தூரா, இமாம்பசந்த் மாம்பழங்கள் முறையே ரூ.60, ரூ.150 மொத்தமாகவும், ரூ.80, ரூ.180-க்கு சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் ரக மாம்பழங்களின் விலை ஆகும். இதைவிட தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மாம்பழங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.

    Next Story
    ×