என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
சேலம் மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரிப்பு - இன்று முதல் 45 நாட்களுக்கு மாம்பழ சீசன் உச்சம்
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது.
- கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தித்திக்கும் சுவையான மாம்பழங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ந் தேதி தொடங்கும் இந்த மாம்பழம் சீசன் தொடர்ந்து ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்தக்கால கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படும்.
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா, நடுசாலை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகிறது. இந்த தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் தினமும் சேலத்தில் உள்ள பல்வேறு குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர் ஊழியர்கள் மூலம் ரகம் வாரியாக மாம்பழங்கள் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து தரமான பெரிய அளவில் உள்ள மாம்பழங்கள் வெளியூர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர சேலத்தில் உள்ள தெருவோர கடைகள், சிறிய, சிறிய, தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடைவீதிகளில் மாம்பழம் வாசம் கமகமவென வீசுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலத்தில் வசிக்கும் மக்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பார்சல்கள் மூலமும் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் மாம்பழங்கள் தேக்கம் அடையாமல் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாதம் 1-ந் தேதி முதல் சீசன் தொடங்கினாலும் இன்று முதல் 45 நாட்களுக்கு மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். சீசன் களை கட்டியுள்ளதால் விலையும் குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். சேலம் நகரின் அனைத்து தெருக்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.








