என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் 100 ரூபாய்க்கு 5 கிலோ மாம்பழம் விற்றும் வாங்க ஆள் இல்லை
    X

    சேலத்தில் 100 ரூபாய்க்கு 5 கிலோ மாம்பழம் விற்றும் வாங்க ஆள் இல்லை

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது மாம்பழங்கள் தான். அந்த வகையில் தித்திக்கும் சுவை உடைய சேலம் மாம்பழங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் சேலம் மாம்பழத்தை ருசித்து வருகிறார்கள்.

    இத்தகைய சுவை வாய்ந்த சேலம் மாம்பழங்கள் சேலம் அயோத்தியாபட்டினம் குப்பனூர், வலசையூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், வனவாசி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, மல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக சேலம் குண்டு, சேலம் பெங்களூரா, அல்போன்சா இமாம் பசந்த், பங்கணப்பள்ளி, மல்கோவா செந்தூரா, குதாதத், கிளி மூக்கு உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் சேலத்தில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

    விரைவில் சீசன் முடியும் தருவாயில் தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 500 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாம்பழங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், அரபு நாடுகளுக்கும் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர நேரடி விற்பனை மற்றும் பார்சல் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான விளைச்சல் காணப்பட்டதால் சேலம் மார்க்கெட்டுகளில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை ஓரங்களிலும் எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளிலும் வைத்து வியாபாரிகள் தெரு தெருவாக விற்பனை செய்து வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகள் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருக்கும் அந்த நேரத்தில் மாம்பழம் விற்பனை சூடு பிடிக்கும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கி ருசிப்பார்கள்.

    ஆனால் நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசன நிலவி வருகிறது. இதனால் மாம்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் அதிக அளவில் விளைச்சல் ஆன நிலையில் குறைந்த அளவிலே விற்பனையாவதால் சேலம் மாவட்டத்தில் மாம்பழ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு மாம்பழங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அதன் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது. குறிப்பாக கிளி மூக்கு மாம்பழங்கள் 100 ரூபாய்க்கு 5 கிலோ வரை கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் அதையும் வாங்க ஆட்கள் இல்லாததால் சாலையோரம் ஆங்காங்கே அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விவசாயிகளிடம் வியாபாரிகள் 1 கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக கூறப்படுவதால் மாம்பழ விவசாயிகள் பெரும்இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என்றும் வரும் காலங்களில் மாம்பழ விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கும் வகையில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அரசே மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதனால் சேலத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலம் தொடங்கியதிலிருந்து மழை பெய்ததால் விற்பனை கணிசமாக சரிந்துள்ளது. இதனால் போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு இழப்பீடு வழங்கி மாம்பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×