என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் த.வெ.க. தலைவர் விஜய்... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்த விமான நிலையம்
- மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது.
- அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






