என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா ஈரான் மோதல்"

    • போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    தொழில் நகரான கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வளைகுடா நாடுகளான குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வெட்கிரைண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இந்த வழித்தடமானது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்தும் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வந்தது.

    தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாலும், இந்த வழியாக சரக்கு போக்குவரத்து நடத்தப்படாது என முக்கிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளதாலும், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் சரக்கு போக்குவரத்து 20 முதல் 25 நாட்கள் வரை தாமதமாகிறது என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும்போது தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்தால் குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபடுகிறது. அத்துடன் போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய நிலை போன்ற அபாயங்களும் ஏற்பட்டுள்ளது.

    ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்த போர் பதற்றத்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோன்று வெட்கிரண்டர் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்க போர் பதற்றத்தால் வெட்கிரைண்டர்கள் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.

    இதுதொடர்பாக வெட்கிரைண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கோவையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கிரைண்டர்கள் ஏற்றுமதியாகின்றன.

    மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றத்தால் கடந்த சில நாட்களில் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களின் ஆர்டர்களை ரத்து செய்து விட்டனர். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனுப்பப்படாமல் தேங்கியுள்ளன.

    மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான 450 வெட் கிரைண்டர்கள், ஐக்கிய அரசு அமீரகத்தின் ஜபல் அலி துறைமுகத்தில் முடங்கியுள்ளது.

    வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருளுக்கான பணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் பதற்றத்தால் உயர்ந்துள்ள செலவினங்களை ஈடுகட்டும் வகையில் ஏற்றுமதிக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தகர்த்தது
    • ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    துபாய்:

    ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 28-ந் தேதி அந்த நாடு மீது போரை தொடங்கின. தலைநகர் டெஹ்ரானில் நடந்த அதிரடி தாக்குதலில் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

    இதனால் ஆவேசமடைந்த ஈரான் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் பயங்கரமான போர் மூண்டுள்ளது. உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த போர் நேற்று 5-வது நாளாக உக்கிரமாக நடந்தது.

    ஈரானின் பாதுகாப்பு படைகளை குறிவைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதனால் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு சத்தமும், அவசரகால படையினரின் சைரன் சத்தமுமாக காதைப்பிளந்தன.

    இதைப்போல அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தகர்த்தது. குறிப்பாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, ஈரானின் நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள், ஏவுதளங்கள் மற்றும் டிரோன்களை அழித்ததாக அமெரிக்க கடற்படை அதிகாரி பிரட் கூப்பர் கூறினார்.

    மறுபுறம் ஈரானும் இஸ்ரேலை நோக்கி நேற்றும் அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகர்களை சுற்றிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

    எனினும் ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்தும் ஈரான் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தியது.

    அந்தவகையில் அமெரிக்காவின் 5-வது கடற்படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனில் நேற்று காலையிலேயே சைரன்கள் ஒலித்ததை கேட்க முடிந்தது. இதைப்போல கத்தாரில் ஈரான் வீசிய 2 ஏவுகணைகளில் ஒன்று அல்-உதைத் தளத்தில் விழுந்ததாகவும், எனினும் இதில் சேதம் எதுவும் இல்லை என்றும் அந்த நாட்டு ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

    மேலும் சவுதி அரேபியாவிலும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கியமாக சவுதி அரேபியாவின் ராஸ்தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் தாக்குதல் நடந்தது. முன்னதாக கடந்த 2-ந் தேதி யும் இந்த நிறுவனத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதால் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதைப்போல ஈராக், சிரியாவை கடந்து துருக்கி நோக்கி வந்த ஈரானின் நீண்டதூர ஏவுகணை ஒன்றை மத்திய திரைக்கடல் பகுதியில் உள்ள நேட்டோ அமைப்பின் வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்தது.

    எனினும் இந்த ஏவுகணை துருக்கியை குறிவைத்து செலுத்தவில்லை என ஈரான் கூறியுள்ளது. அது சைப்ரசை நோக்கி செலுத்தப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் நடமாட்டத்துக்கு தடை விதித்துள்ள ஈரான், அதை மீறி அந்த வழியாக செல்லும் கப்பல்களை தாக்கி வருகிறது. அந்தவகையில் மால்டா கொடியுடன் சென்ற கப்பல் ஒன்றை நேற்று ஏவுகணை ஒன்று தாக்கியது.

    அந்த கப்பலில் இருந்த 2 ஊழியர்களை ஓமன் படைகள் காப்பாற்றியதாக கூறப்பட்டு உள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 4-வது தாக்குதல் ஆகும்.

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது.

    மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

    எனினும் போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை கூறியுள்ளது.

    ஆனால் இஸ்ரேலில் நிகழ்ந்த இறப்பு விவரங்கள் வெளியாகவில்லை. அங்கே இதுவரை 11 பேர் மட்டுமே இறந்ததாக அந்த நாடு கூறியுள்ளது.

    உலக நாடுகளை உலுக்கி வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவை நம்ப தயாரில்லை எனவும், நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம் எனவும் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர் ஒருவர் கூறினார்.

    இதைப்போல ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரி ஜானி தனது எக்ஸ் தளத்தில், 'நேட்டன்யாகுவுடன் சேர்ந்து தனது கோமாளித்தனமான செயல்களால், அமெரிக்க மக்களை ஈரானுடன் நியாயமற்ற போருக்கு இழுத்துள்ளார் டிரம்ப். இந்த போரில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா முதலாவதா அல்லது இஸ்ரேல் முதலாவதா என்பதை அவர் கணக்கிட்டு கொள்ளட்டும்' என்று கூறியிருந்தார்.

    மேலும் அவர், 'கதை தொடர்கிறது. இமாம் காமேனியின் தியாகம் உங்களிடமிருந்து பெரும் விலையைக்கோரும்' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாக யாரும் பேசினாலோ அல்லது செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க வெற்றிப்பாதையில் இருப்பதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி ஹெக்சேத் கூறியுள்ளார். ஈரானின் வான் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறிய அவர், ஈரானுக்கு எதிராக இந்த போர் தீர்க்கமாகவும், பேரழிவு தரும் வகையிலும், கருணை இன்றியும் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 

    • ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர்.

    வாணியம்பாடி:

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்ததால் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

    இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர். பலர் கேன்களுடனும் குவிந்தனர். அவர்கள் வாணியம்பாடி பஸ் நிலையம், நியூ டவுன், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் வரிசையில் நின்று கொண்டு பெட்ரோல் மற்றும் டீசலை தங்கள் வாகனங்களிலும், கேன்களிலும் நிரப்ப அலைமோதினர்.

    இதனால் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பதற்றமான சூழல் நிலவியது. பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இது வதந்தி என்று கூறி அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த நகர போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்து வந்தனர். பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்பது வதந்தி என்று கூறி கூடியிருந்த அனைவரையும் கலைந்து போக செய்தனர். தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் காரணமாக வாணியம்பாடி முழுவதும் பரபரப்பாக இருந்தது.

    • ஈரானில் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலிகாமேனி உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • இந்த போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 1,000-ஐ கடந்து விட்டது.

    ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் நேற்று 5-வது நாளை எட்டியது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ள இந்த போரில் ஈரானில் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலிகாமேனி உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். மிகவும் தீவிரமாக நடந்து வரும் இந்த போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 1,000-ஐ கடந்து விட்டது.

    அதன்படி நாடு முழுவதும் இதுவரை 1,045 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இவை அடையாளம் காணப்பட்டு அடக்கத்துக்கு தயாராக உள்ள உடல்களின் எண்ணிக்கை என ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் நலனுக்கான அந்த நிறுவனம் கூறியிருந்தது.

    • ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் போரை தொடங்கியது.
    • அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது.

    துபாய்:

    ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், அந்த நாட்டு உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து புதிய உச்சபட் சத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஈரான் முடுக்கி விட்டு உள்ளது. இதில் காமேனியின் மகன் முஜ்தபா தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக யாரை தேர்ந்தெடுத்தாலும் கொன்று விடுவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து உள்ளது.

    இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் தளத்தில், 'இஸ்ரேலை அழித்தல், அமெரிக்காவையும், சுதந்திர உலகையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்துதல், ஈரானிய மக்களை அடக்குதல் போன்ற திட்டங்களை தொடரவும், வழிநடத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் அழிக்கப்படுவதற்கு இலக்காக இருப்பார்கள். அவரது பெயர் என்ன? எங்கே மறைந்திருக்கிறார்? என்பதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என குறிப்பிட்டு இருந்தார். இஸ்ரேலின் இந்த மிரட்டல் மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    • ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டனர்.
    • ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்து உள்ளது.

    அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டனர்.

    ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

    மேலும், தலைநகர் தெக்ரானில் அயதுல்லா அலி கமெனிக்கு ஒரு பெரிய பிரியாவிடை விழா நடைபெறும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்து உள்ளது.

    ஆனால் உடல் அடக்கம் செய்யப்படும் தேதி குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    • சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.
    • இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர்.

    தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இவர்களின் பாதுகாப்புக்காக கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

    வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர் அந்த பகுதிக்கு சென்றாலும் அவர்களது முழு விபரங்களுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும் என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், "கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். வழக்கம் போல் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் நிலவி வருவதால் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

    • ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
    • காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் இந்த படுகொலை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கமேனியின் படத்துடன் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஸ்ரீநகர் லால் சவுக்கில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு கமேனி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஈரானை ஆதரித்தும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமடையாமல் இருக்க போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

    வதந்திகள் பரவாமல் தடுக்கவும், போராட்டங்கள் மேலும் விரிவடையாமல் இருக்கவும், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கமேனி உயிரிழந்த செய்தி அறிந்ததும் பல இடங்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி துக்கம் அனுசரித்தனர்.

    மேலும் லடாக், லே பகுதி உள்ளிட்ட காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையையும் எரித்தனர். இஸ்ரேல், அமெரிக்க கொடியுடன் கூடிய உருவபொம்மையை எரித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    இதே போல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

    • பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • குர்திஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கத்தாரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க "FP-132" ரேடார் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. இது குறித்து வெளியான அறிக்கையின்படி, இந்த ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் மிகவும் மேம்பட்ட அமெரிக்க இராணுவ சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இது 5,000 கிலோமீட்டர் வரை வரம்பைக் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஈரானிய ஊடகங்கள் இதை வளைகுடாவில் மிக முக்கியமான அமெரிக்க கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு மையங்களில் ஒன்றாக விவரித்தன. ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' என்று அழைக்கப்படும் புதிதாக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் அமைந்ததாக IRGC தெரிவித்துள்ளது.

    ஈரான் முழுவதும் பல மாகாணங்களை குறிவைத்து ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தற்காப்பு பதிலடியாக ஈரானிய அதிகாரிகள் இந்த பரந்த பிரச்சாரத்தை வடிவமைத்துள்ளனர். இதற்கிடையே ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    • ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.

    ஈரானில் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

    மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை செல்வதாக அறிவித்தார். அதன்படி யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமா னம் தாங்கி கப்பல் படைப்பிரிவு ஈரானை நெருங்கி உள்ளது. இதற்கிடையே டிரம்ப் அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

    ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் முன்பை விட ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றார். ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது.

    அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது,"எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்களது நிலம், வான் மற்றும் கடலுக்கு எதிரான எந்த வொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்ததாகவும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்றார்.

    இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அமெரிக்க ராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள், அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, அணு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பேச்சுவார்த்தைகள் உண்மையானவையாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.

    அதேநேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களுக்குத் தீங்கு விளை விக்கப்படும் என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான எந்த நேரத்தி லும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.

    • நாடு தழுவிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு குற்றவாளி" என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.

    நாடு தழுவிய போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கைது செய்து ஈரான் அரசு மரண தண்டனை விதித்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து அளித்த பேட்டியில்,"ஈரானில் புதிய தலைமையைத் தேட வேண்டிய நேரம் இது. 800-க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனையை அவர்கள் ரத்து செய்தனர். அவர்கள் ரத்து செய்ததை நான் மிகவும் மதிக்கிறேன்.

    இதன் காரணமாக ஈரான் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலோ அல்லது தூக்கிலிடப்பட்டாலோ அமெரிக்கா தலையிட வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

    இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு குற்றவாளி" என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் தான் ஈரானில் பல ஆயிரம் இறப்புகளுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்தநிலையில் ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதிலடி கடுமையானதாகவும் வருந்தத்தக்க வகையிலும் இருக்கும். உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம்.

    ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம். நீண்டகால விரோதமும் மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளும் ஈரானிய மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
    • ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் முழுவதும் போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் ஆயிரகணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார்கள்.

    போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.

    இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும். வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

    நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் டிரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

    ×