என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வீட்டு வேலையை செய்து கொண்டே, எப்போது வேண்டுமானாலும் சிறுதொழிலை செய்யலாம்.

    திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால், திருமணத்திற்கு பின் அந்த வேலையை தொடர்வது சிரமமாக உள்ளது. திருமணமான பெண்களுக்கு வேலை செய்வது என்பது கடினம் கிடையாது. அலுவலகத்திற்கு சென்று வருவதுதான் கடினம். இதுவே திருமணமல்லாமலும் குடும்ப சூழ்நிலைகளால் சிலரால் தினசரி அலுவலங்களுக்கு சென்று பணியாற்ற முடியாது. சூழ்நிலையால் வேலை இல்லாமல், வேலைக்கு செல்ல இயலாமல் இருக்கும் பெண்கள் வீட்டிலேயே சிறுதொழில் தொடங்கலாம். உங்களுக்கு உகந்த நேரம், அதாவது நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குழந்தைகளை கவனித்து விட்டு மீதமிருக்கும் நேரத்தில் பிடித்த தொழிலை செய்யலாம். அதற்கான சில யோசனைகளை இங்கே காணலாம். 

    ஊறுகாய்

    சமையல் தெரிந்த பெண்கள் ஊறுகாய் தொழில் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். முதலில் ஒரு சிறிய முதலீடு, அதாவது ரூ. 10 ஆயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்து பாருங்கள். வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மகளிர் பலரும் இதனை வாங்கி பயன்படுத்துவர். இதற்கு ஊறுகாயை ஆன்லைன் மூலம் விற்கவேண்டும். அப்படி ஆன்லைன் வேண்டாம் என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைகளில் முதலில் கொஞ்சம், கொஞ்சம் போடுங்கள். ஊறுகாய் நன்றாக இருந்தால், அடுத்தடுத்து உங்களிடம் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊறுகாயை மொத்த சந்தை, சில்லறை சந்தை எனப் பல்வேறு வழிகளில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம். உங்கள் ஊறுகாய் நன்கு விற்பனையானால் பின்னர் முதலீட்டை அதிகமாக்குங்கள். 

    கேட்டரிங் 

    சிலருக்கு கைப்பக்குவம் நன்றாக இருக்கும். அவர்கள் எல்லாம் கேட்டரிங் தொழிலை தொடங்கலாம். பெரிய பெரிய கல்யாணம், விழாக்கள் அப்படி இல்லையென்றாலும் வீடுகளுக்கு அதாவது படிக்கும் அல்லது வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலருக்கும் உணவு செய்து தரலாம். அப்படி இந்த தொழிலை ஆரம்பித்தால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் கொடுத்தால் போதும். மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வீட்டு சாப்பாட்டை விரும்பி உங்களிடம் ஆர்டர் கொடுப்பார்கள். இதில் நல்ல லாபம் கிடைக்கும். மூன்று வேலைகளிலும் சமைக்க இயலாது என்றாலும், மதிய அல்லது இரவு உணவு மட்டும் முயற்சி செய்து பாருங்கள். 

    கைவினைப்பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது

    அழகுசாதனப் பொருட்கள்

    இப்போதெல்லாம் பெண்கள் பலரும் ரசாயனங்கள் கலந்த அழகுப் பொருட்களைவிட இயற்கையாக தயாரிக்கும் பொருட்களையே விரும்புகின்றனர். ஆகையால் கற்றாழை ஜெல், குளியல் சோப்புகள், எண்ணெய் போன்றவற்றை வீட்டிலேயே செய்து விற்கலாம். முதலில் தெரிந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி நம்பிக்கை பெற்றபின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் விற்கலாம். வரவேற்பை பொறுத்து பின்னர் கடைகளிலும் விற்கலாம். 

    ஆரி வொர்க்

    இப்போதெல்லாம் பெண்கள் பலரும் டிசைனிங் அதிகம் உள்ள ஆடைகளைத்தான் விரும்புகின்றனர். நீங்கள் கடையில் துணியை மெட்டீரியலாக வாங்கி அதில் மணி, முத்துகள், ஜரிகைகள் வைத்து தைத்து விற்கலாம். இல்லையென்றால் நூலை வைத்தும் எம்ப்ராய்டரிங் செய்யலாம். இந்த துணிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தையல் தெரிந்தவர்களுக்கு இது எளிதாக இருக்கும். இதுபோல இன்னும் நிறைய சிறுதொழில்கள் உள்ளன. நிதி சுதந்திரம் என்பது மகளிருக்கு அவசியமான ஒன்று. இதுபோன்ற சிறுதொழில்கள் மூலம் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம். 

    • கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.
    • பெற்றோர்கள் தரும் ஊக்கத்தில்தான் பெண்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது.

    கடந்த வாரம் முழுவதும் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துருவ் விக்ரமின் 'பைசன்' படம் கவனம் ஈர்த்தநிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் கபடி வீராங்கனை கார்த்திகா. 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனையான கார்த்திகா யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

    கண்ணகி நகர் கார்த்திகா

    சென்னை, கண்ணகி நகரில் பிறந்தவர்தான் கபடி வீராங்கனை கார்த்திகா. தந்தை ரமேஷ் சென்டரிங் வேலை செய்துவருகிறார். தாய் சரண்யா தூய்மை பணியாளராக பணியாற்றிய நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டிவருகிறார். வீட்டில் வறுமைநிலை என்றாலும், விளையாட்டு போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார் கார்த்திகா. தனது நண்பர்களுடன் இணைந்து கபடி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இதில் கபடிமீது அதீத ஆர்வம் எழ, தனது 6ம் வகுப்புமுதல் பள்ளி அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்துள்ளார்.

    இதில் பல பரிசுகளையும் வென்றுள்ளார். கபடி விளையாடுவதற்கு கண்ணகி நகர் பகுதியில் தகுந்த மைதானம் இல்லாவிட்டாலும், வீட்டின் அருகில் இருந்த மணல் மைதானத்தில் தினமும் காலை எழுந்து பயிற்சி பெற்று வந்துள்ளார் கார்த்திகா. கார்த்திகாவின் ஆர்வத்தை பார்த்த அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில், அவரை சேர்த்துவிட்டு பயிற்சி பெற ஊக்குவித்தனர். அங்கு தனது பயிற்சி ஆசிரியர் ராஜி மூலம் நன்கு பயிற்சி பெற்ற கார்த்திகா தற்போது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும்விதமாக இந்திய கபடி அணியில் இடம்பெற்று, தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். 


    கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாய்

    தங்கப்பதக்கம்

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் கபடி பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்றது. மகளிர் கபடிக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. இதில் இந்தியா 75-21 என்ற புள்ளியில் அபார வெற்றிப்பெற்றது. இதில் இந்திய மகளிர் அணியில் சிறப்பாக விளையாடிய கார்த்திகா தங்கம் வென்றார். அதுபோல ஆடவர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினேஷ் தங்கம் வென்றார். தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும் அப்போதே அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து  கார்த்திகாவிற்கு பொதுமக்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குதிரை சார்ட்டில் அமரவைத்து மாலை அணிவித்து, மகுடம் சூட்டி, மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர். 

    "கண்ணகி நகரை பிராண்ட் ஆக்க வேண்டும்"

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "நான் 8-வது படிக்கும்போதே கண்ணகி நகரில் கபடி விளையாட்டை தொடங்கினேன். பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் நான் துணை கேப்டனாக விளையாடினேன். நான் தமிழ்நாடு திரும்பியதும் முதலமைச்சர் என்னை அழைத்து ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். கண்ணகி நகரை 'பிராண்ட்' ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். கண்ணகி நகரில் போதிய வசதிகளை செய்து தருவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளனர். எனக்கு வீடு கட்டி தருவதாகவும், அரசு வேலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு இப்படியான உதவி செய்வதால் நிறைய பேர் விளையாட்டு துறைக்கு வர ஆர்வம் காட்டுவார்கள். என்னுடைய பயிற்சியாளர் (coach) எனக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தார். அவருக்கு நன்றி. என்னுடைய பயிற்சியாளர் போல அனைவருக்கும் ஒருவர் துணை இருந்தால் எல்லோராலும் சாதிக்க முடியும்" என தெரிவித்தார். 

    "பெண்களை நம்பி வெளியே அனுப்புங்கள்"

    மகளின் வெற்றி தொடர்பாக பேசிய கார்த்திகாவின் தாய், "பயிற்சியாளர் ராஜிக்கு நாங்கள் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளார். 6வது படிக்கும்போது கார்த்திகாவை கபடியில் சேர்த்துவிட்டோம். இங்கு சரியான மைதானம் இல்லை. அரசு ஒரு கபடி மைதானம் கட்டித்தரவேண்டும். பெண்குழந்தைகளை நம்பி வெளியே அனுப்புங்கள். அவர்கள் அதிகம் வெளியே வரவேண்டும். பெற்றோர் அவர்கள்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் வைக்கும் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன்கிடைக்கும். பெற்றோர் தரும் ஊக்கத்தில்தான் அவர்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது". என தெரிவித்தார். 

    • தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்!
    • பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும்.

    நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் சென்று மனது கொஞ்சம் கவலையாக இருக்கிறது எனக்கூறினால், பலரின் அறிவுரை "வெளியே சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்பதுதான். பலரும் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? நீண்ட தொலைவு பயணம் செய்வது மனதுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் அடிக்கடி பயணம் செல்வது அவர்களுக்கு நல்ல ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் தருமாம். தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாம். தொலைதூர பயணத்தால் நாம் பெறும் பலன்கள் குறித்து பார்ப்போம். 

    குறையும் மன அழுத்தம்

    வேலைக்கு செல்வோர் அல்லது குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்போர், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. காரணம் அவர்களின் வாழ்க்கைச்சூழல்... ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பது, வெளியில் அதிகம் செல்லாதது, வேலையைவிட்டு வந்தால் வீடு, வீட்டைவிட்டால் அலுவலகம், மற்ற வேலைகளை பார்ப்பது, சாப்பிடுவது இதற்கே நேரம் சரியாக இருக்கும். மனிதர்களிடம் அதிகம் பேச நேரம் இருக்காது. ஒருவரிடம் பேசும்போது நம் மனதில் இருக்கும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். பேசாதபோது அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளே இருக்கும். மேலும் சோகமான நிகழ்வு என்றால் அதை மீண்டும் மீண்டும் நினைத்து நம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்வோம். உணர்ச்சி ரீதியான அதிகப்படியான சுமையை சுமப்போம். இதன் விளைவாக பதற்றம் மற்றும் மன சோர்வு ஏற்படலாம்.

    மேலும் அதிகப்படியான தனிமை ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும். எதன்மீதும் ஆர்வம் இருக்காது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் தேவை என்றால், இந்த அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் ஒரு பயணம் அவசியம். அது சொந்த ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம், செல்லாத ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம் அல்லது நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாகவும் இருக்கலாம். பயணத்தில் மனிதர்கள் இல்லையென்றாலும் நாம் இயற்கையில் இருக்கும் எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வோம். இயற்கை சூழலில் நமது மனமும், உடலும் ஓய்வெடுக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் பயணம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகரிக்கும். இது வேலையில் கவனம் செலுத்த உதவும். 

    படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்

    அனுபவங்களைப் போலவே இயற்கையும் நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்களா? என தெரியவில்லை. பூங்காவிற்கோ அல்லது பசுமையான, பசுமை நிறைந்த இடத்திற்கோ நாம் சென்றால் மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் அது நினைவில் வராது. அதாவது எந்த எண்ண ஓட்டமும் மனதில் இருக்காது. வெற்றிடமாக எதுவும் தோன்றாது. அமைதியாக உட்கார்ந்திருப்போம். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். ஒரு தெளிவு கிடைக்கும். மனம் தெளிவாக, அமைதியாக இருக்கும்போது பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதில் கிடைக்கும். நிறைய தோன்றும். படைப்பாற்றால் அதிகரிக்கும். எழுத்தாளர்கள் பலரும் அமைதியான, பசுமையான சூழலைத்தான் விரும்புவார்கள். 

    உடல்நலன் மேம்படும்

    இயற்கை சூழலில் இருக்கும்போது கார்டிசோல் அளவு குறைகிறது. கார்டிசோல் அளவு குறைந்தால் மனஅழுத்தம் குறையும். அடிக்கடி வெளியே இருப்பது இதய நோய் விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டி அளவு சூரிய ஒளியால் அதிகரிக்கும். 

    மன ஆரோக்கியம்

    இயற்கை, மன அழுத்தம் மற்றும் கோப உணர்வுகளைக் குறைக்க உதவும். உடற்பயிற்சியும் இதற்கு உதவும், ஆனால் நீங்கள் வெளியில் இருக்கும்போது இது இன்னும் சிறந்தது. பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வெளியில் இருப்பது சமூகத்தோடு இணங்கச்செய்யும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால், ஒரு பூங்காவுக்கு செல்கிறோம் என்றால் அங்கு நமக்கு தெரியாதவர்கள் சிலரை பார்ப்போம். இரண்டு, மூன்று நாட்கள் பூங்காவிற்கு சென்றால் அவர்களுடன் ஒன்றிணைவோம். வெளியூர்களுக்கு செல்லும்போது முகம் தெரியாதவர்களோடு பேசுவோம்.


    பல கவலைகளுக்கு ஒரேமருந்து பயணம்

    இது மனிதர்களிடம் எளிதில் ஒன்றாக உதவும். கூடுதலாக, நீங்கள் தொடர்ந்து வெளியே இருக்கும்போது நன்றாக தூங்குவதைக் காணலாம். இயற்கை ஒளியில் தினமும் படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியில் வெளியே செல்வதை உறுதி செய்வதன் மூலம், இரவில் தூங்கும் திறனை மேம்படுத்தலாம். பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைவான மன உளைச்சலைக் கொண்டுள்ளனர். அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர்.  மேலும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர். இயற்கையின் மீதான வெளிப்பாடு நாள்பட்ட நோயால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும்.

    பயணம் செல்லவில்லையென்றால், என்ன செய்யலாம்?

    ஒருநாளைக்கு குறைந்தது 5 நிமிடமாவது சூரிய ஒளியில்படுங்கள். காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு கொஞ்சநேரம் புல்வெளியில் நடந்து செல்லுங்கள். பூங்காக்கள் அல்லது வெளியில் மதிய உணவை சாப்பிடுங்கள். தொலைபேசியில் பேசினால் வெளியே நின்று பேசுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியாவிட்டாலும், பூங்காவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில் உட்காருங்கள். வீட்டு முற்றத்திலோ, முன்புறமோ செடி, கொடிகளை நடுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது மனதுக்கு நெருக்கமானவரிடம், யாராக இருந்தாலும் சரி மனம்விட்டு பேசுங்கள். 

    • கருப்பு புடவை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர்!
    • இருமுடி கட்டி, 18 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்றார் முர்மு!

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்திப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று (22.10.25) இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் குடியரசு முன்னாள் தலைவர் விவி கிரி, ஆளுநராக இருந்த காலத்தில்தான் சபரிமலை சென்றுள்ளார். இந்நிலையில், இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் திரவுபதி முர்மு!

    இருமுடிக்கட்டை தலையில் சுமந்துசென்ற திரவுபதி முர்மு, பதினெட்டுப்படி தாண்டி, சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சுமந்து சென்று சன்னிதானத்தில் சமர்பித்தனர். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையை குடியரசுத் தலைவர் தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.  


                                                 இணையத்தில் வைரலாகிவரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் சபரிமலைப் புகைப்படம்

    திரவுபதி முர்மு யார்?

    இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஜூலை 25, 2022-ல் பதவியேற்றவர் திரவுபதி முர்மு. பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர், பிரதிபா பாட்டிலுக்கு பின் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராவார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவரும் இவர்தான். முன்னதாக 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் , 2000 முதல் 2009 வரை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் முர்மு பணியாற்றினார். ராம்நாத் கோவிந்திற்கு பிறகு ஜூன் 2022 இல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு முர்முவை பரிந்துரைத்தது.

    • மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர்.
    • மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும்.

    புற்றுநோய் வருவதற்கான காரணிகள் என்ன? பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணங்கள் என்ன? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? ரஷ்யா கண்டறிந்த புற்றுநோய் தடுப்பூசி உண்மையில் பயனளிக்குமா? புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து விளக்கியுள்ளார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட். 

    புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

    செல்களின் அபரித வளர்ச்சிதான் புற்றுநோய். ஒரு செல்லின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுகோலில்தான் இருக்கவேண்டும். உடலில் ஒரு செல் அதிகமாக வளராமல் இருப்பதற்கும், நேர்க்கோட்டில் வளர்வதற்கும் ஒரு இயக்கமுறை உள்ளது. இந்த இயக்கமுறை கட்டுப்பாட்டை இழப்பதுதான் புற்றுநோய். புற்றுநோய் வர இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபுரீதியானது. இரண்டாவது 'ஸ்போராடிக்'. திடீரென ஏற்படும் மரபணு மாற்றங்கள், உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் ஒரு தாக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வரும்.

    மார்பக புற்றுநோய் அதிகரிக்க காரணம் என்ன?

    இயல்பாகவே ஹார்மோன் மாற்றங்களால் மார்பு வீக்கமடையும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதாவது சமநிலையை இழக்கும்போது மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.

    மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன?

    புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே அதற்கான பயத்தை உண்டாக்கும். அநேக நேரங்களில் மார்பில் வலி ஏற்பட்டாலே அது புற்றுநோயாக இருக்குமோ என பெண்கள் பலரும் பயப்படுவர். மார்பில் புற்றுநோய் என்பது முதலில் வலி இல்லாத கட்டியாகத்தான் துவங்கும். வேர்க்கடலை அல்லது நெல்லிக்காய் அளவில் வலியை கொடுக்காமல்தான் உருவாகும். வலி இல்லாமல் வரக்கூடிய கட்டிகளை கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் வலியுடன் வரக்கூடிய கட்டிகள் புற்றுநோய் கட்டியாக இல்லாமல் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

    நீர்க்கட்டி, புற்றுநோய் கட்டியை வேறுபடுத்துவது எப்படி?

    20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தினமும் கைகளால் சுயமார்பு பரிசோதனை செய்யவேண்டும். ஏதேனும் மாற்றங்கள், அதாவது கட்டிகள், வீக்கம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும். அப்போது மருத்துவர் அது நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியாக என்பதை கூறிவிடுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து நீர்க்கட்டியா, புற்றுநோய் கட்டியா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்ட கட்டியா என்பதை கண்டுபிடிக்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் எனப்படும் எக்ஸ்-கதிர் சோதனையை செய்து என்ன கட்டி என்பதை கண்டறியலாம். இதுதான் முதல்படி.

    ரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயை அறிய முடியுமா?

    ரத்த பரிசோதனையை வைத்து புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான நடைமுறை என்பது இல்லை. இரத்த பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும். ஆனால் மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயை அடையாளம் காணலாம். மரபியல் ரீதியான அதாவது ஒருவருக்கு எந்த வயதில் புற்றுநோய் வந்ததோ, அவர்களின் சந்ததியினருக்கு அந்த வயதிலோ அல்லது அதற்கு 10 வருடங்களுக்கு முன்போ சில சோதனைகளை செய்து அவர்களுக்கு புற்றுநோய் வருமா என்பதை அறியமுடியும். ரத்தத்தில் தெரியக்கூடிய புற்றுநோய்கள் இருக்கின்றன.

    அவற்றை சிஏ (CA-Cancer Antigen), CA-125 சோதனைகள் மூலம் அறியலாம். புற்றுநோயை உறுதிப்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் இந்த சோதனை முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றுநோயின் ஆரம்பநிலையிலோ, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதோ அல்லது சிகிச்சை முடியும்போதோ, நம் ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் ரத்த சிவப்பணுக்களுடன் சுழற்சியில் இருப்பதைதான் Circulating DNA cells என சொல்வோம். இந்த சோதனையை நாம் அனைவருக்கும் செய்யமுடியாது.

    புற்றுநோய் இருந்து, பின்னர் முழுவதும் மறைந்து, பின்னர் மீண்டும் வந்து, சிகிச்சையை தொடரவேண்டும் என்பவர்களுக்கு மட்டும்தான் ரத்த பரிசோதனை எடுக்க அனுமதி உண்டு. மற்றபடி பொதுமக்களுக்கு ஒரு ரத்த பரிசோதனை மூலம் மட்டும் புற்றுநோய் உள்ளதா? இல்லையா என்பதை சொல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. 

    புற்றுநோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

    பெரும்பாலான புற்றுநோய்களுக்கு காரணிகள் உள்ளன. ஜீன்வழியாக தொடரும் புற்றுநோயை தவிர்க்க இயலாது. 8 மணிநேர தூக்கம், சரியான உடல்எடை, புகை மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது, உடல்பருமனை தவிர்ப்பது மூலம் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 9-14 வயதிற்குள் உள்ளோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியதன் மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறைந்துள்ளது. வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை தவிர்த்தாலே வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை தவிர்த்துவிடலாம். இவைதான் பொதுவாக தவிர்க்கவேண்டியவை.

    'என்டரோமிக்ஸ்' போன்ற புற்றுநோய் தடுப்பூசிகள் இந்தியாவிற்கு வழங்கப்படாதது ஏன்?

    'என்டரோமிக்ஸ்' ஒரு mRNA தடுப்பூசி. விலங்குகளிடம் கோலோரெக்டர் கேன்சருக்கு இதை பயன்படுத்தி பயனுள்ளதாக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கான முழுமையான தகவல்கள் இன்னும் இல்லை. அவர்கள் வெளியிட்ட தரவுகள்படி ஆரம்பநிலையில் இதனால் பயன் உள்ளது. ஆனால் இது புற்றுநோய் வருவதை தடுக்குமா என்றால் தடுக்காது. 

    • சுத்தமாக இல்லாதது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணம்.
    • பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட மன அழுத்தமும் காரணமாக அமைகிறது.

    மாதவிடாய் காலங்களிலோ, அந்தரங்க பகுதியில் உள்ள முடிகள் அதிகமாகும்போதோ அல்லது பலநேரங்களில் நமக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். அந்த இடத்தில் சொரியும்போது சிலநேரங்களில் காயமாகவும் மாறக்கூடும். சிலர் இதற்கு மஞ்சள் தடவுவது, தேங்காய் எண்ணெய் தடவுவது என சில வைத்தியங்களை செய்வர். ஆனால் இந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    பிறப்புறுப்பு அரிப்பு

    பிறப்புறுப்பு அரிப்பு என்பது பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஆகும்.

    பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட காரணங்கள்

    சுத்தமாக இல்லாதது

    இது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மலம் கழித்த பிறகு அல்லது சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால் அரிப்பு ஏற்படும். மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றவேண்டும். அதுபோல உடலுறவுக்குப் பிறகும் சுத்தம் செய்யவேண்டும். வியர்வை மற்றும் சிறுநீர், முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியா உருவாகி வீக்கத்தை ஏற்படுத்தும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், அது வஜினிடிஸாக உருவாகலாம். அந்த நேரத்தில் பிறப்புறுப்பு பகுதி பச்சை அல்லது மஞ்சள் சளியை சுரக்கக்கூடும். 

    மேலும் பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் இந்த முடி பிறப்புறுப்பு பகுதியை பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் முடியை நீக்குவது கீறல்கள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வேண்டுமானால் அவ்வப்போது முடியை வெட்டிக்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

    ஒவ்வாமை

    பெண்கள் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்ய சோப்பு அல்லது வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்த ஜெல்களை பயன்படுத்தக்கூடாது. இந்த பொருட்கள் பெரும்பாலும் வலுவான காரத்தன்மை கொண்டவை. இது யோனியின் சாதாரண pH அளவை மாற்றி, வறட்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கின்றன. 

    தோல் நோய்கள்

    தோல் நோய்கள் ஏற்பட்டாலும் பிறப்புறுப்பு பகுதியில் சிவத்தல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம். 

    பிறப்புறுப்பு அரிப்புக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாக உள்ளது

    பாலியல் ரீதியாக பரவும் நோய்கள்

    ஆண்களை விட பெண்கள் பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். பிறப்புறுப்பு மருக்கள், பிறப்புறுப்பு ஹெர்பெஸ், ட்ரைக்கோமோனியாசிஸ் மற்றும் அந்தரங்கப் பேன்கள் (அந்தரங்க முடியில் வாழும் சிறிய பூச்சிகள்) போன்ற சில பொதுவான நோய்கள் உள்ளன. இந்த நோய்கள் பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. 

    மன அழுத்தம் 

    சில ஆய்வுகள் மன அழுத்தமும் பிறப்புறுப்பு அரிப்புக்கு ஒரு காரணம் என கூறுகின்றன. நீண்டகால மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம். இந்த நேரத்தில், பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புகளை ஆக்கிரமித்து அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் நின்ற நிலையில் உள்ள பெண்களில், நாளமில்லா சுரப்பிகள் குறைவதால் யோனி சளிச்சுரப்பி மெல்லியதாகி, பிறப்புறுப்புகள் வறண்டு அரிப்பு ஏற்படுகிறது.

    • பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
    • சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?

    தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


    இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!

    பட்டாசு வெடிக்கும்போது...

    * பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.

    * ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    * பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும். 

    * பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.

    * பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

    * பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

    உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!

    * பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    * பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.

    * காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும். 

    * பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


    திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    தீப்பற்றினால்...!

    * பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.

    * தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.

    * தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    * தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

    * கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

    சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!

    * காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. 

    * பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

    * சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    * பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

    * பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.

    * சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.

    * பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.

    • ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது உடல்மொழி முக்கியம்.
    • பதற்றப்படாமல் சரியான பதில்களை தெளிவாக சொல்லுங்கள்.

    இன்றைய போட்டி உலகில் பொருத்தமான வேலையை தேடி அதற்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கும் கடினமாகிவிட்டது. பலரும் பொதுவான சில தவறுகளை செய்து வேலையை தவறவிட்டு விடுகிறார்கள். நேர்காணலில் வெற்றி பெற கவனத்தில் கொள்ளவேண்டிய 5 விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்..

    1. ஆராய்ச்சி செய்யுங்கள்

    ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது முதலில் நிறுவனம், பணி கலாசாரம், அவர்களின் தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். நிறுவனத்தின் வலைத்தளம், சமூக ஊடக பக்கங்கள் போன்றவற்றில் நிறுவனம் பற்றிய சமீபத்திய செய்திகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனத்தில் ஏதேனும் பெரிய திட்டங்கள் அல்லது தலைமை மாற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை அறிந்து வையுங்கள்.

    2. நேரம் மற்றும் தோற்றம்

    நேர்காணலுக்கு தாமதமாக செல்வது, சரியான முறையில் உடை அணியாமல் இருப்பது உங்கள் மேல் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கிவிடும். ஆகவே உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு குறித்த நேரத்தை விட 15 நிமிடங்களுக்கு முன்பாகவே செல்லுங்கள். நேர்காணலுக்கு சரியான முறையில் ஆடையை தேர்ந்தெடுத்து அணியுங்கள். பாலிஷ் செய்யப்பட்ட காலணிகள், குறைந்த அளவிலான ஆபரணங்கள் நிறைவான தோற்றத்தை அளிக்கின்றன.

    3. உடல் மொழி

    ஒரு நேர்காணலுக்கு செல்லும்போது உடல்மொழி முக்கியம். கண்களை நோக்கி பேசுவதை தவிர்ப்பது, குனிந்து நிற்பது ஆகியவை உங்களுக்கு போதுமான தன்னம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகின்றன. நேராக அமர்ந்து, கண்களை நோக்கி பேசுங்கள். அதேபோல பதிலளிக்கும்போது நம்பிக்கையுடன் தைரியமாக பேசுங்கள்.

    4. தடுமாற்றம் வேண்டாம்

    கவனமில்லாமல் பதில் சொல்வது, பேசும்போது தடுமாறுவது ஆகியவை அந்த தலைப்புகளை பற்றி அதிகம் தெரியாது என்பதையும், தன்னம்பிக்கை இல்லை என்பதையும் காட்டும். பதற்றப்படாமல் சரியான பதில்களை தெளிவாக சொல்லுங்கள்.

    5. கேள்வி கேளுங்கள்

    பெரும்பாலான நேர்காணல்களில் இறுதியில், `உங்களுக்கு ஏதேனும் கேள்வி உள்ளதா?' என கேட்கப்படும். நீங்கள் எதையும் கேட்காமல் மவுனமாக இருந்தால் வேலையில் ஆர்வம் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்து கேள்வி கேளுங்கள். பணி கலாசாரம், பணியில் உள்ள முக்கிய சவால்கள் போன்றவற்றை பற்றி கேளுங்கள். இது புதிய வேலையில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை காட்டுகிறது.

    • தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி ஆடை அலங்காரம்.
    • ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது.

    பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடை அதற்கு இன்னும் அழகை கூட்டுகிறது. இந்நிலையில் அனைவரின் மனதிலும் எழும் கேள்வி, "தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் போடுவது?" என்பதுதான். தீபாவளிக்கு என்ன அணியலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கான பதிவுதான் இது. தீபாவளிக்கு ஆடை அணிவது என்பது வெறும் பாரம்பரிய நடைமுறை மட்டுமல்ல. மக்கள் தங்கள் தனித்துவமான பாணிகளைக் காட்ட ஒரு சிறந்த வழியாகும். அது மின்னும் புடவைகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியான லெஹங்காக்களாக இருந்தாலும் சரி, துடிப்பான சல்வார் கமீஸ் ஆக இருந்தாலும் சரி... ஒவ்வொரு உடையும் இந்தியாவின் கலாச்சார கதையைச் சொல்கிறது. மேலும் தீபாவளி ஆடைகள், மாறிவரும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. இதில் சில உடைகள் குறித்து பார்ப்போம். 

    புடவை

    பெண்களை மிகவும் அழகாக காட்டும் உடை என்றால், அது புடவைதான். அதிலும் நம்மை தனியாக எடுத்துக்காட்ட வேண்டுமானால், நீலம், அடர்சிவப்பு, அடர்பச்சை போன்ற பிரகாசமான நிறங்களில் புடவை கட்டலாம். ஆனால், அந்த கலர் நமக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். தற்போதையை தலைமுறையினர் பலருக்கும் புடவை கட்டத்தெரியாது. சிலருக்கு சிரமமாக இருக்கும். அதற்கான தீர்வாக தீபாவளி ட்ரெண்டிங்கில் இப்போது ரெடிமேட் சாரீஸ் வந்துள்ளன. இது பாரம்பரியம் மற்றும் ஸ்டைல் என இரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டைலாகவும் இருக்கணும், புடவையாகவும் இருக்கணும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

    அனார்கலி

    சிலருக்கு புடவை கட்டிக்கொண்டு நீண்டநேரம் இருப்பது சௌகரியத்தை அளிக்காது. அப்படி இருப்பவர்கள் பாரம்பரியம் மற்றும் சௌகரியத்தை கொண்ட அனார்கலியை தேர்வு செய்யலாம். கொஞ்சம் எடுத்துக்காட்ட வேண்டுமானால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அனார்கலியை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். பல வண்ணங்களில், கச்சிதமான டிசைனிங் கொண்ட இந்த ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கின்றன.


    பல வண்ணங்களில் கச்சிதமான டிசைனிங் கொண்ட ஆடைகள், தீபாவளி போன்ற விழாக்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்

    லெஹங்கா

    பட்டு, வெல்வெட், ஜார்ஜெட் போன்ற துணிகளில், ஜர்தோசி, எம்ப்ராய்டரி, சீக்வின்ஸ், முத்துக்கள் மற்றும் கற்கள் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான வேலைப்பாடுகள் லெஹங்காவுக்கு ஒரு ராஜரீக தோற்றத்தை அளிக்கின்றன. லெஹங்காவுடன் அணியும் துப்பட்டா, அதன் அழகை மேலும் அதிகரிக்கிறது. மெல்லிய துணியில், லெஹங்கா மற்றும் சோளியின் வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்ட துப்பட்டா, பெண்ணுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. இப்போதெல்லாம் மணப்பெண்கள் கூட லெஹங்காவைத்தான் அணிகின்றனர்.   

    பலாசோ

    பலாசோவில் நிறைய ஸ்டைல் செய்யலாம். பளீர் நிறங்களில் கோல்ட் ஜரிகைகள் கொண்ட பலாசோ வாங்கி அதற்கு டாப் அல்லது குர்த்தா அணிந்து மேட்ச் செய்து அசத்தலாம்.

    சல்வார்...

    பெண்கள் சல்வார் அணிந்து சுடிதார் அணிவது இயல்பு. ஆனால் சல்வாரிலும் ஜரிகை டிசைனில் இப்போது ட்ரெண்டிங்கில் நிறைய கிடைக்கின்றன. அதற்கேற்றவாறு அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்கும். 

    லாங் கவுன் 

    முழு நீள குர்த்தா அல்லது முழு நீள கவுன் என்ற பெயரில் சுங்குடி புடவையில் கஸ்டமைஸ்டு முறையில் தைத்து அணிவது சமீபத்திய ட்ரெண்ட். அது இந்த தீபாவளிக்குப் பக்கா பொருத்தமாக இருக்கும்.

    பாவாடைச் சட்டை 

    ஜரிகை வைத்தப் பட்டுப் பாவடை அல்லது கற்கள் பதித்த டிசைனர் பட்டுப்பாவடை. இப்படி எது தேர்வு செய்தாலும் நல்ல தேர்வாக இருக்கும்.

    • ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது.
    • கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது.

    ஒவ்வொருவரிடையேயும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். குறிப்பிட்ட தேதியைவிட சிலருக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். சிலருக்கு நாட்கள் தள்ளிச்சென்று மாதவிடாய் வரும். சிலருக்கு ஆறு மாதம் என நீண்ட நாட்கள் மாதவிடாய் வராமலும் இருக்கும். பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது. எனவே மாதவிடாய் நாள் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீங்கள் மாதவிடாய்க்கு உள்ளானால் உங்கள் உடலில் எதாவது பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான சில சாத்திய காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    ப்ரீமெனோபாஸ்

    இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய காலமாகும். பொதுவாக நாற்பது வயது அல்லது அதற்கு பிறகு இது தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் அளவுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் அண்ட விடுப்பு அதாவது மாதவிடாய் சரியாக நிகழாது. சிலருக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  மாதவிடாய் சுழற்சிகள் கணிக்க முடியாததாக இருக்கும். 

    தீவிர உடற்பயிற்சி

    தீவிர உடற்பயிற்சி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தலாம். பெரும்பாலும், பெண் விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. ஏனெனில் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது நாம் உண்ணும் உணவைவிட அதிகளவு ஆற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலின் கலோரி எரிப்பு அளவு அதிகரித்து, அது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் போதுமான ஆற்றல் இல்லாமல், உங்கள் உடல் அண்டவிடுப்பிற்கு தேவையான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. 

    எடை ஏற்ற, இறக்கங்கள்

    குறைந்த காலத்தில் அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இவை இரண்டில் எது நடந்தாலும் அது உங்கள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாதவிடாயில் பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சி எடை மாற்றங்களுடனும் தொடர்புடையது. 

    மாதவிடாய் சுழற்சியில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது

    மன அழுத்தம்

    மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்று மாதவிடாய் பாதிப்பு. கடுமையான மன அழுத்தம் உங்கள் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இவை உங்கள் வாழ்வில் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவம் அல்லது வேறு சமபவங்களால் கூட நிகழலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மட்டுமே மீண்டும் ஹார்மோனை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. இது குழந்தை பிறக்கும் வயதின் அடிப்படையில் 10 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது. கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும். மேலும் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

    இது பொதுவாக மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் காரணிகளாகும். சத்தான உணவுமுறை அல்லது உடலில் ரத்தம் இல்லையென்றாலும் மாதவிடாய் வருவது தள்ளிப்போகும். இதனால் மாதவிடாய் குறைவாக இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

    • சமூகமே பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
    • எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை.

    சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தாங்கள் 'ஆண்கள்', தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள். இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

    பாலினம்...

    குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கபடும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும். இதற்கு நேர்மார் ஆண்களின் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் சுதந்திரம் பெறும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பதுபோல. இதனால் பெண்கள் அதிக உணர்வுமயமானவர்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறது. 

    கலாச்சாரம்

    பெண்கள் என்றாலே சாந்தி. சாந்தமாக இருந்தால்தான் அவள் பெண். இல்லையென்றால் அடங்காப்பிடாரி, ராட்சசி, பொம்பளையா அவ என பல்வேறு பட்டங்கள். கலாச்சாரங்கள்படி பெண்கள் என்றால் அனுதாபம் கொள்ள வேண்டியவர்களாகவும், பாதுகாக்கப்படவேண்டியவர்களாகவும் காட்டப்படுகிறது. உணர்வுமயமாக இருப்பதுதான் பெண்களின் குணம் என்பதுபோல சித்தரிக்கப்படுகிறது. இப்படி இருந்தால்தான் அவள் பெண் என்ற பிம்பங்கள். கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் சடங்குகளை ஒப்பிட்டால், ஆண்களுக்கு சடங்குகளே இல்லை. வயதுக்கு வந்தால் ஒரு சடங்கு, திருமணம் என்றால் ஒரு சடங்கு, குழந்தை தரித்தால் ஒரு சடங்கு, கணவன் இறந்தால் ஒரு சடங்கு இப்படி பெண்ணின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சடங்கு. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்று எத்தனை சடங்குகள் உள்ளன? மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது என்றால் அந்தப் பெண்ணை சுற்றி அவ்வளவு பேர் இருப்பார்கள். மாதவிடாய் என்பது அப்போதுதான் அவளுக்கு முதலில் வந்திருக்கும். அதுகுறித்தே முழுதாக தெரியாமல் ஒருவித அச்ச, குழப்ப உணர்வில் இருப்பாள். எல்லோரும் தங்களை கொண்டாடுவதால் ஒரு சந்தோஷமும் இருக்கும்.


    பெண் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்!

    அப்போது விழா நடத்துகையில் உறவினர்கள் மத்தியில் தான் மட்டும் கவனிப்படுவது ஒரு கூச்ச சுபாவத்தை கொடுக்கும். இதனை வெட்கம் எனக்கூறுவது. ஒரு ஆணை 100 பேருக்கு மத்தியில் உட்காரவைத்து அவனை மட்டும் பார்த்தால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கம்தான் வரும். அதுபோல வளையலணி விழா. தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம். அதுபோல இறப்பு சடங்கு. தன்துணை இறந்த சோகமே தாளாமல் இருக்கும்போது அவரை உட்காரவைத்து பூ, பொட்டு அழிப்பது. இது இன்னும் வலியை கொடுக்க அவள் அழுவாள். இப்படித்தான் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுகளை சமூகமே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் சாத்துகிறது. அதுபோல பெண்ணை சகுனமாக சித்தரிப்பது, இவள் ராசியில்லாதவள், இவள் வந்தால் விளாங்காது, அப்பாவை விழுங்கியவள், கணவனை விழுங்கியவள் என்று... ஆனால் நாம் என்றுமே ஒரு ஆணை ராசியில்லாதவன் எனக் கூறியதே இல்லை. 

    அன்பு...

    அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, உடைந்து அழுவது, கோபமாக கத்துவது என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிபடும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.   

    • மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை.
    • பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர்.

    நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது.

    மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன.

    பொதுவாக மெட்டி 2-வது விரலில் தான் அணிவார்கள். அந்த 2-வது விரலில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

    இதனால் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளி மெட்டி பூமியின் துருவ ஆற்றல்களை ஈர்த்து உடம்பிற்குள் செலுத்துகின்றது என்று கூறப்படுகிறது. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால் தான் பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர்.

    ×