என் மலர்
பெண்கள் உலகம்

இந்த 5 காரணங்களுக்காக குழந்தை பெறுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!
- குழந்தை பெற வேண்டுமானால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
- நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது.
புதிதாக திருமணமான தம்பதிகள் குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் எனில், எதற்காக நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதானது அல்ல. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நாம் முழுமனதோடு தயாராக வேண்டும். நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மற்றவர்களின் அழுத்தத்தின் காரணமாக குழந்தை பெறக்கூடாது என்பதை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உண்மையில் ஒரு பெண் ஆசைப்பட்டு அல்லது கணவன், மனைவி இருவரும் விருப்பப்பட்டு ஒரு குழந்தைக்கு தயாராகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. மாறாக, வேறுசில காரணங்களால் நீங்கள் குழந்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் இல்லை. எந்தப் பாவமும் செய்யாமல் இந்த உலகுக்கு வரும் குழந்தைதான். காரணம், மற்றவர்களின் அழுத்தத்தால் ஒரு குழந்தை பெறும்போது நீங்கள் முழு அன்பையும் குழந்தையிடம் வெளிப்படுத்தமாட்டீர்கள். பெற்றோம், வளர்த்தோம் என கடமைக்காக ஒரு செயலை செய்வீர்கள். அதனால் கீழ்க்காணும் காரணங்களுக்காக பெண்கள் குழந்தை பெறுவதை கைவிடுங்கள்.
"பெற்றோர் பேரக்குழந்தையை பார்க்க விரும்புகிறார்கள்"
திருமணமானாலே வீட்டில் உள்ள பெரியவர்கள், பேரக்குழந்தையை பார்த்துவிட்டால் நிம்மதியாக சென்றுவிடுவேன். பேரக்குழந்தையை பெற்றுக்கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தொடர்ந்து பேச தொடங்கிவிடுவர். பெற்றோர் விருப்பம், மாமியார் கேட்டார் என ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எப்போது விருப்பமோ, அப்போது குழந்தை பற்றி யோசியுங்கள்.
"எங்களை நெருக்கமாக்கும் என்று நினைத்தோம்"
பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறந்தால் தங்களுக்குள் கூடுதல் நெருக்கம் வந்துவிடும் என நினைப்பார்கள். அது தவறு. உங்களுக்கு நெருக்கம் வேண்டும் என்று நினைத்தால் நேரம் ஒதுக்கி அதிகம் வெளியே செல்லுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலுங்கள். அதைவிடுத்து குழந்தை பெற்றுக்கொண்டு, நெருக்கம் இல்லாமல் உங்கள் நிலையை இன்னும் மோசமாக்கி கொள்ளாதீர்கள்.
புதிய தம்பதிகள் கூடுதல் பிணைப்பு வேண்டும் என்று எண்ணினால் ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள்
ஆண், பெண் என்பதை நிரூபிக்க...
திருமணமான ஒரு ஆண்டிற்குபின் குழந்தை பெறுவது என்பது கட்டாயம் என்ற விதிமுறை நம் சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. இதற்கு மாறாக நமது திட்டங்கள் ஏதேனும் இருந்தால், உன்னால் குழந்தை பெத்துக்க முடியாது என பெண்களையும், நீயெல்லாம் ஒரு ஆணா என கணவன்மார்களையும் விமர்சிக்க தொடங்குவர். இந்த பேச்சுகளை நினைத்து பயம்கொண்டே உங்களுக்கு வேறு ஏதேனும் திட்டங்கள் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள். ஆனால் அப்படி செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் சமூகம் பேசும். அதனால் உங்கள் கடமைகளை நிறைவேற்றிவிட்டு குழந்தைக்கு நீங்கள் தயார் எனும்போது பெற்றுக்கொள்ளுங்கள்.
"மற்ற குடும்பங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை"
சமூக அழுத்தம் காரணமாக நிறைய திருமணமான தம்பதிகள் உடனே குழந்தைகளைப் பெறுகிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே உங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் "நல்ல செய்தி" இருக்கா என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் எங்களோடு திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் இன்னும் பெறவில்லை எனக்கூறி, குழந்தை பெற முயற்சிக்காதீர். குழந்தை பெற வேண்டுமானால் நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
"நான் பெறாத விஷயங்கள் என் குழந்தைக்கு கிடைக்கவேண்டும்"
என்னுடைய சிறுவயதில் நான் நிறைய விஷயங்களை தவறவிட்டேன். ஆனால் என் குழந்தைக்கு எல்லாவற்றையும் நான் கொடுக்கவேண்டும். என் குழந்தைக்கு செய்ய தேவையான அனைத்தும் இப்போது என்னிடம் உள்ளது என நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது. அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கும். ஆகையால் இதுபோன்ற செயல்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பெறாதீர்கள். நீங்களாக விருப்பப்பட்டு ஒரு குழந்தை பெறும்போது அதற்கு உங்களின் அனைத்துவிதமான அன்பும் கிடைக்கும். நாம் திட்டமிட்டு நடத்துவதைவிட, எதிர்பாராமல் கிடைப்பதில்தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.






