என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Censorship Certificate"

    • கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது.
    • கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது

    உண்மையில் மத உணர்வுகளை புண்படுத்தும் பல படங்களுக்கு தணிக்கை வாரியம் சான்று வழங்குகிறது. ஆனால் ஒன்றும் இல்லாத படத்திற்கு இழுத்தடிக்கிறது என கடந்த காலங்களாகவே தணிக்கை வாரியம்மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கும் வகையில் கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை வாரியம்.

    'தி கேரளா ஸ்டோரி' கடந்த 2023ஆம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. இது வெளியான சமயத்தில் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் வசூல்ரீதியாக வெற்றிப்பெற்றது.  

    இதன் முதல்பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது.

    டிரெய்லரில் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கேரள உயர் நீதிமன்றத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் ரத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் இன்று இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை படத்தை பார்ப்பதாக கூறியுள்ளது. படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், நீதிமன்றங்கள் பொதுவாக கலை வெளிப்பாட்டில் தலையிடத் தயங்கினாலும், கேரள மக்களின் கவலைகளை "புறக்கணிக்க முடியாது", ஏனெனில் படத்தின் தலைப்பில் மாநிலத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

    விசாரணையின்போது பேசிய அவர்,

    "கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது. ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கேரளா முழுவதும் நடப்பதாக நீங்கள் சித்தரித்துள்ளீர்கள். இது தவறான ஒரு தகவலை கொடுப்பதுடன், மக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டவும் கூடும். இங்குதான் தணிக்கை வாரியம் தனது பணியைச் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் இதைக் கருத்தில் கொண்டீர்களா?" 

    பொதுவாக, நான் எந்தப் படத்திலும் தலையிடுவதில்லை. கலை சுதந்திரம். ஆனால், அது உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, கேரளா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள், இது சில வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும். நான் நாளை படத்தைப் பார்ப்பேன். நாளை படத்தின் திரையிடலை நீங்கள் ஏற்பாடு செய்யலாம்." என தெரிவித்தார்.

    முன்னதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் எந்த மதத்தையோ அல்லது பிரிவையோ பாதிக்கும் எந்த பகுதியும் இல்லை என்றும், படம் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் வாதிட்டார். 

    இதனைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், இந்தத் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட இளம் பெண்கள் குழுவை 'லவ் ஜிகாத்தின் பலியானவர்கள்' (Victims of Love Jihad) என்ற அடையாளத்துடன் முன்னிறுத்துவதாகவும், ஆனால் கதையில் காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட கேரளாவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் வாதிட்டனர். நிலைமை இப்படி இருந்தும், இப்படத்திற்கு 'தி கேரளா ஸ்டோரி 2' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது கேரளச் சமூகத்தை மோசமான முறையில் சித்தரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

    விசாரணையைத் தொடர்ந்து திரையிடல் நேரம் மற்றும் இடம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது
    • ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது?

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதுவரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. 

    கடந்த டிசம்பர் 19 அன்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்கு தொடர்ந்தது. 

    இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தநிலையில்,

    "பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது. அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    யாருமே இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ள நிலையில் யாரோ ஒருவர் அளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள்." என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது. 

    இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? என படக்குழுவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கை நாளை (ஜன.7) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



    ×