search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer"

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • குரங்கு பெடல் திரைப்படத்தில் காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்
    • இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் Sk23 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் துரைசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துள்ளார்.

    நடிப்பது மட்டுமல்லாமல் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் அடுத்ததாக எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அப்படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் பதிவிட்டுள்ளார். அதில், "1980களின் ஒரு கோடைக்காலம். உங்கள் குழந்தைப்பருவத்துக்கு சைக்கிளின் வழி அழைத்துச்செல்ல மே 3ஆம் தேதி திரையரங்கத்துக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இப்போது விற்பனை மளமளவென உயர்ந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இப்போது விதவிதமாக பீர் வகைகளை கேட்டு வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்காக எப்போதும் தட்டுப்பாடின்றி பீர் வழங்குகிறோம். சூப்பர் ஸ்டிராங்பீர், பிளாக் நைட் மேக்ஸ் சூப்பர் ஸ்டிராங் பிரிமீயம் பீர், பிளாக் பேர்ல் டிரிபிள் சூப்பர் ஸ்டிராங் பீர், கமாண்டோ சூப்பர் ஸ்டிராங் பீர் என பல்வேறு ரக பீர் வகைகள் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் 1 லட்சம் பெட்டி கொண்ட பீர் பாட்டில் விற்பனையாகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 40 ஆயிரம் பெட்டி பீர் விற்பனையாகி வருகிறது.

    40 சதவீதம் அளவுக்கு பீர் வகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மே மாதம் இன்னும் விற்பனை அதிகமாகும் என்பதால் மதுபான தொழிற்சாலைகளில் மது உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.
    • ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

    நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவான நிலையில், நேற்று சேலத்தில் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.

    ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12-ந்தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.

    தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    • சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருப்பது வழக்கம். கால சூழல் மாற்றத்தால் வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்து உள்ளது. இயல்பைவிட அதிகமாக வெப்பம் தாக்குதலுக்கு நாம் ஆளாகும்போது, உடலில் சோர்வு, தலை சுற்றல், தலைவலி, கால்வலி போன்றவை ஏற்படும்.

    வெயில் அதிகமாக முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதாக தாக்கக்கூடும். உஷ்ணம் தாங்க முடியாமல் அவர்கள் சுயநினைவு இழக்க நேரிடும். உடலில் நீர் சத்து குறைந்து வலிப்பு ஏற்படக்கூடும்.

    சிலருக்கு வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்டோக்) பாதிப்பும் உண்டாகலாம். இந்த பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    தளர்வான ஆடைகள், பருத்தி உடைகளை அணிவதில் இருந்து தப்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை பிடித்தும், தொப்பி அணிந்தும் செல்லலாம். கட்டாயம் தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். இதன் மூலம் நா வறட்சி, படபடப்பு, சோர்வு, உடல் அசதி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், இளநீர், பழங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும். குளிரூட்டப்பட்ட ஜூஸ் பழ, வகைகளை சாப்பிடக்கூடாது.

    சிறுவர்கள், இளைஞர்கள் வெயிலில் செல்லும்போது சரும நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகம் கருப்பாக மாறிவிடும். அதனால் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் கிரீம் தடவி செல்ல வேண்டும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை கட்டி, வேர்க்குரு போன்றவற்றை தடுக்க தினமும் 2 முறை குளிக்க வேண்டும்.

    வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டல் உணவு நல்லதல்ல. பழைய கஞ்சி உடலுக்கு நல்லது. தற்போதைய சீசன் பழங்களை பருகலாம். தர்பூசணி, தயிர் சாதம், மோர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    பஸ், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்ப பக்கவாதம் சிலருக்கு உயிர் இழப்பையும் ஏற்படுத்தி விடும். எனவே வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெயிலில் செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது.

    வெப்ப தாக்குதலால் ஏற்படும் பாதிப்புக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஈரோடு:

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை ஈரோடு பிடித்துள்ளது. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதல் 2 இடத்தை பிடித்துள்ளது.

    • கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது.
    • முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் முடிந்த அளவு கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது. முதலில் 104 டிகிரி, அதன் பின்னர் 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவாகாத அளவு இது.

    இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    இதேப்போல் முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் குடை, முகத்தில் துணியால் மூடிக்கொண்டு வெளியே சென்று வருகின்றனர். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதால் ஈரோடு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கத்தை தொலைத்து திணறி வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், கரும்பு சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் இயல்பைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஈரோடு மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    ×