search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைக்காலம்"

    • மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
    • காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதன் காரணமாக வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்து வருகின்றன.

    எனவே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப்ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அங்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அங்கு தினந்தோறும் தண்ணீரை நிரப்பும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வன நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதும் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
    • விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவை குறைந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளதாக தொழில்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக, நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 5-ல் 2 பங்காக டீசல் உள்ளது.

    இதன் விற்பனை, இம்மாதத்தின் முதல் பாதியில் 30 லட்சத்து 43 ஆயிரம் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீத சரிவு ஆகும்.

    அதேநேரம், விவசாயத்துக்கான எரிபொருள் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயிலை சமாளிக்க கார்களில் ஏ.சி. தொடர்ந்து இயக்கப்பட்டதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவீதமும், மே மாதத்தில் 9.3 சதவீதமும் டீசல் விற்பனை கூடியிருந்தது.

    பெட்ரோல் விற்பனையும் இந்த மாத முதல் பாதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட பெட்ரோல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீத சரிவு. மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த மார்ச் மாத 2-வது பாதியில் இருந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்து வந்திருக்கிறது. அதற்கு தொழில்துறை, விவசாயத்துறை செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைந்ததுதான் காரணம்.

    ஆனால் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை தணியத் துவங்கி இருக்கிறது. விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவையும் குறைந்திருக்கிறது.

    அதேவேளையில், நாட்டில் விமான பயணிகள் போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை நெருங்கியிருக்கும் சூழலில், விமான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் 1 முதல் 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விமான எரிபொருள் தேவை 2 லட்சத்து 90 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 2.6 சதவீத அதிகரிப்பு ஆகும்.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சமையல் எரிவாயு விற்பனை 1.3 சதவீதம் சரிந்து 10 லட்சத்து 14 ஆயிரம் டன்களாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.
    • வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் வாட்டி எடுத்தது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. சென்னையில் 106 டிகிரிக்கும் அதிகமாகவே வெயில் பதிவாகி பகல் நேரங்களில் வெளியில் நடமாடுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, வருகிற 17-ந் தேதிக்கு பின்னர் வெயில் குறையும் என்று தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 18-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
    • சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பதிவானது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பதிவானது.

    100 டிகிரிக்கு மேல் பதிவான இடங்கள் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    கடலூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

    ஈரோடு - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    கரூர் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

    மதுரை விமானநிலையம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

    நாகப்பட்டினம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

    தஞ்சாவூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

    திருச்சி - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்)

    திருத்தணி - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    வேலூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    இதுதவிர, புதுச்சேரியில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), காரைக்கால் 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்) பதிவாகியிருந்தது.

    • பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர்.

    மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    இன்றுடன் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

    இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். கொரோனா ஊரடங்கால் சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கோடை விழாவின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலையில் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
    • 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் படிப்படியாக வெயில் குறையலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.

    அவ்வப்போது திடீரென பெய்த மழை சற்று ஆறுதல் அளித்த போதிலும் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் வறுத்தெடுத்தது.

    இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் சென்னையில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெயிலின் தாக்கம் இன்றும், நாளையும் அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் நேற்று பதிவானதை விட சற்று குறைவான அளவிலேயே வெயில் பதிவாக வாய்ப்புகள் உள்ளன.

    நேற்று 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இன்றும் நாளையும் ஒரு டிகிரி அளவுக்கு வெயில் குறையலாம்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலையில் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த மழை மேகங்களால் சென்னை மாநகரிலும் சில இடங்களில் மழை பெய்யலாம். ஒருவேளை அப்படி பெய்தால் சூடு குறைய வாய்ப்புள்ளது.

    அடுத்த வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் படிப்படியாக வெயில் குறையலாம். அப்போதுதான் 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மேலும் 2 நாட்கள் வெயில் வாட்டி எடுக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் அந்த 2 நாட்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மே 16-ந்தேதி அன்று சென்னையின் உச்சபட்ச மின்சார தேவை 4,016 மெகாவாட் ஆகும்
    • சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கோடை வெப்பம் இன்னும் முழுமையாக குறையாததால் ஒவ்வொரு வீடுகளிலும் மின்விசிறி மற்றும் ஏ.சி. அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இதன் காரணமாக இரவில் மின்சார பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.

    கடந்த மே 16-ந்தேதி அன்று சென்னையின் உச்சபட்ச மின்சார தேவை 4,016 மெகாவாட் ஆகும். இது தடையின்றி மக்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது 9.03 கோடி யூனிட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 2-ந்தேதி 9.06 கோடி யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்பட்டது. இது அப்போது சாதனையாக கருதப்பட்டது.

    ஆனால் அதையும் தாண்டி சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதுபற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதன்முறையாக சென்னையில் நேற்று (8-ந்தேதி) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

    சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்கலுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.18 டிகிரி பதிவானது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தாலும், அனல் காற்றினாலும் மக்கள் வாடி வதங்கி போய் இருக்கின்றனர். அந்தவகையில் நேற்று தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. இதில் வேலூரில் அதிகபட்சமாக 107.24 டிகிரி பதிவானது. இதுதவிர நேற்று ஒரே நாளில் கரூரில் இயல்பைவிட 5 டிகிரியும், மதுரை, வேலூர், தூத்துக்குடியில் 4 டிகிரியும் அதிகரித்து வெப்பம் உக்கிரமாக இருந்தது. தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் நேற்று வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் -104.18 டிகிரி

    சென்னை மீனம்பாக்கம் -105.26 டிகிரி

    ஈரோடு - 102.56 டிகிரி

    கரூர் - 103.1 டிகிரி

    மதுரை நகரம் - 103.28 டிகிரி

    மதுரை விமான நிலையம் - 103.28 டிகிரி

    நாகப்பட்டினம் - 101.3 டிகிரி

    நாமக்கல் - 101.3 டிகிரி

    பாளையங்கோட்டை - 101.12 டிகிரி

    பரங்கிப்பேட்டை - 102.2 டிகிரி

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி

    திருப்பத்தூர் - 101.48 டிகிரி

    திருச்சி - 102.38 டிகிரி

    திருத்தணி - 105.98 டிகிரி

    தூத்துக்குடி - 103.1 டிகிரி

    வேலூர் - 107.24 டிகிரி

    • சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னையில் நேற்றும் வெயில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.

    இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகீர் தகவலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 104.18 டிகிரி - (40.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கடலூர் - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    ஈரோடு - 101.12 டிகிரி - (38.4 செல்சியஸ்)

    கரூர் - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    மதுரை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    நாகை - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 104 டிகிரி - (40 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 101.84 டிகிரி - (38.8 செல்சியஸ்)

    திருச்சி - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    திருத்தணி - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    வேலூர் - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    • தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
    • அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிந்தது.

    ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

    1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 6 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

    இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தது.

    எனவே பள்ளிகள் திறப்பதை மீண்டும் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்களை திறப்பதை மீண்டும் தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளி வைப்பது என்று முதலமைச்சருடன் நடந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந்தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந்தேதி பள்ளிகளை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    • தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.
    • சென்னையில் கடந்த 3 தினங்களாக வெயில் கொளுத்துகிறது.

    சென்னை :

    வெயில் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு அனைவருடைய மனதிலும் இருந்து வருகிறது. ஏனென்றால் அக்னி நட்சத்திரம் காலம் முடிந்த பிறகும், அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கூட குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது.

    அதிலும் சென்னையில் கடந்த 3 தினங்களாக வெயில் கொளுத்துகிறது. நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 108 டிகிரியாக பதிவாகியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் நேற்று 107 டிகிரி வெயில் பதிவானது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால், சென்னை வாசிகள் வாடிப்போய் இருக்கின்றனர்.

    இதுபோல், கடலூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 13 இடங்களிலும் வெயிலின் கோரத்தாண்டவத்தை பார்க்க முடிந்தது.

    புதுச்சேரியில் 105.08 டிகிரியும் (40.6 செல்சியஸ்), காரைக்காலில் 100.4 டிகிரியும் (38 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.

    ×