search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Regional Meteorological Centre"

    • கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • நேற்று சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை

    சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ந் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது.

    இன்று (நேற்று) பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.

    இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7-ந்தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    சென்னை :

    தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதுதவிர தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இந்தநிலையில் 7-ந்தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6, 7-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதேவேளை 5-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். அதாவது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    தென்கிழக்கு வங்க கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே 6-ந்தேதி மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல 7-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடம்பூர், கழுகுமலையில் தலா 10 செ.மீ. மழையும், எலந்தகுட்டை, மணியாச்சி, மூலைக்கரைப்பட்டி, தாளவாடியில் தலா 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 6-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக, 7-ந்தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வருகிற 8-ந்தேதி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், பின்னர் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது.

    புயல் உருவான பின்பு, அந்த புயலானது மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகரவும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது உருவாகவுள்ள புயலானது மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பிருக்கும் என்பதால் தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்றானது கடல்பரப்புக்கு செல்லும் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • கடந்த வாரத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவானது.
    • கோடை வெயிலுக்கு இதமாக சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு இதமாக சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவான நிலையில், கடந்த 3 நாட்களாக கரூர், ஈரோட்டில் மட்டுமே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தென்னிந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத்திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழ்நாட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    அதற்கு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில், கொடைக்கானலில் 11 செ.மீ., மழையும், ஈச்சன்விடுதியில் 5 செ.மீ., மழையும், சோத்துப்பாறையில் 4 செ.மீ., மழையும், மஞ்சளாறு, கயத்தாறு, பெரம்பலூர், கடம்பூர், ராமநதி அணைப்பிரிவு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இன்றுடன் முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. #NortheastMonsoon
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி சேதப்படுத்தியது. ஆனால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இன்றுடன் முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.



    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். உள் மாவட்டங்களில் மூடு பனியும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் உறை பனியும் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon

    ×