என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன
    X
    வறண்டு காணப்படும் புலியருவி.

    கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

    • தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
    • கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.

    இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு.

    தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.

    இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும்.

    கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது.

    மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    Next Story
    ×