search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள்.
    • தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தை யொட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவ தால் அங்கு உள்ள காட்டு யானைகள் தற்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா்.பகுதி க்கு 6 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள பாறைகளின் நடுவே தண்ணீர் கிடைக்கிறதா என தேடி பார்த்தன.

    அப்போது பாறைகளின் நடுவில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குட்டைகளில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தன. பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி சூட்டை தணித்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள் குறித்து வனவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கான குடிநீா் தேவையும் அதிகரித்து உள்ளது.

    எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கோடைக்காலம் முடியும்வரை தண்ணீரை நிரப்பவும், குட்டைகளை கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ என்ற ஏக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை தொற்றிக்கொண்டது.
    • வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தோடு காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்கத்தின் விலை உயர்வை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ என்ற ஏக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை தொற்றிக்கொண்டது.

    தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து கிராம் ரூ.6 ஆயிரத்து 615-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது.
    • இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நேபால்:

    இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா,கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம், நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.

    100 ரூபாய் நோட்டுகளில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நேபாளத்தின் புதிய வரைபடத்தை அச்சிட பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். நேபாளத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
    • கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர் நகர், குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். மாநகர பஸ் கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜ லட்சுமி. இவர் கடந்த மாதம் 23ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் தான் அணிந்திருந்த 18பவுன் நகைகளை கழட்டி கைப்பையில் போட்டுக் கொண்டு கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ் (தடம் எண்70வி) மூலம் வீடு திரும்பினார்.

    ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய ராஜலட்சுமி நகைகளுடன் தனது கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை சுருட்டி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்பேடு முதல் வண்டலூர் வரை உள்ள மாநகர பஸ் நிறுத்தங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகை கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விமலா (30) என்பது தெரிந்தது. வேலூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விமலா கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களை குறிவைத்து கொள்ளை அடிப்பவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவரை போன்று மேலும் பல பெண்கள் பஸ்களில் கைவரிசை காட்டுவதற்காக சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கூட்ட நெரிசலில் சில்லரையை சிதறிவிட்டு கவனத்தை திசை திருப்பி இந்த பெண்கள் கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விமலா வும் சில்லரையை சிதற விட்டுத்தான் நகையை அபேஸ் செய்துள்ளார்.

    இவரைப் போன்று ஆந்திராவை சேர்ந்த 6 பெண்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாகவும், எனவே மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஆந்திராவில் இருந்து ஒன்றாக புறப்பட்டு சென்னைக்கு வரும் இவர்கள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டு வார்கள். காலையில் இருந்து இரவு வரையில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று விடுவார்கள்.

    விமலாவை போன்று சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டிவரும் மற்ற பெண்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
    • மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும்.

    தெக்ரான்:

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.

    இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் கூறுகையில், "இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்" என்றார்.

    • லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.

    மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.

    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    • அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார்.
    • அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதில் சிதலமடைந்து இருந்த சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு 72 லட்சம் ரூபாய் மற்றும் விநாயகர் கோவிலுக்கு 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார். அவரை தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக வழங்கினார். பின்னர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடப்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவிலில் உள்ள திருமண மண்டபத்தை ஆய்வு செய்த அவர், மண்டபத்தை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்குவதாகவும், மேல் தலத்தில் அன்னதானத்திற்கான இடம் அமைத்தல் மற்றும் பார்க்கிங் வசதி செய்வதற்கான சிறப்பு நிதியை ஒதுக்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்

    • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
    • இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.

    சென்னை:

    தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்-நினோ கால கட்டத்தில் மத்தியப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு, மண்ணின் ஈரப்பதம் குறைவு போன்ற காரணங்களால் நிகழாண்டில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரோட்டில் 27 நாள்களும் பரமத்தி வேலூரில் 22 நாள்களும் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.

    இந்தநிலையில், மே 7-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரையும், வட தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரிக்கும், மேலும், மே வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலைவீசும்.

    பருவ காலம் போல் கோடை காலங்களில் மழை பெய்யாது. இதில் மார்ச் 1 முதல் மே 2 வரையிலான கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 50 மி.மீ. ஆகும். ஆனால், நிகழாண்டில் வெறும் 10 மி.மீ அளவுதான் மழைப்பொழிவு பதிவாகி யுள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் குறைவு. பொதுவாக மே மாதம் என்பது வெயில் காலம் என்பதால் கோடை மழை வரும்போது வெயிலின் தாக்கம் சற்று குறையும்.

    தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை காற்றுக் குவிதல் காரணமாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7-ந் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். சென்னையில் தற்போதைக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து பெண்ணை கன்னத்தில் அறைந்தார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் ஆர்மூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்று ஜீவன் ரெட்டி வாக்கு கேட்டார்.

    அப்போது ஒரு பெண்ணிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தேன் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்றார்.

    இதனை கேட்டதும் ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் அவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

    இந்த சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

    • மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.
    • இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமானது.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    இதனால், கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது. வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. மாட வீதிகள் அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அனுமன் ஜெயந்தி உற்சவம் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த மாணவி ஒருவர் 10 லட்சத்து ஆயிரத்து 116 கோவிந்த நாமங்களை பக்தியுடன் எழுதிக் கொண்டு வந்து காண்பித்தார்.

    அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வி.ஐ.பி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.

    வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. மேலும் 22-ந் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள்.ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதில் 8.08 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 39.73 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

    94.22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் சாமி உண்டியலில் ரூ.101.63 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இன்று காலையில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சாமி தரிசனத்துக்கு 12 மணி நேரமானது.

    • அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
    • மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் 2018-19-ம் ஆண்டுகளில் கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அதேபோல் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பிட்ட இரு தனியார் ஏஜென்ஸிகள் இந்த தரமற்ற மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க (என்.ஆர்.எச்.எம்.) மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்ஆர்எச்எம் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

    மருந்தாளுநர் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் ஏஜென்ஸிகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, மருந்தாளுநர் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்.ஆர்.எச்.எம் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவை அருகேயுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மருந்து, மாத்திரை கொள்முதல் செய்யும் பிரிவில் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் என்.ஆர்.எச்.எம். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளையும் அங்கிருந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

    இதையடுத்து மருந்து கொள்முதல் வழக்கு தொடர்பாக இந்திய தணிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இந்நிலையில் மத்திய தணிக்கை குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள என்.ஆர்.எச்.எம் பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த 4 நாட்களாக விசாணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய தணிக்கை குழு விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. மத்திய தணிக்கை குழுவினரின் அதிரடி விசாரணையால் புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    • முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது.
    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அதன் அடிப்படையில் பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி க டந்த 30-ந் தேதி 420 காசுகளாக முட்டை விலை மே 1-ந் தேதி 20 காசு உயர்ந்தது. பின்னர் 2-ந் தேதி 20 காசுகள் உயர்ந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது. இதனால் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது.

    இதில் முட்டை விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 60 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. கடும் வெயிலால் முட்டை உற்பத்தி குறைந்ததால் இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 550 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 124 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று மேலும் 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ ௧௨௭ ரூபாயாகவும், முட்டை கோழி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ 90 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×