search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • கடந்த வாரம் ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியதால் எல்லையை கடந்துசெல்லும் பகுதி மூடப்பட்டது.
    • ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் சிக்கிக்கொண்டனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.

    போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இதற்கிடையே, ரபா பகுதியை கடந்த வாரம் இஸ்ரேலின் ராணுவம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து காசாவின் ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், காசாவில் 20 அமெரிக்க டாக்டர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

    • அரியானாவில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், சுற்றுலா பேருந்தில் மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர் என்றும், ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றதும் தெரிய வந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.

    ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    • வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களமிறங்குகிறார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதில் பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான

    வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

    அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.

    • இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அத்துமீறல்.
    • பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் சாலையோரம் இருந்த மதுபானக் கடை அருகே கடந்த செவ்வாக்கிழமை இரவு 8 மணியளவில் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு தெருவோரமாக சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் இருந்து நபர் ஒருவர் திடீரென பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அப்போது அந்த பெண் அலறி சத்தம் போட்டதை அடுத்தும், அந்த வழியாக பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து, ராவத்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

    • தற்போது அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன.

    அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்ற சம்பங்களில் ஈடுபடுவோருக்கு அதிகமான தண்டனை வழங்கப்படுகிறது.

    கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன. இந்த நிலையில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது.

    இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "கஞ்சா (marijuana) பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது. கஞ்சாவை அணுகுவதில் தோல்வியுற்றதால், பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த தவறுகளை சரிசெய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டோவா. இந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் தான் உஸ்தியா. இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிறகு, மூதாட்டி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அந்த இளைஞர் மதுபோதையில் மயக்க நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞர் கைதை தொடர்ந்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது வீட்டின் பின்புறம் யாரோ உதவி கேட்கும் குரல் போலீசாருக்கு கேட்டது. எங்கிருந்து குரல் வருகிறது என போலீசார் தேடினர். சிறிது நேரத்தில் உதவி கேட்கும் குரல் மண்ணுக்குள் இருந்து வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அதன்பின், சம்பவ இடத்தை குழி தோண்டும் பணியில் போலீசார் இறங்கினர். அப்போது 62 வயது முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உயிருடன் புதைக்கப்பட்ட முதியவரை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரும், போலீசார் சற்று முன் கைது செய்த 18 வயது இளைஞரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தும் போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    உடனே முதியவரை கடுமையாக தாக்கிய இளைஞர் அவரை கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது மயக்கமடைந்த முதியவரை, அந்த இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் மறைத்துவைத்துள்ளார். அதன்பிறகு இளைஞர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, முதியவரை அதில் தள்ளி புதைத்துள்ளார். மது போதையில் முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நரேந்திர மோடி ஜி உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன்.
    • இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடியை என்ன வேண்டுமென்றாலும் என்னால் சொல்ல வைக்க முடியும் எனக் கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி ஜி, உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன். இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

    வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் taka-tak taka-tak taka-tak... என நான் சொன்னேன். பின்னர் பிரதமர் மோடி அவரது பேச்சில் taka-tak பயன்படுத்தினார்.

    மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதை, அதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும். அதேபோல் பிரதமர் மோடியிடம் ஏதாவது சொல்ல விரும்பவில்லை என்றாலும், நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
    • விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

    விமானத்தில் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று மாலை 6.40 மணியளவில் விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

    ஏஐ 807 என்ற விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    இதைதொடர்ந்து, பயணிகளை பெங்களூரு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

    • இந்தியா கூட்டணியை ஆதரித்து மகாராஷ்டிராவில் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம்.
    • எனக்காக வாக்கு கேட்கவில்லை. இந்தியாவை காப்பாற்றுவதற்காக மன்றாடுகிறேன் என கெஜ்ரிவால் பிரசாரம்.

    இந்தியா கூட்டணியில் இடம் பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

    நான் எனக்காக வாக்கு கேட்கவில்லை. நாட்டினை பாதுகாக்க எங்களிடம் மன்றாடுகிறேன். பா.ஜனதா வெற்றி பெறாது. ஜூன் 4-ந்தேதி வெற்றி பெற்றால் அது சுப்ரியா சுலே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேயை ஆகியோரை ஜெயிலுக்கும் அடைக்கும்.

    ஏழை மக்களுக்கு உயர்தர கல்வி வழங்க பணியாற்றியதால், சுகாதார சிஸ்டத்தை சிறந்ததாக்க முயற்சி மேற்கொண்டதால் பா.ஜனதா என்னை ஜெயிலில் அடைத்தது.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    • அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் தாக்கியதாக மாநிலங்களவை பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜனதாவை குற்றம்சாட்டியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.

    அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் தயார் நிலையில் பேரிடமர் மீட்பு குழு.

    தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் லேசாகவும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இன்று (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் வருகிற 19-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்.
    • மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்க முயற்சி.

    தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை."

    "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது."

    "இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது."

    "எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை."

    "வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது, அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×