என் மலர்
இந்தியா

ரூ.20 ஆயிரம் போதும்...எந்த வழக்கில் சிறையில் இருந்தாலும் ஜாமின்...உ.பி.யில் மோசடி கும்பல் கைது!
- இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்று தந்துள்ளது.
- கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது
கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும், அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஜாமின் பெற்றுத்தரும் மோசடி கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவும் வகையில், தொழில்முறை ஜாமின் தாரர்களாக இந்தக்குழு செயல்பட்டு வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுதந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்காக ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த வழக்கில், கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய எஸ்பி சுபோத் கவுதம், பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமினில் வெளியே உள்ளார். இதில் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்களை எழுதித் தரும் வேலை பார்த்து வந்த பிங்கு என்கிற பிரேம் சங்கர் தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமின் தரக்கூடிய நபர்களை ஏற்பாடு செய்வதிலும் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்ததாகவும், அவரது கூட்டாளியான விஸ்வநாத் பாண்டே மற்றும் பிரவீன் தீட்சித் ஆகியோர் தலா இரண்டு வழக்குகளில் ஜாமின் கையெழுத்து போட்டதாகவும், மற்ற கூட்டாளிகளான தர்மேந்திரா இரண்டு வழக்குகளிலும், பிங்கு ஒரு வழக்கிலும், அமித் மூன்று வழக்குகளிலும் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.






