என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jesus"
- சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன்.
- நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்.
சரீரத்திற்கு தேவையானவற்றை மனிதர்கள் சேமிக்கிறார்கள். ஆனால் சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன். அது நித்திய நித்திய காலம் வாழக்கூடியது என்பதை உணர முடியாமல் மனிதன் இருப்பது வருந்தத்தக்கது.
கல்வி கற்கின்ற ஒருவன் தான் வேலைவாய்ப்பு பெற, அடுத்து என்ன படிக்க வேண்டும் என கற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறான். நோய்வாய்ப்பட்ட ஒருவர், ஏற்கனவே வியாதிப்பட்டு குணமடைந்த ஒருவரிடம் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றீர்கள் என விசாரிக்கிறார்.
இப்படியாக எல்லாவற்றிற்கும் ஆலோசனை கேட்கும் நாம் மரித்தும் உயிரோடு எழுந்த இயேசுவிடம், நமது நித்திய வாழ்வுக்கான வழியை கேட்டு தெரிந்து கொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறோம்.
'மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்' (வெளி 1:18) என இயேசு கூறுகிறார்.
கடவுளிடம் வேண்டினால் விண்ணுலகை அடையலாம் என்றும், நன்மை செய்தால் மறுவாழ்வு உண்டு என்றும் பொதுவாக நம்மில் சிலர் நினைப்பது உண்டு.
ஆனால் வேத வசனத்தில் தேவன் நமக்கு ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது (1 யோவான் 5:11,12) என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது கடவுள் நமக்கு நித்திய முடிவில்லாத வாழ்வை தந்தது உண்மைதான். ஆனால் அந்த வாழ்வு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது என்றும், கிறிஸ்துவை உடையவன் ஜீவனை உடையவன் என்றும் வேதம் கூறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பொழுது, தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். குறிப்பாக செல்வச்செழிப்பான வாழ்க்கை மற்றும் வியாதி இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள், தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது உண்டு. ஆனால் இவை அனைத்தும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலான ஆசீர்வாதத்தை கடவுள் நமக்கு வைத்திருக்கிறார். அது தான் நித்திய வாழ்வு. முடிவில்லாத வாழ்க்கை. நிரந்தரமாக வாழ்கிற வாழ்க்கை. மரித்த பின்பு ஒரு வாழ்க்கையா? என நம்மில் சிலர் வாக்குவாதம் பண்ணுவது உண்டு.
ஆனால் வேதம் கூறுகிறது, "கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வான்.
என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்" (யோவான் 16.7).
"நித்திய ஜீவனை தருவேன் என்பதே அவர் நமக்குத் தந்த வாக்குத்தத்தம்" (1 யோவான் 2:25).
இந்த பூமியில் தன்னுடைய வாழ்வை காப்பாற்ற போராடுகிற மனிதன், தான் மரித்த பின்பு தன்னுடைய சரீரத்தை விட்டு பிரிகிற ஜீவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என யோசிக்க தவறி விடுகிறான்.
"ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல" என்று (லூக் 12:15) வேதம் கூறுகிறது. "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" என்று (மத்.16.26) வேதம் கூறுகிறது.
"நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோவான் 1.25) என்று இயேசு கூறுகிறார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய வாழ்வு மட்டுமல்ல, உலக ஐசுவரியங்களையும் கொடுக்க தேவன் விரும்புகிறார்.
"நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டும் என்பதே நம் தேவனுடைய விருப்பம். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்" (நீதிமொழிகள் 10-12).
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்று பிலிப்பியர் 4:20 கூறுகிறது.
எப்படி கிறிஸ்து வழியாக நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது நிச்சயமோ, அதுபோல இவ்வுலகில் நம்முடைய எல்லா தேவைகளும் கிறிஸ்து வழியாக நிறைவாக்கப்படும் என்று வேதம் கூறுகிறது.
எதை உடுப்போம்; எதை குடிப்போம் என்று கவலைப் படாதீர்கள். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:31-33) என்பதே கர்த்தருடைய வார்த்தை.
கடவுள் நமக்கு ஐசுவரியங்களைத் தருவது நிச்சயம். ஆனால் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தில் நித்தியகாலம் வாழ்கிற வாழ்க்கையை நாம் விரும்பித் தேட வேண்டும். அப்படி நாம் செய்யும் போது இவ்வுலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவையோ, அவை எல்லாவற்றையும் சேர்த்து தர அவர் வல்லமை உள்ள தேவன்.
ஒருவேளை இன்று ஏதோ ஒரு தேவையைக் குறித்து கவலையோடு இருக்கிறீர்களா? கலங்காதீர்கள். அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் எல்லா ஆசீர்வாதங்களாலும் நிரப்ப விரும்புகிறார். ஏனென்றால் அவர் உங்களை நேசிக்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட அவரை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஆமென்.
- உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது.
- நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்காக சந்தோஷப்படுங்கள்.
அன்பானவர்களே திக்கற்ற, நம்பிக்கையற்ற, மனிதர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார், `ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?. அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது" என்று கூறுகிறார். எவ்வளவு சந்தோஷமான, ஆறுதலான வார்த்தைகள் பாருங்கள்.
பிரியமானவர்களே! இந்த அன்பான, ஆறுதலான, நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்காக சந்தோஷப்படுங்கள். உங்களைப் பார்த்து, உங்களை நினைத்து, உங்களை விசாரித்து, உங்கள் எண்ணங்களை அறிந்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
இன்றைக்கு நாம் அனேக இக்கட்டான சமயங்களிலே, `எனக்கு உதவி செய்ய யாருமில்லை. உறவினர்கள் யாவரும் என்னை கைவிட்டு விட்டனர். நண்பர்கள் யாருமே என்னை நினைப்பதில்லை. என்னை யாரும் கண்டு கொள்வதில்லை. எனக்கென்று இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?' என்று புலம்புவதுண்டு.
இப்படி தனிமை சோர்வோடு, தவிப்போடு காணப்படுகிற அன்பு சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, `இயேசு உங்களை நேசிக்கிறார், இயேசு உங்களுக்கு உற்ற நண்பராய் இருக்கிறார், அவர் உங்களை தேற்றுகிறார். இயேசு ஒரு போதும் நம்மை மறப்பதேயில்லை. நம் ஒவ்வொருவரையும் அனுதினமும் அவர் நடத்துகிறார், ஒரு நொடி கூட நாம் அவரால் மறக்கப்படுவதில்லை'.
ஏன் தெரியுமா? இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் தன் சொந்த ஜீவனையே கொடுத்திருக்கிறார். ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுப்பதிலும் பெரிய அன்பு இந்த உலகத்தில் ஒன்றுமில்லை.
இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார், `நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். என் அன்பு மகனே, மகளே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை'. (ஏசா.44:21)
`தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை' ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். குழந்தையின் அசைவுகள், பார்வை மூலமாக அதற்கு என்ன தேவை என்பதை அறிவாள். நேரத்திற்கு நேரம் என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பாள். எப்போதும் தன் குழந்தையைப் பற்றிய நினைவுகளோடு தன் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருப்பாள்.
குழந்தை எப்போது அழுதாலும் உடனே அதை ஆறுதல்படுத்தி, தாலாட்டி, சீராட்டி தன் சுகம் பாராமல் அதன் தேவைகளை பூர்த்தி செய்வாள். அப்படிப்பட்ட அன்பு நிறைந்த தாய் கூட சில நேரங்களில் தன் பிள்ளைகளை மறந்து, தன் சொந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, குழந்தைகளை அனாதையாய் தவிக்க விட்டுச் செல்வதையும், அல்லது சில சூழ்நிலைகளில் தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுவதையும் செய்திகள் மூலம் அறிகிறோம். அப்படிப்பட்ட ஒரு கொடிய, அன்பில்லாத காலத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் இயேசு கூறுகிறார், `அன்பு மகனே, மகளே, தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்'. ஒருநாளும், எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மை மறப்பதுமில்லை, நம்மை விட்டு விலகுவதுமில்லை. நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து அனுதினமும் நம்மை நடத்துகிறார்.
மகா வறட்சியான காலங்களிலும் நீர்ப்பாய்ச்சல் அருகிலுள்ள மரங்கள் போல் நம்மை ஓங்கி வளரச்செய்கிறார். ஒருநாளும் அவர் கைவிடுவதே இல்லை. சில நேரங்களில் நாம் கேட்கும் காரியங்கள் தாமதமாகிறது அல்லது கிடைக்காமல் போகிறது. ஆனால் அதிலும் ஒரு நன்மை நிச்சயமாக இருக்கும். நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை, எதைத்தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்பது நம் பரம தகப்பனுக்கு நிச்சயமாக தெரியும்.
நாம் நம்பிக்கை வைக்கிற மனிதர்கள் சில நேரங்களில் நமக்கு உதவி செய்யாமல் போகலாம். சில நேரங்களில் நாம் நினைக்கலாம், `எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும், என்ன முயற்சி செய்தும் பலன் எனக்கு கிடைக்கவில்லையே. குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய் பார்க்கிறார்களே. என்னை தரக்குறைவாய் பேசுகிறார்களே, நெருங்கிப் பழகிய நண்பர்களும் என்னை விட்டு காரணமில்லாமல் விலகுகிறார்களே, என்று நீங்கள் புலம்பலாம்.
ஆனாலும் பிரியமானவர்களே, நீங்கள் படுகிற பாடுகளை, வேதனைகளை, கவலைகளை, துன்பங்களை, அவமானங்களை, பழிச்சொற்களை தேவன் அறிந்திருக்கிறார். அவர் சரியான நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் செய்வார். இயேசுவிடம் உங்கள், பிரச்சினைகளை, கவலைகளை, தேவைகளை கூறுங்கள். தேவன் ஒருபோதும் உங்களை மறக்கவே மாட்டார்.
`கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்'. (சங்.115:12)
பிரியமானவர்களே, சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து, உங்கள் மேல் தன் கண்ணை வைத்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
- இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர்.
- பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார்.
எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப்பிறப்பு, கீழ் குடிப்பிறப்பு எனும் மறைமுக யுத்தம் சமூக வெளிகளில் மட்டுமன்றி திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில திருச்சபைகளில் இது வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறைமுகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.
இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர். அதனால் தான் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், பெண்களின் சமூக அங்கீகாரம் மேம்படவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு வழங்கவும் அவர் போராடினார். அவருடைய போராட்டம் உயர்ந்தோர் என தங்களைக் கருதிக்கொள்வோரை பாராட்டுவதாய் இருக்கவில்லை. அல்லது தாழ்ந்தோராய் தள்ளிவிடப்பட்டோரை உதாசீனம் செய்வதாய் இருக்கவில்லை. `பாரபட்சம் பார்க்கவேண்டாம்' என அறைகூவல் விடுப்பதாய் இருந்தது.
அதனால் தான் அவர், `பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார், தீட்டு என ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தொட்டு சுகமாக்கினார், சமூகத்தால் விலக்கப்பட்ட வரி தண்டுவோரை தனது நெருங்கிய சீடராக மாற்றினார்'. அதேநேரம் நான் மறை நூல் வல்லுநர், நான் குருவானர், நான் உயர்ந்த பரிசேயன் என்றெல்லாம் மமதை கொண்டு திரிந்தவர்களைக் கடுமையாக சாடினார்.
யார் உயர்குடி பிறப்பு? விவிலியம் இதற்கு ஒரு அருமையான புதிய விளக்கத்தை தருகிறது.
"கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது" என்கிறது சாலமோனின் ஞானம் 8:3.
அதாவது "கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு" என்கிறது பைபிள். அப்படியானால் இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு வாழ்வது கீழ்குடி பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.
உயர்குடியும், தாழ்குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறி வாழலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியை தேர்வு செய்யலாம். இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு என்பது அவரைப்போற்றிப் பாடுவது அல்ல. அவர் தருகின்ற மேலான போதனைகளை செயல்படுத்தும்படி வாழ்வது.
`உங்கள் கனிகளைக் கொண்டே மக்கள் உங்களை அடையாளம் காண்பார்கள்' என்றார் இயேசு. கனி கொடாத பழ மரங்களால் பயன் ஏதும் இல்லை. அவை எவ்வளவு தான் செழித்து வளர்ந்தாலும் மக்களின் பசியை தணிப்பதில்லை. நமது உள்ளத்தில் இறைவனின் போதனைகள் பதியமிடப்பட்டு, செயல்களில் மனித நேயம் வெளிப்படுவதே உண்மையான உயர் குடி வாழ்வு. மனித நேயப் பணிகளே கனிகள்.
அப்படிப்பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மை இழக்கிறது.
பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்கு பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலை செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா? என்பதே முக்கியம். அதை வைத்தே அளவிடப்படுவோம் என்பது அழகான ஒரு ஆன்மிகப் பாடம்.
ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு "செடியில் நிலைத்திருக்கும் கிளைகள்" என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. கிளை தனியே நறுக்கப்பட்டால் அதற்குத் தேவையான நீரும் சத்துகளும் கிடைக்காது. அது வெயிலில் காய்ந்து விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்குத் தன்னை அர்ப்பணித்து விடும்.
ஒன்றுபட்ட வாழ்வு என்பது உடலில் இணைந்திருக்கும் உறுப்புகளைப் போன்றது. எல்லா உறுப்புகளும் ஒன்றாய் இணைந்து செயல்படும் போது தான் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். ஒன்றோடொன்று ஒன்றிக்காமல் இருக்குமானால் அது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடும். ஒன்றுபட்டு வாழும்போது தான் உடல் பல செயல்களைச் செய்ய முடியும். அப்படித் தான் நாம் இறைவனோடு ஒன்றித்து வாழவேண்டும்.
நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது 'முதல் பிறப்பு' முடிவு செய்வதில்லை, 'இரண்டாம் பிறப்பு' முடிவு செய்கிறது. இறைவனோடு இணைந்து வாழ முடிவெடுப்பதே இரண்டாம் பிறப்பு. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் நமது வாழ்க்கை முழுமையடைகிறது. அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.
- இயேசு அவரைப் பார்த்து 'அழாதீர்' என்று சொன்னார்.
- 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்றார்.
ஒரு முறை கப்பர்நாகும் என்ற ஊரில் இருந்து நயீன் என்னும் ஊருக்கு தேவன் இயேசு சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் இறந்தவர் ஒருவரின் உடலை தூக்கிக்கொண்டு வந்தனர். இறந்து போனவர் ஒரு இளைஞர். தாய்க்கு அவர் ஒரே மகன். கணவனை இழந்த அந்தப்பெண், தனது ஒரே நம்பிக்கையான மகனும் இறந்துவிட்டானே என்பதை எண்ணி அழுது கொண்டு இருந்தார்.
அப்போது இயேசு அவரைப் பார்த்து 'அழாதீர்' என்று சொன்னார். அதன் பிறகு பாடையின் அருகே சென்று, அதைத் தொட்டு 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்றார். உடனே இறந்து போன அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினார். அதன் பின் இயேசு அந்த இளைஞனை அவரது தாயிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனை பார்த்த அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றி இருக்கிறார், கடவுள் தம் மக்களைத்தேடி வந்து இருக்கிறார்' என்று கூறினார்கள்.
இந்த அற்புதமான நிகழ்வு லூக்கா நற்செய்தி 7-வது அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிறது. நான்கு நற்செய்தியாளர்களுள் லூக்கா மட்டுமே இந்த நிகழ்வைப் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது இந்த இறைவார்த்தை பகுதியை சற்று சிந்தித்து பார்ப்போம். இதனை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, இயேசு அந்தத்தாயின் மீது இரக்கம் கொண்டதால், இளைஞனைத் தொட்டு உயிர் பெறச்செய்தார், என்பது ஒரு கண்ணோட்டம்.
இரண்டாவது, அந்த இளைஞன் மீது இயேசு கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை. அந்த இளைஞன் எழுந்து விட்டால், அவனது தாயைப் பார்த்துக்கொள்வான். அவனது தாய்க்கு ஆறுதலாக இருப்பான் என்று முழுமையாக நம்பியதால், மக்கள் சூழ்ந்து இருந்த கூட்டத்தில் இருந்து நகர்ந்து, அந்த இளைஞனை வைத்திருந்த இடத்திற்குத் தேடிச்சென்று உயிர்கொடுத்தார். இவ்வாறு இரண்டு விதங்களிலும் இந்த வேதாகமப் பகுதியை சிந்தித்துப் பார்க்கலாம்.
இப்போது இந்த இறைவார்த்தைப் பகுதியை நம் நிகழ்கால வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்போம். தற்போதைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான இடைவெளி பெரிதாகி கொண்டே வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதனை சரி செய்ய ஒரு புரிதல் தேவைப்படுகிறது.
அந்த புரிதலை அனைவரும் பெறுவதற்காக, ரோம் நகரில் இருக்கிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் 2019 -ம் ஆண்டு 'கிறிஸ்து வாழ்கிறார்' என்கிற தலைப்பில் ஒரு மடலை எழுதினார். அதில் அவர், 'இளைஞர்கள் திருச்சபையின் நிகழ்காலம். இளைஞர்களின் புனித நிலமாகிய இதயத்திற்குள் செல்கிற போது உங்கள் காலணிகளை கழற்றி விட்டு செல்லுங்கள்' என்று எழுதியுள்ளார்.
இதில் அவர் சொல்கிற வார்த்தைகள் அவர் சுயமாக எழுதியதல்ல, இளைஞர்கள் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களது மனநிலையைப் புரிந்து கொண்டும், திருச்சபையின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்தும் இவ்வாறு சொன்னார்.
இது இளைஞர்கள் மீது கொண்டிருக்கிற அன்பை, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதுவே இயேசு கொண்டிருந்த பார்வை ஆகும். இந்த பார்வை நாம் அனைவருக்கும் இருக்க வேண்டும். இளைஞர்களிடம் உரையாடும் போது, நமது பழைய சிந்தனைகளைக் கடந்து, திறந்த மனதோடு இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் பலவிதமான மனக்காயங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழுகின்றனர்.
இதனால் ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். நயீன் ஊர் இளைஞனை தேடிச்சென்று புதுவாழ்வு கொடுத்த இயேசுவைப் போல, இளைஞர்களைத் தேடிச்சென்று அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு வழிகாட்டுகிறபோது, இளைஞர்கள் பெரியவர்கள் உறவில் நல்ல புரிதல் ஏற்படும். இளைஞர்களது வாழ்வில் மாற்றம் நிகழும்.
அவ்வாறு நடக்கிறபோது, 'மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்' (மத்தேயு:25:40) என்ற இறைவார்த்தை நமது வாழ்வில் நிதர்சனமாகும்.
அன்பார்ந்தவர்களே! ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் முன், இன்று நான் இயேசுவின் பார்வையில் இளைஞர்களையும், மற்ற மக்களையும் பார்த்தேனா? என்ற கேள்வியை கேட்போம். இயேசுவின் பார்வையான அன்போடும், இரக்கத்தோடும், நம்பிக்கையோடும், பொறுமையோடும் இளைஞர்களையும் இந்த சமூகத்தையும் பார்ப்போம்.
இறைவனின் சாயலாக படைக்கப்பட்ட நாம், அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் காண்போம். இறைவனின் சாயலாய் வாழ்வோம்!
- வியாதியின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்படுகிறது.
- தொழுநோயாளிகளைக் கூட ஆண்டவர் இயேசு தொட்டு சுகப்படுத்தினார்.
மனிதர்கள் வாழ்கின்ற வாழ்க்கைமுறை, வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை, நல்லவர்-கெட்டவர், பாவி-பரிசுத்தர், ஆசீர்வதிக்கப்பட்டவர்-சாபம் நிறைந்தவர் என்று வகைப்படுத்துகின்றோம்.
வியாதியும், பாடுகளும் பாவம் மற்றும் சாபத்தின் விளைவுகளே என்று உறுதியாய் நம்பிக்கொண்டிருந்த யூதர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து, 'வியாதி சாபத்தின் அடையாளம் மட்டுமேயல்ல' என்பதைப் பிறவியிலே பார்வையற்ற ஒருவரை குணமாக்கிய (யோவான் 9:1-41) நிகழ்வின் வாயிலாக மிக அருமையாக விளக்குகிறார்.
ஆண்டவர் தாம் சென்ற வழியில் பிறவியிலே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அப்போது சீடர்கள் அவரிடம் 'ரபி, இவர் பார்வையற்றவராகப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று கேட்டார்கள்.
அதற்கு ஆண்டவர் இயேசு, 'இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படி பிறந்தார்' என்றார்.
யூதர்கள் எப்போதும் துன்பம் அல்லது பாடுகளை பாவத்தோடு தொடர்புப்படுத்திப் பார்த்தனர். எங்கேயெல்லாம் துன்பம் நிகழ்ந்ததோ அங்கேயெல்லாம் பாவம் மிகுந்திருந்ததென யூதர்கள் நம்பியபடியால் இப்படி கேட்டனர். இப்படி யூதர்கள் முழுமையாக நம்புவதற்கு அன்றைக்கு அவர்களிடம் காணப்பட்ட மூன்று விதமான நம்பிக்கைகள் காரணமாக இருந்தது.
1. பெற்றோர் (அல்லது) மூதாதையரின் பாவம்: 'என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்' (வி.ப.20:5) என்ற திருவசனத்தின் அடிப்படையில் ஒருவரின் வியாதி மற்றும் பெலவீனத்திற்கு மூதாதையரின் பாவம் காரணமாக இருக்கலாமென்று நம்பினர்.
2. பிறப்பிற்கு முந்தைய பாவம்: ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பாவம் செய்யக்கூடுமென்று ரபிமார் நம்பி வந்ததாக தார்க்கும், தால்மூட் ஆகிய ஏடுகள் சான்று பகருகின்றன.
3. படைப்பிற்கு முந்தைய ஆன்மா: இது பிளேட்டோ மற்றும் கிரேக்கர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நம்பிக்கையாகும். உலகம் உருவாவதற்கு முன்னே நல்ல ஆன்மாக்களும், கெட்ட ஆன்மாக்களும் இருந்ததாகவும், இந்த ஆன்மாக்கள் தான் மனித உடலில் நுழைந்து மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றுகின்றது என்றும் யூதர்கள் நம்பினர். 'நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்'(சா.ஞா.8:20).
இப்படிப்பட்ட நம்பிக்கையில் இருந்த யூதர்களைப் பார்த்து ஆண்டவர் இயேசு "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்கிறார்.
வியாதியின் வாயிலாக கடவுளின் கிரியைகள் வெளிப்படுகிறது. வியாதி உள்ளவர்களை, பலவீனர்களை ஆண்டவர் இயேசு ஒருபோதும் பாவிகளாக, சாபம் நிறைந்தவர்களாகக் கருதியதுமில்லை; அவர்களை ஒதுக்கியதுமில்லை. அன்றைய சமூகத்தில் தீட்டு என்று கருதப்பட்டு தொடக்கூடாத நிலையில் இருந்த தொழுநோயாளிகளைக் கூட ஆண்டவர் இயேசு தொட்டு சுகப்படுத்தினார்.
'பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?' என்று பெரிய பாவியாய் கருதி, யூதர்கள் புறம்பே தள்ளிவிட்ட இந்த பார்வையற்றவர் பாவியோ, சாபம் நிறைந்தவரோ அல்ல; இவர் ஆசீர்வதிக்கப்பட்டவர், என்கிறார் ஆண்டவர் இயேசு.
கடவுள் தன் கிரியைகளை வெளிப்படுத்தும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட கடவுளின் பாத்திரம் இவர். கடவுள் தன் கிரியைகளின் வல்லமையை வெளிப்படுத்த தெரிந்தெடுத்த கடவுளின் தாசன் இவர். கடவுளின் தாசனாகிய மோசே 'இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார்' (எண்.16:28) என்கிறார்.
ஆம், கடவுளின் தாசர்களைப் போல், தீர்க்கர்கள், ஆசாரியர்கள், அரசர்கள் போல் கடவுளின் கிரியைகளை வெளிப்படுத்த கடவுளால் அழைப்பு பெற்றவர் இவர் என்று ஆண்டவர் இயேசு மிக உறுதியாகக் கூறுகிறார்.
வியாதியின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்படுகிறது. பார்வை பெற்றவரைப் பார்த்து யூதர்கள் 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து' என்றார்கள். ஆண்டவர் இயேசுவால் விடுதலை பெற்ற அனைவரும் கடவுளை மகிமைப்படுத்தியபடிச் சென்றார்கள்.
ஆண்டவர் இயேசுவின் சிநேகிதனாகிய லாசரு வியாதினிமித்தம் மரணப்படுக்கையில் இருந்த செய்தி அவருக்கு அறிவிக்கப்பட்டபோது, 'இந்நோய் சாவில் போய் முடியாது, கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்' என்றார் (யோவான்.11:4). ஆம், அவர் சொன்னபடியே லாசருவின் மரணத்தின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்பட யூதர்கள் அநேகர் அவரை நம்பினர்.
பிரியமானவர்களே, நீங்களும் ஒருவேளை கொடிய வியாதியினாலும், கடுமையான துன்பத்தினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். இந்த சமூகம் உங்களை பெரும்பாவியாக, சாபம் நிறைந்தவராகக் கருதலாம். ஆனால் நீங்கள் கடந்து செல்லும் இந்த வலி நிறைந்த பாதையின் வாயிலாகக் கடவுள் உங்களோடு இடைபடுகிறார். கடவுளின் கிரியைகள் வெளிப்படுவதற்கும், அவர் நாமம் மகிமைப்படுவதற்கும் அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்!
- ஏசுநாதரை சந்திக்க பட்டினி கிடக்கும்படி தன்னை பின்பற்றுபவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
- 15 பேர் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வந்தது தெரிந்தது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஷகா ஹோலா கிராமத்தில் உள்ளூர் போதகர் ஒருவர் தண்ணீர், உணவு இன்றி விரதம் இருந்ததால் ஏசு நாதரை சந்திக்கலாம் என்று கூறினார்.
குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் என்ற அமைப்பை நடத்தி வரும் அந்த போதகரின் பேச்சை கேட்டு பலர் அங்குள்ள காட்டுக்குள் முகாமிட்டு உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர்.
அவர்கள் பல நாட்கள் உணவு, தண்ணீர் என எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் உடல் பலவீனமடைந்து மயங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் காட்டு பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு 15 பேர் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வந்தது தெரிந்தது. இதில் 4 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர். 11 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, போதகர் பால் மக்கென்சி, இங்குள்ள மக்களிடம் சாபத்தை போக்க உண்ணாவிரதம் இருக்க சொல்லி இருக்கிறார். ஏசுநாதரை சந்திக்க பட்டினி கிடக்கும்படி தன்னை பின்பற்றுபவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
காட்டில் மேலும் பலரின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர். தலைமறைவான போதகரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது.
- வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தி லுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
இதற்கிடையே, வணிக கட்டடத்தின் 3-வது அடுக்கின் மேல் பகுதியில், 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நிறுவப்பட்டது.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இச்சிலையை அகற்ற வேண்டு மென சிலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இச்சிலை திரைச்சேலைகளால் மூடி மறைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் திரைச்சேலைகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட இயேசு சிலை திறக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகளுடன் அமைதிப்பேச்சு நடத்தினர்.
இறுதியாக, தேவாலய வணிக கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசு உருவசிலை, திரைச்சேலைக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் மூடி மறைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு இயேசு சிலையை திறக்க அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இச்சிலையை பத்தாம் பத்திநாதர் தேவாலய வளாகத்திற்குள் நிறுவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.
உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அன்பின் வெளிப்பாடு இல்லையேல் ஒரு பயனும் இல்லை. அயலானிடம் இரக்கம் காட்டுபவன் தான் உண்மையான அன்புடையவன். அன்பின் வெளிப்பாடே இரக்கம். அதை நாம் அறிந்துகொள்ளவும் உணரவும் முடியும்.
“இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்று அன்னை தெரசா தனது வார்த்தையின் படி வாழ்ந்து காட்டியவர். உலகமெங்கும் இரக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்தவர். மரணப் படுக்கையில் இருக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களை கட்டியணைத்து புன்னகை யோடு அவர்களுக்கு வேண்டியதை செய்தவர். இயேசுவின் வாழ்க்கையே, அன்னை தெரசாவுக்கு ஏழை பணி தான் தன் வாழ்வின் முதல் பணி என்று தேர்ந்தெடுக்க வைத்தது.
நீதிமொழிகள் 21:21 வசனத்தில் “நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்” என சொல்லப்பட்டுள்ளது. தன்னை தான் தாழ்த்தி தன்னலம் துறந்து வாழும் மனிதனால் தான் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட முடியும். அதுவே உண்மையான இறைபணி.
முதலாவதாக தயை உடையவர்கள் மற்றவர்களின் உணர்ச்சியை மதிப்பார்கள். வேதம் தெளிவாக சொல்கிறது “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரை சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்” (பிலிப்பியர் 2:4). தன்னலம் மறந்து பிறர் நலனுக்காக வாழும் வாழ்க்கையையே கடவுள் விரும்புகிறார்.
குறைந்தபட்சம் நாம் சந்திக்கும் மக்களிடம் ஒரு புன்னகையாவது கொடுத்து விட்டுச் செல்லலாமே. நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லி சொந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட தயவாக பேச நேரம் செலவிட மக்கள் மறந்து விடுகிறார்கள். தினமும் வீட்டில் குடும்ப ஜெபமும் அன்றைய தினத்தை பற்றிய ஒரு சின்ன பகிர்தலும் இருப்பது மிகவும் நல்லது. அது குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்ப உதவும்.
தயையுடையவர்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க தயங்க மாட்டார்கள். பல நேரங்களில் ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னாலே போதும், கவலையில் வாழும் மக்களுக்கு அந்த நிலையிலிருந்து மீண்டு வர அதுவே ஒரு வாய்ப்பாக அமையும். நம் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப உதவுகிறதா? இல்லை உடைத்து விழ செய்கிறதா என்று ஆராய வேண்டும்.
நம் கடவுள் நமக்கு எப்போதும் ஆறுதலாக இருப்பவர். அவரை பின்பற்றும் நாமும் அதை போல தான் மற்றவர்களுக்கு ஆதரவாக வாழ வேண்டும்.
2 சாமுவேல் 22:19 இப்படி கூறுகிறது: “என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்”.
சற்று சிந்தித்து பார்ப்போம், கடைசியாக எப்போது பெற்றோரிடம் ஆறுதலாய்ப் பேசினோம்?, அவர்களுடைய தேவைகளை அவர்கள் கேட்கும் முன்பே நிறைவேற்றியிருக்கிறோமா?, நம்முடன் பணி புரிபவர்களின் துயரங்களைக் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? இல்லையேல் இனிமேலாவது நம் அயலாருக்கு ஆறுதலாக கர்த்தர் கற்பித்தபடி நடப்போமா?
இரக்கமுள்ளவர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் வாழ்வார்கள். மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்து விட்டு அவருக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாக அறிந்தால் அப்படியே விட்டு விடுவதில்லை. நோயாளிக்கு வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யாமல் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதில்லை. எப்படியாவது அவரை குணப்படுத்த வேண்டும் என்று பிரயாசப்படுவார்.
அதேபோல, நல்ல நண்பர்கள் சில சமயங்களில் நம் தீய செயல்களைக் கண்டு அப்படியே விட்டு விடாமல் கடிந்து கொள்வதுண்டு. அதுவும் இரக்கத்தின் வெளிப்பாடே.
இரக்கம் என்பது எப்போதும் பணிந்து போவதல்ல, மாறாக தவறுகளை தட்டிக்கேட்டு திருத்துவது அதன் முக்கியமான சிறப்பம்சமாகும். உண்மையான நண்பன் நம் வாழ்வின் நன்மைக்காக ஏற்படுத்தும் காயங்கள் கூட நல்லது தான், ஒரு எதிரியின் முத்தத்தை விட.
காலம் தாழ்த்தாமல் பிறருடைய தேவையை அறிந்து உடனே செயல்படுவதே முக்கியம். அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு. தாமதித்தால் அந்த வாய்ப்பு கைவிட்டு போகும். இப்படி நீங்கள் இழந்த வாய்ப்புக்கள் எத்தனை?
இயேசு நம்மை பார்த்து பசியாயிருந்தேன் எனக்கு உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், தாகத்தை தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், ஏற்றுக்கொண்டீர்கள்; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக்கொண்டீர்கள் என்று சொல்லும்படியான ஒரு வாழ்க்கையை வாழ்வோம். எல்லோரையும் நேசிப்போம், இரக்கம் காட்டுவோம்.
“இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்ற அன்னை தெரசாவின் வாழ்க்கை நமக்கு ஊக்கமூட்டட்டும்.
துலீப் தாமஸ், சென்னை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
