என் மலர்
வழிபாடு

கடவுளை முழுமையாக விசுவாசிப்போம்
- ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா.
- சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு.
நம் மனித வாழ்வு விசுவாசம் என்னும் அடித்தளத்தில் தான் கட்டப்பட்டு வருகிறது. விசுவாசம் நிறைந்த வாழ்வில் அன்பும், நற்பண்புகளும், நல்ல புரிதல்களும் நிறைந்திருக்கிறது.
ஆனால், பல நேரங்களில் நம் வாழ்வில் அவிசுவாசம் மேலோங்கி காணப்படுகிறது. கற்றவர், கல்லாதவர், ஏழை, பணக்காரன் என்று எவ்வித வேறுபாடுமின்றி அனைவரிடமும் இந்த அவிசுவாசம் காணப்படுகிறது. திருமறையில் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தோமா ஆவார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா. பிலிப்புவின் மூலமாக ஆண்டவர் இயேசுவுக்கு அறிமுகமானவர். தோமா என்கிற அரமேய சொல்லின் பொருள் `இரட்டையர்' என்பதாகும். திதிம் என்ற மறுபெயரும் இவருக்கு உண்டு. இவர் இயேசு கிறிஸ்துவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வந்தார்.
இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனாகிய லாசர், பெத்தானியாவில் வியாதியாயிருக்கிறதைக் கேள்விப்பட்ட பின்பும் தாம் தங்கியிருந்த இடத்திலே இரண்டு நாள் தங்கினார். பின்னர் அவர் தம் சீடர்களிடத்தில், 'நாம் மறுபடியும் யூதேயாவுக்கு போவோம் வாருங்கள்' என்றார். அதற்கு சீடர்கள், 'ரபீ இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்கு போகலாமா' என்றார்கள்.
அப்பொழுது திதிம் எனப்பட்ட தோமா மற்ற சீடர்களை நோக்கி, 'அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்' என்றார் (யோவான் 11:16).
தோமா ஆண்டவருக்காக மரிக்கவும் துணிவதை இங்கே காணலாம். ஆண்டவர் நித்திய வாழ்வை குறித்து பேசுகின்ற பொழுது, 'நான் போகிற இடத்தை அடைந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்' என்றவுடன், தோமா அவரை நோக்கி 'ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்' என்றார் (யோவான் 14:5).
இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் ஆண்டவரோடு இணைந்து வாழ வேண்டுமென்ற மாபெரும் விருப்பத்தைக் காண முடிகின்றது.
ஆண்டவர் இயேசுவின் மீது பக்தி வைராக்கியம் கொண்டிருந்த தோமா, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிற்பாடு சந்தேகத் தோமாவாக மறு உருவெடுக்கிறார். ஆண்டவர் இயேசு, தான் உயிர்த்தெழுந்த பிற்பாடு சீடர்களுக்கு தரி சனமானார். ஆண்டவர் அவர்களுக்கு சமாதான வாழ்த்துதல் சொல்லியதோடு, தம் கைகளையும், தன் விலாவையும் அவர்களுக்கு காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள் (யோவான் 20:19).
ஆனால் ஆண்டவர் தரிசனமான இரண்டு முறையும் தோமா அவர்களுடன் இருக்கவில்லை. சீடர்கள் 'கர்த்தரைக் கண்டோம்' என்று நம்பிக்கையுடன் தோமாவிடம் கூறினார்கள். ஆனால், தோமாவோ 'அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்தில் என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே இட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்' என்றார் (யோவான் 20:25).
மூன்றாம் முறையாக தரிசனமானபோது தோமா அவர் களோடு இருந்தார். இயேசு தோமாவை நோக்கி, 'நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளை பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு' என்றார் (யோவான் 20:27).
தோமா, 'என் ஆண்டவரே, என் தேவனே' என்று அறிக்கை செய்கின்றதை காணலாம். அப்பொழுது ஆண்டவர் 'தோமாவே, நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்' என்றார் (யோவான் 20:29).
நம்பிக்கையின்மை தோமாவின் நிலைப்பாடு மட்டுமல்ல; பல சீடர்களும் அன்று அப்படித்தான் இருந்தனர். நம்பிக்கையின்மை விஷயத்தில் ஒட்டுமொத்த சீடர்களின் பிரதிநிதியாகவே தோமா இங்கு தென்படுகிறார்.
'மரியாள் சொன்ன உயிர்ப்பின் செய்தியை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:11).
'ஆண்டவர் மறுரூபமாய் தரிசனமானதை கண்டவர்கள் சொல்லியதை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:13).
'உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்தும், இருதய கடினத்தைக் குறித்தும் அவர் கடிந்து கொண்டார்' (மாற்கு 16:14).
'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1).
தோமாவின் பக்தி வைராக்கியம், மிகுந்த வாஞ்சை, அதீத பாசம் அனைத்தையும் கெடுத்து, 'சந்தேகத் தோமா' என்ற அவப்பெயரை அவருக்கு கொடுத்து விட்டது. காரணம், யூதர்கள் மீது இருந்த பயம், அன்றைக்கு நிலவிய சூழல், எதிராளிகளின் வலிமை, அவர்களுக்கிருந்த செல்வாக்கு போன்றவை ஆகும்.
கடவுளை முழுமையாக விசுவாசிப்போம். சந்தேகத்தை வேரறுப்போம். சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு. நம் வாழ்வின் சூழல்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள், வியாதியின் வேதனைகள் நம்மை சந்தேகத்திற்கு வழிநடத்தக் கூடும்.
ஆனால், நாம் முழுமையாக விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். காணாமலே விசுவாசிக்கின்ற பாக்கியவான்களாக இருப்போம். விசுவாசத்தினால் நற்சாட்சி பெறுவோம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும் (எபிரேயர் 11:6).






