search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "oppressed"

  • இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர்.
  • பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார்.

  எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப்பிறப்பு, கீழ் குடிப்பிறப்பு எனும் மறைமுக யுத்தம் சமூக வெளிகளில் மட்டுமன்றி திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில திருச்சபைகளில் இது வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறைமுகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.

  இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர். அதனால் தான் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், பெண்களின் சமூக அங்கீகாரம் மேம்படவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு வழங்கவும் அவர் போராடினார். அவருடைய போராட்டம் உயர்ந்தோர் என தங்களைக் கருதிக்கொள்வோரை பாராட்டுவதாய் இருக்கவில்லை. அல்லது தாழ்ந்தோராய் தள்ளிவிடப்பட்டோரை உதாசீனம் செய்வதாய் இருக்கவில்லை. `பாரபட்சம் பார்க்கவேண்டாம்' என அறைகூவல் விடுப்பதாய் இருந்தது.

  அதனால் தான் அவர், `பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார், தீட்டு என ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தொட்டு சுகமாக்கினார், சமூகத்தால் விலக்கப்பட்ட வரி தண்டுவோரை தனது நெருங்கிய சீடராக மாற்றினார்'. அதேநேரம் நான் மறை நூல் வல்லுநர், நான் குருவானர், நான் உயர்ந்த பரிசேயன் என்றெல்லாம் மமதை கொண்டு திரிந்தவர்களைக் கடுமையாக சாடினார்.

  யார் உயர்குடி பிறப்பு? விவிலியம் இதற்கு ஒரு அருமையான புதிய விளக்கத்தை தருகிறது.

  "கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது" என்கிறது சாலமோனின் ஞானம் 8:3.

  அதாவது "கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு" என்கிறது பைபிள். அப்படியானால் இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு வாழ்வது கீழ்குடி பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.

  உயர்குடியும், தாழ்குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறி வாழலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியை தேர்வு செய்யலாம். இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு என்பது அவரைப்போற்றிப் பாடுவது அல்ல. அவர் தருகின்ற மேலான போதனைகளை செயல்படுத்தும்படி வாழ்வது.

  `உங்கள் கனிகளைக் கொண்டே மக்கள் உங்களை அடையாளம் காண்பார்கள்' என்றார் இயேசு. கனி கொடாத பழ மரங்களால் பயன் ஏதும் இல்லை. அவை எவ்வளவு தான் செழித்து வளர்ந்தாலும் மக்களின் பசியை தணிப்பதில்லை. நமது உள்ளத்தில் இறைவனின் போதனைகள் பதியமிடப்பட்டு, செயல்களில் மனித நேயம் வெளிப்படுவதே உண்மையான உயர் குடி வாழ்வு. மனித நேயப் பணிகளே கனிகள்.

  அப்படிப்பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மை இழக்கிறது.

  பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்கு பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலை செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா? என்பதே முக்கியம். அதை வைத்தே அளவிடப்படுவோம் என்பது அழகான ஒரு ஆன்மிகப் பாடம்.

  ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு "செடியில் நிலைத்திருக்கும் கிளைகள்" என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. கிளை தனியே நறுக்கப்பட்டால் அதற்குத் தேவையான நீரும் சத்துகளும் கிடைக்காது. அது வெயிலில் காய்ந்து விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்குத் தன்னை அர்ப்பணித்து விடும்.

  ஒன்றுபட்ட வாழ்வு என்பது உடலில் இணைந்திருக்கும் உறுப்புகளைப் போன்றது. எல்லா உறுப்புகளும் ஒன்றாய் இணைந்து செயல்படும் போது தான் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். ஒன்றோடொன்று ஒன்றிக்காமல் இருக்குமானால் அது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடும். ஒன்றுபட்டு வாழும்போது தான் உடல் பல செயல்களைச் செய்ய முடியும். அப்படித் தான் நாம் இறைவனோடு ஒன்றித்து வாழவேண்டும்.

  நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது 'முதல் பிறப்பு' முடிவு செய்வதில்லை, 'இரண்டாம் பிறப்பு' முடிவு செய்கிறது. இறைவனோடு இணைந்து வாழ முடிவெடுப்பதே இரண்டாம் பிறப்பு. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் நமது வாழ்க்கை முழுமையடைகிறது. அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.

  ×