என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆறுதல் தரும் தேவனின் அன்பு
    X

    ஆறுதல் தரும் தேவனின் அன்பு

    • உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது.
    • கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார்.

    அன்றாட உலக வாழ்க்கையில் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். ஏதோ ஒரு துக்கம் நம் வாழ்க்கையில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

    வியாதியால் வரும் துக்கம், பாவத்தினால் வரும் துக்கம், குடும்ப பிரச்சனைகளால் வரும் துக்கம், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனையால் வரும் துக்கம் இப்படி ஏதோ ஒன்று நம் வாழ்க்கையில் நம்மை துக்கத்தில் நடத்திக்கொண்டு தான் இருக்கிறது.

    எல்லா துக்கங்களையும், துன்பங்களையும் இயேசு மாற்றி உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில் தேவன் எப்படி ஆறுதல் தந்தார் என்பதை இங்கே காண்போம்.

    துக்கத்தில் ஆறுதல்

    ஆதியாகமம் 24-ம் அதிகாரம் 67-ம் வசனத்தில் கூறப்படுகிறது: ஆபிரகாமின் மனைவி சாராள் மரித்து விட்டாள். அவளின் மகன் ஈசாக், தாயாரின் இறப்பால் துக்கமுகத்தோடு காணப்பட்டான் என்று வேதாகமம் கூறுகிறது. ஈசாக் ரெபெக்காளை திருமணம் செய்து கொண்ட பின் தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான் என்று வேதாகமம் சொல்கிறது.

    ஈசாக் தன் மனைவியை நேசித்து ஆறுதல் அடைந்தான். முதலாவதாக நாம் நம் குடும்பத்தை நேசிக்க வேண்டும். மனைவி, குழந்தைகள் மேல் அன்பு செலுத்த வேண்டும். அப்போது குடும்ப வாழ்க்கை ஆறுதலாக மாறும்.

    உபத்திரவத்தில் (அல்லது) வியாதியில் ஆறுதல்

    உலக வாழ்க்கையில் வியாதியும், உபத்திரவமும் பெருகிக்கொண்டே போகிறது. வியாதி இல்லாத மனிதனே கிடையாது. வேதாகமத்தில் 12 ஆண்டுகளாக உபத்திரவத்தில் வாழ்ந்த பெரும்பாடுள்ள ஸ்திரி தன் ஆஸ்தியை விற்று மருத்துவம் பார்த்தாள். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. ஒருவராலும் அவளை சுகப்படுத்த முடியவில்லை. தன் ஆஸ்திகளை இழந்தாள். தேவனைப்பற்றி அறியாத அவள் நமக்கு சுகம் தர வல்லவர் ஒருவர் இருக்கிறார் என்று அறிந்தவுடனே அவரை காண புறப்பட்டு வருகிறாள். இந்த நிகழ்வு லூக்கா 8-ம் அதிகாரம் 41 முதல் 56-ம் வரையிலான வசனங்கள் மற்றும் மாற்கு 5-ம் அதிகாரம் 25, 26-வது வசனங்களில் காணப்படுகிறது.

    யவீருவின் 12 வயது மகள் மரண அவஸ்தையில் இருக்கிறாள். அவளை காப்பாற்ற வரும்படி இயேசுவை அழைத்ததன் நிமித்தம் யவீருவின் வீட்டிற்கு இயேசு போகையில், திரளான ஜனங்கள் அவரை நெருங்கினார்கள். இயேசு வரும் செய்தியை கேட்ட பெரும்பாடுள்ள ஸ்திரி எப்படியாவது அவரைப்பார்த்து சுகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வருகிறாள்.

    இயேசுவை நெருங்கும் சமயத்தில் சீடர்கள் அவளை அதட்டினார்கள். ஆஸ்திகளை செலவழித்தும் ஒருவனாலும் சுகப்படாதிருந்த அந்த ஸ்திரி இயேசுவுக்கு பின்னால் சென்று அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். உடனே அவள் பெரும்பாடு நின்று விட்டது. (லூக்கா 8-ம் அதிகாரம் 43, 44-வது வசனங்கள்)

    வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வாக்குதத்தம் சொன்னவர் வாக்கு மாறாத தேவனாய் இருக்கிறார்.

    கண்ணீரில் ஆறுதல் தரும் தேவன்

    சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் எல்க்கானாவிற்கு 2 மனைவிகள். ஒருவள் பெனின்னாள், மற்றவள் அன்னாள். பெனின்னாளுக்கு குழந்தை இருந்தது. அன்னாளுக்கோ குழந்தை இல்லை. பெனின்னாளோ, அன்னாள் மனம் துக்கப்படும்படியாக விசனப்படுத்துவாள். அவளை மனமடிவாக்குவாள். அன்னாளோ துக்கமுகமாய் அழுது கொண்டிருப்பாள். அன்னாள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தாள். உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி எனக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று பிரார்த்தனை செய்தாள். அதன்பின் அவள் துக்கமுகமாய் இருக்கவில்லை என்று வேதாகமம் சொல்கிறது. கர்த்தர் அவள் கண்ணீரை கண்டு விண்ணப்பத்தை கேட்டு சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை மகனாக அளித்தார்.

    குழந்தை இல்லை என்று கண்ணீரோடு இருப்பவர்களே நீங்கள் கவலைப்படாதிருங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று வேதாகமம் கூறுகிறது. கர்த்தர் உங்களை காண்கிற தேவனாயிருக்கிறார். குழந்தையில்லை என்று துக்கத்தோடு இருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். தேவனை நோக்கி நம்பிக்கையோடு விண்ணப்பம் செய்யுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் தர வல்லவராயிருக்கிறார். ஆறுதல் தரும் தேவன் இன்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். ஆமென்.

    Next Story
    ×