என் மலர்
கென்யா
- மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்டது.
- எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் மொத்தம் இருந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் சம்பவ இடத்திலிருந்து கருகிய நிலையில் உள்ள விமான பாகங்களும், எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
- கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா இறுதிச்சடங்கு நடந்தது.
- அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் ரைலா ஒடிங்கா (80). உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது.
அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒடிங்காவின் மறைவு 7 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் தாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நைரோபி விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நைரோபி விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.
எனவே சில மணி நேரம் கழித்தே விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக பின்னர் மோய் கால்பந்து மைதானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் தடுப்புச் சுவரை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனவே பொதுமக்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் மக்கள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் கென்யாவில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டனர்.
நைரோபி:
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ககமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலையோரம் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்தார்.
- இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.
- 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவை தொடர்ந்து கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் ஒப்பந்தத்திற்கு கென்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழந்து உயிரிழந்தார்
- ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்தார்.
வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது முன்னாள் காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் இருந்த நிலத்தகராறு காரணமாக வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் வீராங்கனை ரெபேக்காவின் உடல் நேற்றைய தினம் கென்யாவில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கென்ய நாட்டின் எல்லையில் உள்ள நகரத்தில் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் உகாண்டாவை சேர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ரேபாகாவின் காதலிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.
- ஜோமோ கென்யாட்டா விமானநிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.
- இந்த விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
நைரோபி:
கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது.
இந்த விமான நிலையத்தை அடுத்த 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் விமான நிலையத்தின் 2-வது ரன்வே மற்றும் புதிய பயணிகள் முனையத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப் புதுப்பிக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவில் உள்ள விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இந்த ஒப்பந்தத்திற்கு கென்ய ஜனாதிபதி வில்லியம் ருட்டோ ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நைரோபியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பயணிகள் நீண்ட நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.
- மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைரோபி:
கென்யா நாட்டில் உள்ள நெய்ரி மாகாணத்தில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர் விடுதியில் பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
- கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.
தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒப்பு கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உலகளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் கென்யா நாடாளுமன்ற போராட்டத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஔமா ஒபாமா (Auma Obama) கலந்து கொண்டுள்ளார்.
போராட்டம் தொடர்பாக பேசிய அவர், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள், இதனால் தான் இங்கு வந்துள்ளேன். இளம் கென்யர்கள் தங்களது உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். என்னால் இப்போது கூட கண் திறந்து பார்க்க முடியவில்லை. எங்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்று தெரிவித்தார்.
கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழப்பு.
- இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து ஒரு பகுதிக்கு தீவைத்தனர்.
கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான நிதி மசோதாவை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது.
கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வந்து நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
திடீரென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீவைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழந்தனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில உயிரிழப்பு நடைபெற்றது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
- மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
- 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களை ரசிக்க செய்யும். அந்த வகையில் யூ-டியூபில் 'லேட்டஸ்ட் சைட்டிங்ஸ்' என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றை கடந்த காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.
அந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வன பகுதிக்குள் ஒரு ஆறு கடந்து செல்கிறது. வனப்பகுதியில் 3 சிங்கங்கள் நடந்து வரும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
அப்போது ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்வதற்காக சிங்கங்கள் வரிசையாக வருகின்றன. பின்னர் ஆற்றில் குதித்து சிங்கங்கள் நீச்சல் அடித்தவாறு மற்றொரு கரையை கடந்து செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
- வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது.
- வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. எனவே லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது. இதனால் அந்த அணையின் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றது.
எனினும் கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனினும் இந்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.






